நயினை ஸ்ரீ  நாகபூஷணி  அம்மனின்  வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய திருவிழாக்களின் வீடியோப் பதிவுகள் இணைப்பு!

நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய திருவிழாக்களின் வீடியோப் பதிவுகள் இணைப்பு!

தீவகத்தில் அமர்ந்திருந்து அருள் பாலிக்கும்-   நயினை ஸ்ரீ  நாகபூஷணி  அம்மனின்  இவ்வாண்டுக்கான உயர்திருவிழா கடந்த  25.06.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று  கொடி யேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 15 தினங்கள் திருவிழாக்கள் நடைபெற்று நிறைவடைந்தது.

அல்லையூர் இணையத்தினால்,பதிவு செய்யப்பட்ட-

கொடியேற்றம்

8ம் திருவிழா

கருடபூஜை

சப்பறம்

தேர் 

தீர்த்தம்

ஆகிய  முக்கிய திருவிழாக்களின் முழுமையான வீடியோப் பதிவினை கீழே  இணைத்துள்ளோம்.




அகில உலகமெல்லாம் நிறைந்து நின்று உயிர்கள் எல்லாம் உய்யும் வண்ணம் அருள் சுரந்து காப்பவள் அன்னை. அன்னை வழிபாடு தான் சக்தி வழிபாடு. இச்சக்தி வழிபாடு மிகவும் பழைமை வாய்ந்தது. சக்தி வழிபாடு மிகவும் புராதன காலத்திலிருந்தே உலகமெல்லாம் பரவி வந்துள்ளது. அன்னை பராசக்திதான் சக்திகளுக்கெல்லாம் ஊற்றாக விளங்குகின்றாள்.

காஞ்சியில் காமாட்சியாகவும் காசியில் விசாலாட்சியாகவும் மதுரையில் மீனாட்சியாகவும் பல திருநாமங்களைக்கொண்ட சக்தியானவள் நயினையில் புவனேஸ்வரியாகவும் வீற்றிருந்து அருளாட்சி செய்து வருகின்றாள். வேண்டுவார்க்கு வேண்டியதை அருளுகின்ற காரணத்தால் சக்தியானவள் அகில உலகங்களுக்கெல்லாம் அன்னையாக, தாயாக விளங்குகின்றாள்.

கடலும் கடல் சார்ந்த நிலமுமாக விளங்குவது நயினாதீவு. யாழ்ப்பாணக் குடாநாட்டின் சப்த தீவுகளின் நடுவே சரித்திரப் பிரசித்தி பெற்ற தீவாக விளங்குவதும் இத்தீவாகும். கடுகு சிறி தெனினும் அதன் காரம் பெரிதென்ற முதுமொழிக்கிணங்க நயினாதீவு அளவாற் சிறியதெனினும் தொல்பு கழால் தலை சிறந்த தீவாக விளங்குகின்றது.

 

இத்தீவுக்குப் பல சிறப்புப் பெயர்கள் உண்டு. நாகதீவு, நயினாதீவு, நாகநயினாதீவு, மணிபல்லவத்தீவு, மணித்தீவு, பிராமணத்தீவு, நாகேஸ்வரம் எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த பெருமையுடையதும் இத்தீவாகும். மணிமேகலாத் தெய்வம் இத்தலத்திற்கு விஜயம் செய்த போது மணி பல்லவமாக இருந்திருக்கின்றது. சக்தி பீடமாகத் திகழ்வது ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோயிலாகும். சக்திபீடங்களுள் இது ஒன் றே இலங்கையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் இவ்வாலயத்தைப் போன்றுதொன்மையும் புகழும் வாய்ந்த சக்திபீடம் வேறொன்றில்லை எனலாம். தனது அளவில்லாத கருணையினாலேஉலகிலுள்ள உயிர்வர்க்கங்களை அரவணைப்பவள் அன்னை ஸ்ரீ நாகபூஷணி. “பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து…’ திருவருள் பாலித்தும் பலவித அற்புதங்களைப் புரிந்து கொண்டும் நயினையம்பதியில் வீற்றிருக்கின்றாள் அன்னை ஸ்ரீ நாகபூஷணி. அழகுக்கொருவரும் ஒவ்வாத வல்லியாக அன்பர் என்பவர்க்கு நல்லன எல்லாம் தருபவளாக அடியார்களுக்கு நேசக்கரங்களை நீட்டி நிம்மதி தருகின்றாள் அன்னை. அடியார்களின் கண்ணீரைக் காணிக்கையாக ஏற்று நெஞ்சக் கனகல்லை உருகச் செய்கின்றாள்.

” நாக சாந்தி’ செய்வதன் மூலம் நாகதோஷம் நீங்குகின்றது என்ற நம்பிக்கை அடியார்களுக்குண்டு. அடியார்கள் பலர் தங்கள் நேர்த்திக்கடனாக நாகசாந்திசெய்வதற்கு நயினையம் பதிக்கு வரு கின்றார்கள். நாகதோஷத்தை நிவர்த்தி செய்து பிள்ளைப் பேறடைந்தவர்கள் பலர். பிள்ளைப் பாக்கியம் பெற்றவர்கள் தங்கத்தால் தொட்டிலும் பிள்ளையும் செய்து அம்பாளுக்குக் கொடுத்து நேர்த்திக் கடன்களை நிறைவு செய்கின்றனர். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும்சிறப்புகளைக் கொண்டமைந்த நாகபூஷணி அம்பாள் பயபக்தியுடன்வழிபடக்கூடிய வழிபா
ட்டுக்குரிய தெய்வமாகவும் சிறப்புற்று விளங்குகின்றாள்.

மூலஸ்தானத்தில் அம்பாள் உருவம் போல இருப்பது பழைய நாகபிரதிஸ்டை என்பது ஆராய்ச்சியாளரின் கருத்தாகும். இதற்குப் பின்புறத்தில் ஐந்து தலை நாகப் பிரதிஷ்டை காணப்படுகின்றது. இது மிகவும் பழைமையானது. தூய்மையான நாக வழிபாடு இவ்வாலயத்தில் பழங்காலத்திலிருந்தே நடைபெற்று வருவதை அறியக்கூடிய தாகவுள்ளது. இக்காரணங்களைக்கொண்டு இவ்வாலயம் நாகவழிபாட்டின் தொன்மையான கருவூலமாக இருந்திருக்கின்றது என்பதை அறியலாம். இந்த வகையில் அம்பாளைத்தரிசித்து நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்காக நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் நயினையம் பதிக்கு வருகின்றார்கள். அலைகடலில் நீந்தி அருட் கடலை நாடி வருகின்ற அடியார்களின் துன்ப துயரங்களையெல்லாம் நீக்கியருளுகின்றாள் அன்னை.

சாந்தியும் அருளும் அனுக்கிரகமும் நிறைந்த அற்புத நாயகியாகி நாகபூஷணியை அனுபூதியாளர்கள் தங்கள் இதயத்தில் இருத்தி தினமும் பூஜித்து வருவதனால் ஆன்ம பலம் பெறுகின்றனர். அம்பிகையின் வருடாந்த உற்சவம் ஆரம்பித்திருக்கும் இவ்வேளையில் அம்பிகையின் சரித்திர சான்றுகளையும் இங்கு குறிப்பிடுவது அடியார்களுக்கு பயனுள்ளதாக அமையும். நயினாதீவின் வட திசையிலுள்ள புளியந்தீவிலிருந்து ஒரு நாகபாம்பு தினந்தோறும் கடல்மார்க்கமாகப் பூக்களைஎடுத்து வந்து அம்பாளுக்கு பூஜிப்பது வழக்கம். இப்படியாக ஒரு நாள் பூவைஎடுத்துக்கொண்டு நீந்தி வருவதைக்கண்ட கருடப் பறவை ஒன்று நாகபாம்பைக் கொல்வதற்காக வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. இதனால் பயங்கொண்ட நாக பாம்பு கடல் நடுவே உள்ள கல் ஒன்றினைச் சுற்றிக்கொண்டிரு13407262_465856370286726_104810678392157306_nந்தது. கருடனும் எதிரேயுள்ள கல் ஒன்றின் மீது அமர்ந்து கொண்டது. இச்சந்தர்ப்பத்தில் கடல்வழியாக வணிகன் ஒருவன் மரக்கல த்தில் பண்டங்களை ஏற்றி வந்த போது இக்காட்சியைக் கண்டான். பாம்பின் மீது இரக்கங்கொண்டு நாகபாம்பைக் கொல்ல வேண்டாமென கருடனை வேண்டிக் கொண்டான். அதற்கு கருடன் நீ உனது செல்வங்களையெல்லாம் கொண்டு வந்து அம்பிகைக்கு கோவில் கட்டுவதாக உறுதியளித்தால் நான்நாகத்தைக் கொல்லாது விட்டு விடுவேன் என்றது. வணிகனும் அவ்வாறே உறுதியளிக்க கருடனும் நாகத்தைக் கொல்லாது விட்டுவிட்டது. நாகமும் தனது நன்றியைச் செலுத்தி நயினா தீவுக்குச் சென்று அம்பிகையைப் பூஜித்தது. வணிகனும் தனது நாட்டுக்குச் சென்று நடந்தவற்றையெல்லாம் தன்மனைவியிடம் கூறினான். இருவரும் நித்திரை செய்யும் போது பேரொளி ஒன்று தோன்றி அவர்களது கண்களைக் கூசச் செய்தது. பின்பு அவர்கள் எழும்பிப் பார்த்த போது நாகரத்தினக் கற்கள் அவ்வறையில் இருப்பதைக் கண்டார்கள். நயினாதீவிலுள்ள அம்பிகையின் திருவருளை நினைந்து வியப்புற்று நயினாதீவுக்கு யாத்திரை செய்து வட கிழக்குக் கடற்கரையில் நாகம்மாளுக்கு ஓர் ஆலயம் கட்டுவித்தார்கள்.

“நயினாப்பட்டர்’ என்னும் பிராமணக் குருவைப் பூசகராக நியமித்தார்கள். இக்கதைக்குச்சான்றாக இப்பொழுதும் அம்பிகை ஆலயத்தின் வட கடலில் “பாம்பு சுற்றிய கல்’, “கருடனிருந்த கல்’ என இரண்டு கற்கள் காணப்படு கின்றன. அடியார்கள்இக்கற்களை வழிபாடு செய்து சரித்திரசான்றுகளை நினைவுபடுத்துகின்றனர். பதினோராம் திருவிழாவின் போது இக்கற்கள் இரண்டிற்கும் விசேட பூஜைகளும், தீபாராதனைகளும் வழிபாடுகளும் இடம்பெற்று வருகின்றது. இந்த வழிபாட்டின் போது குறித்த இடத்தில் கருடப் பறவைகள் வானத்தில் வட்டமிட்டுச் செல்வதாகவும் அடியார்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.இப்பெருமை வாய்ந்த ஆலயத்தை முன்னொருபோது போர்த்துக்கேயர் இடித்துத் தரைமட்டமாக்கியதாக வரலாறுகளில் கூறப்படுகின்றது. இவர்களது இக்கொடிய செயலைக் கண்ட சைவ நன்மக்கள் அனலிடைப்பட்ட புழு போலத் துடியாய்த் துடித்தனர். ஆலயத்திலுள்ள பொருட்களை அன்னியர் தீண்டக் கூடாதெனக் கருதிய சைவ நன்மக்கள் அவற்றை வெவ்வேறிடங்களில் மறைத்து வைத்தார்கள்.

மேற்குகடற்கரையிலுள்ள ஆலமரப் பொந்தினுள் அம்மனை வைத்து வழிபட்டு வந்தனர். அன்னியர் இக்கோயிலை அழித்த போது கோயில் தேர் தானாகவே உருண்டு கடலில் ஆழ்ந்து விட்டதாம். பௌர்ணமி தினங்களில் தேர்முடி கடலில் தெரிவதாகவும் சரித்திர வரலாறுகள் கூறுகின்றன. ஆண்டு தோறும் ஆனிமாதம் பிறந்துவிட்டால் நயினையம்பதி ஸ்ரீ நாகபூஷணி அம்மனுடைய மகோற்சவ நினைப்பு சைவ நன்மக்களுக்கு வந்துவிடும். அடியார்கள் நித்தம் நித்தம் கூடி நின்று மணியோசையால் தங்கள் கவலைகள் எல்லாம் மறக்கச் செய்யும் அம்மன் ஆலய உற்சவம் என்றால் மிகையாகாது. உலகமெல்லாம் வாழுகின்ற சைவ நன்மக்கள் எல்லோரும் கரங்குவித்து வரம்வேண்டி நிற்கும் உற்சவகாலம் பக்தர்களின் வேண்டுதல்களை ஏற்று அவர்களின் நேர்த்திக் கடன்களைப் பூர்த்தி செய்து அருள்மாரி பொழியும் உற்சவம். அடியார்களுக்கு அருள்சுரந்து கொண்டு நயினையம்பதியில் வீற்றிருக்கும் அம்பிகை “அமுதசுரபியில்’ அன்னபூரணியாக நின்று அமுது சுரக்கின்றாள்.

அம்பிகையின் உற்சவ காலங் களில் அம்மன் வீதிகள் எங்கும் விழாக்கோலம் பூண்டு,புனித நகராகக் காட்சி தரும் எந்தப் பக்கம் சென்றாலும் அம்பாளுக்கு அரோகரா! அரோகரா எனக் கோஷங்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கும். அழகுக்கொருவரும் ஒவ்வாத வல்லியாக விளங்குகின்ற நாகபூஷணி அம்பாள் ஐந்துதலை நாகத்தில் பவனி வருகின்ற காட்சி தேவலோகக் காட்சி.மஞ்சத்தில் எழுந்தருளி பவனி வருகின்ற காட்சி அடியார்களை மெய்சிலிர்க்க வைக்கும். கைலாச வாகனத்தில் பவனி வருகின்ற காட்சியைக் காணக்கண்கள் கோடி வேண்டும். தேரில் உலாவரும் காட்சியைக் காணும் அடியார்கள் பெரும் பேறு பெற்றவர்கள். கண்ணீரைச் சொரிய வைக்கின்ற இவ்வற்புதமான காட்சிகள் அடியார்களுக்கு உணர்வு பூர்வமானவையாகும். நயினையம்பதியில் வீற்றிருந்து தன்னை நா13346583_465856316953398_3565242169184174925_nடி வரும் அடியார்களையெல்லாம் வரவேற்று வேண்டியவற்றை வேண்டியவாறு கொடுத்து அருள்மழை பொழிகின்றாள். நயினையில் “இந்திரலோகம்’ எனக் கூறக்கூடிய வகையில் அன்னையின் ஆலயம் சிறப்புற அமைந்துள்ளது.

நயினையம்பதியில் அடியார்கள் கூட்டம் உற்சவ காலங்களில் மட்டுமல்லாது ஏனைய காலங்களிலும் அலைமோதும். அலைகடலில் நீந்தி அருட்கடலை நாடி வந்து அம்பிகையின் முகப்புற கோபுரத்தைக் கண்டவுடன் அடியார்கள் “அரோகரா’”அரோகரா’ எனக் காதலாகிக்கசிந்து கண்ணீர் சொரிகின்றனர். இவ்வாறு வந்த அடியார்களுக்கு வேண்டிய வரங்களை வழங்கித் துன்ப, துயரங்களையெல்லாம் போக்கி அடியவர்களின் உள்ளங்களில் உறுதியான இடம்பெற்று அரவணைப்பாள் அன்னை நாகபூஷணி. அன்னதானம்: நாள்தோறும் நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்திற்கு வருகின்ற அடியார்களுக்கு அமுதூட்டும் அன்னபூரணியாக நாகபூஷணி அம்பாள் திகழ்கின்றாள். இன்று இலங்கையில் நாள் தோறும் “அன்னதானம்’ நடைபெறும் திருத்தலங்களில் ஒன்றாக நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயம் விளங்குகின்றது எனலாம்.

இன்று வரை தொடர்ந்து தினந்தோறும் நித்தியஅன்னதானப் பணி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அமுதசுரபியில் அன்னதானம்: நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளை ஆண்டுதோறும் நடைபெறும் உயர் திருவிழாக் காலங்களில் தரிசிக்க வருகின்ற பல்லாயிரக்கணக்கான அடியார்களுக்கு அன்னதானப் பணியைக் கடந்த ஐம்பத்தாறு ஆண்டுகளாகச் சிறப்புடன் ஆற்றி வருகின்றார்கள் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அமுதரபி அன்னதான சபையினர் இப்பெரும் பணி 1960 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. நயினையம்பதியில் வீற்றிருக்கும் அம்பிகை அமுதசுரபியில் அன்னபூரணியாக நின்று அமுது சுரக்கின்றாள். அமுதசுரபியில் அள்ள அள்ளக் குறையாமல் அமுது சுரந்து கொண்டேயிருக்கின்றது. இப்பெரும் அன்னதானப் பணியை சிறந்த முறையில் அமுதசுரபி அன்னதான சபையினர் செய்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு கஷ்டங்களின் மத்தியிலும் இதற்கான நேரத்தை ஒதுக்கி பொழுதைப் பொன்னாக்கி அமுத ரபியின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் பாடுபட்டு வரும் அமுத சுரபியின் உறுப்பினர்களைப் பாராட்ட வேண்டும். இவ்வாண்டுக்கான உயர்திருவிழாவுக்கு வருகை தருகின்ற பல்லாயிரக்கணக்கான அடியார்களுக்கும் சிறந்த முறையில் அன்னதானம் வழங்க வேண்டிய ஒழுங்குகளையும் செய்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இற்றைக்குப் பல வருடங்களுக்கு முன்னர் பல மணித்தியாலங்களைச் செலவழித்தே நீண்ட பெரும் கடற்பரப்பைத் தாண்டி அடியார்கள் அன்னையைத் தரிசிக்க வேண்டியிருந்தது. ஆனால் இன்றோ யாழ்ப்பாணத்திலிருந்து காலையில் புறப்பட்டால் குறிகாட்டுவான் வரை வாகனத்தில் வந்து பத்து, பதினைந்து நிமிட கடற்பிரயாணத்துடன் நயினாதீவுக்கு வந்துசேர்ந்துவிடலாம். அன்றைய தினமே அடியார்கள் தம் வழிபாட்டை முடித்துக்கொண்டுதிரும்பிச் செல்லக் கூடியதாக உள்ளது. அந்தளவிற்கு பிரயாணம் சுருங்கிவிட்டது. நாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்பட்டு மக்கள் எல்லோரும் நிம்மதியோடும், சகல நலன்களோடும் வாழ அருள் புரிய வேண்டி எல்லாம் வல்ல நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளைப் பிரார்த்திப்போமாக!

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux