இலங்கை மக்களை பாதித்துள்ள சிறுநீரக செயலிழப்புக்கான முக்கிய காரணம் என்ன?படித்துப்பாருங்கள்!

இலங்கை மக்களை பாதித்துள்ள சிறுநீரக செயலிழப்புக்கான முக்கிய காரணம் என்ன?படித்துப்பாருங்கள்!

இன்றைய காலகட்டத்தில் இலங்கையின் பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் முகம் கொடுத்திருக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றுதான் சிறுநீரகப் பாதிப்பாகும். குறிப்பாக வடமத்திய மாகாணத்திலுள்ள அநுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களிலும், இம்மாவட்டங்களுக்கு அருகிலுள்ள புத்தளம், வவுனியா, குருநாகல் ஆகிய மாவட்டங்களின் சில பிரதேசங்கள் அடங்கலாக நாட்டின் மேலும் சில பிரதேசங்களுக்கும் இப்பாதிப்பு வியாபித்திருக்கின்றது.

உயிராபத்து மிக்க இப்பாதிப்பு முன்னொரு போதுமே இல்லாத அளவுக்கு ஏற்பட்டிருப்பதானது, பல்வேறு மட்டங்களினதும் அவதானத்தைப் பெற்றுள்ளது. அதனால் இதற்கான காரணம் என்ன? அதனை எவ்வாறு தவிர்த்துக் கொள்ளலாம் என்றபடி பல மட்டங்களிலும் ஆய்வுகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறான சூழலில் இந்தப் பாதிப்பு தொடர்பில் ஆயுர்வேத மற்றும் சித்த வைத்திய முறைமைகளின் பார்வை எவ்வாறானது என்பது குறித்து அறிந்திருப்பது பயன்மிக்கதாகும்.

மனித உடலானது, பல்வேறு அவயவங்களைக் கொண்டவை. அவை ஒவ்வொன்றும் அவற்றுக்குரிய பணிகளை மிகக் கனகச்சிதமாகச் செய்து கொண்டிருக்கின்றன. அவ்வாறான உறுப்புகளில் ஒன்று தான் சிறுநீரகம். இது மனிதனுக்கு மிக முக்கியமான உடல் அவயவமாகும். இந்த உறுப்பு மனிதனின் உயிரைக் காக்கும் மிக முக்கிய பணியைச் செய்து வருகின்றது. இந்த அவயவம் இன்றி எவரும் உயிர் வாழ முடியாது. அதில் ஏதாவது பாதிப்பு எற்பட்டால் அது உயிருக்கே ஆபத்தாக அமைந்து விடும்.

அவ்வாறு முக்கியத்துவம் பெற்று விளங்கும் சிறுநீரகமானது, மனித உடலில் சேருகின்ற கழிவுப் பொருட்களை வெளியேற்றும் முக்கிய பணியை ஆற்றிக் கொண்டிருக்கின்றது அதாவது குருதியில் சேரும் கழிவுப் பொருட்களில் பெரும்பாலானவை பலவித இரசாயன மாற்றங்களுக்கு உள்ளாகி சிறுநீர் ஊடாகவே வெளியேற்றப்படுகின்றன.

 குருதியைச் சுத்திகரிப்பதன் ஊடாக இப்பணியை மேற்கொள்ளும் சிறுநீரகம், மனித உடலுக்கு புத்துணர்வை அளிக்கின்றது. அத்தோடு இரத்த அழுத்தம் போன்ற பல தாக்கங்களைக் கட்டுப்படுத்தக் கூடிய பண்பையும் சிறுநீரகம் கொண்டிருக்கின்றது.

மனிதன் பிறப்பிலேயே இரண்டு சிறுநீரகங்களைக் கொண்டவனாகவே பிறக்கின்றான். அவை மனிதனின் அடிவயிற்றுக்கு பின்புறமாக முள்ளந்தண்டுக்கு அருகில் இரு பக்கங்களிலும் அமைந்திருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் சுமார் 150 கிராம் எடையைக் கொண்டவையாக இருக்கும்.

இச்சிறுநீரகத்தை இரத்தம் ரீனல் தமனி ஊடாக அடைகின்றது. குருதித் தமனி பல கிளைகளாக நுண்ணிய குருதிக்குழாய்கள் கொண்டுள்ளது. இவற்றின் ஊடாக சிறுநீரகத்தை அடையும் குருதி சுத்திகரிப்பு செய்யப்பட்டு அதிலுள்ள கழிவுப்பொருட்கள் சிறுநீர் ஊடாக வெளியேற்றப்படுவதோடு, தூய்மைப்படுத்தப்பட்ட குருதி மீண்டும் ரீனல் சிறைகள் மூலம் உடலுக்கு வழங்கப்படுகின்றது. இது எப்போதும் இடம்பெறும் நிகழ்வாகும்.

இப்பணியின் நிமித்தம் சிறுநீரகத்திலுள்ள நெப்ரோன்கள் முக்கிய பங்களிப்பை நல்குகின்றன. இந்த நெப்ரோன்கள் உரோமத்தை விட மிகவும் நுண்ணிய குழாய்கள். இருந்தும் ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் நெப்ரோன்களைக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு மனித உயிர் வாழ்வுக்கு தேவையான நெப்ரோன்கள் உடலில் இரு மடங்கு காணப்படவும் செய்கின்றன. அதன் பயனாகத் தான் ஒரு சிறுநீரகம் செயலிழந்தாலும் மற்றொரு சிறுநீரகத்தின் உதவியோடு மனிதனால் உயிர் வாழ முடிகின்றது.

இந்த நெப்ரோன்கள்தான் குருதியில் காணப்படும்அ மனித உடலுக்கு ஒவ்வாத இரசாயனக் கழிவுகளை வெளியேற்றவும், உடலுக்குத் தேவையான இரசாயனப் பொருட்களை உடலில் சேர்க்கவும் துணைபுரிகின்றது.

இவ்வாறு மகத்துவம் மிக்க பணியில் ஈடுபட்டிருக்கும் சிறுநீரகம் பாதிக்கப்படுவது அண்மைக் காலமாக பெரிதும் அதிகரித்துள்ளது. இதற்கு பல காரணங்கள் துணைபுரிவதாகக் கூறப்படுகின்றது. எனினும் உகப்பற்ற இரசாயனங்கள் தான் சிறுநீரகப் பாதிப்புக்கு அடிப்படைக் காரணமாக இருக்க முடியும்.

என்றாலும் நாட்பட்ட சிறுநீரகப் பாதிப்புக்கு தண்ணீர்தான் காரணமென பலமாகக் கூறப்படுகின்றது. ஆனால் இந்தப் பிரதேசங்களில் வாழும் மக்கள் காலாகாலமாக இப்பிரதேச நிலக்கீழ் நீரைத்தான் பருகி வாழ்ந்து வந்தனர். அப்போது இவ்வாறான பிரச்சினைக்கு அவர்கள் முகம் கொடுக்கவில்லை. அப்படியென்றால் இப்போது இப்பிரச்சினை தலைதூக்குவதற்கு காரணம் என்ன என்பதை ஒரு தரம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அந்தவகையில் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதனைப் பாதுகாக்க வேண்டும் என்ற போர்வையில் விவசாய நிலங்களுக்கு அண்மைக் காலமாகப் பாவிக்கப்படும் இரசாயனப் பசளைகளும், கிருமிநாசினிகளும், களைகொல்லிகளும் தான் இப்பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் என்பதில் ஐயமில்லை. பசளை, கிருமிநாசினி, களைகொல்லி என்ற போர்வையில் எம்மை நச்சுப் பொருட்களை உண்ணவும் பருகவும் செய்திருக்கின்றன பல்தேசியக் கம்பனிகள்.

இந்நடவடிக்கையின் ஊடாக அக்கம்பனிகள் தான் நேரடியாகவும் மறைமுகமாகவும் நன்மை அடைந்து வருகின்றன. அதாவது பசளை, களைகொல்லி, கிருமிநாசினி என்பவற்றின் மூலம் நேரடியாக இலாபம் ஈட்டுவது போன்று அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படுகின்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவென மருந்துகளை உற்பத்தி செய்தும் அந்நிறுவனங்களே நன்மை அடைந்து வருகின்றன. இந்த உண்மையை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதேநேரம் விவசாய உற்பத்தியைப் பெருக்கவும், வண்டுகள், பூச்சிகள். களைகளை கட்டுப்படுத்தவுமென அளவுக்கு அதிகமாக நச்சு இரசாயனப் பதார்த்தங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதன் விளைவாக அவை உடனடி நன்மைகளை அளித்த போதிலும், எமது நிலக்கீழ் நீரிலும் அந்த நச்சுப் பதார்த்தங்கள் நாம் பருகும் நீரையும் பாதித்துள்ளன. இதுதான் வலுவான உண்மை. இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது இலகுவான காரியமல்ல. அதற்குப் பல தசாப்தங்கள் எடுக்க முடியும். அத்தோடு இரசாயனப் பதார்த்தங்களைப் பாவித்து உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களிலும் அவற்றின் செல்வாக்கு இருக்கவே செய்யும்.

ஆகவே இரசாயனப் பசளைகளதும், நச்சுக் கிருமிநாசிகளினதும், களைகொல்லிகளினதும் உண்மை முகத்தை அறிந்து கொள்வதில் அதிக கவனம் செலுத்துவதோடு, உணவு உற்பத்தியைப் பெருக்கவென எமது மூதாதையர் பயன்படுத்திய முறைமைகள் குறித்தும் நோக்க வேண்டும். அப்போது இயற்கைப் பொருட்களைக் கொண்டு உணவு உற்பத்தியைப் பெருக்குவதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். அது உடலாரோக்கியத்திற்கும், குறிப்பாக சிறுநீரகங்களுக்கு சிறந்த பாதுகாப்பாகவும் இருக்கும்.

ஆயுர்வேத
வைத்தியர் அப்துல் கபூர்…
விஜிதபுர, கலாவெவ 

Leave a Reply