வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகளத் தொடரில் 12 வயது பெண்கள் பிரிவு உயரம் பாய்தலில் நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட வித்தியாலயத்தை பிரதிநிதித்துவம் செய்த எஸ்.துயாளினி தங்கப் பதக்கத்தையும் வர்ணச் சான்றிதழையும் கைப்பற்றினார்.
இந்தப் பாடசாலையில் வரலாற்றில் அதற்குக் கிடைத்த முதலாவது தங்கப்பதக்கம் இதுவே.
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகளத் தொடர் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று ஆரம்பமாகியது.
இந்தத் தொடரின் முதல் நாள் நிகழ்விலேயே நயினாதீவு ஸ்ரீ கணேச கனிஷ்ட வித்தியாலயத்தின் வரலாற்று அடைவு பதிவானது.
இது தொடர்பாக எஸ். துயாளினி கருத்துத் தெரிவிக்கையில், ‘‘எனது குடும்பம் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள குடும்பமாகும்.
எனது அப்பா கடற்றொழிலை பிரதான தொழிலாக கொண்டுள்ளார். இதனால் பயிற்சிக்காக பயன்படுத்தும் பாதணிகள் எதுவுமின்றியே எனது பயிற்சியை தொடர்ந்துள்ளேன்.
இது தவிர உய ரம் பாய்தல் மெத்தை எமது பாடசாலையில் இல்லை. மாகாண மட்டப் போட்டியில் முதன் முறையாகத்தான் மெத்தையில் பாய்ந்துள்ளேன்.
இது எனக்கு புதிய அனுபவம் ஆகையால் முதலில் பயத்தோடு பாய்ந்தேன். பாடசாலையில் மணற்குவியலில் பாயும் போது விபத்துக்குள்ளா னதில் சில வேளைகளில் பயிற்சி தடைப்பட்டதுண்டு.
ஆனால் அதைப் பொருட் படுத்தாமல் பயிற்சி எடுத்ததால் வெற்றியின் சிகரத்தை அடைந்துள்ளேன். இது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகின்றது. சாதனை வீராங்கனையாக மாற்றிய எமது பாடசாலை உடற்கல்வி ஆசிரியருக்கும் ஆதரவு தந்த அதிபருக்கும் இத்தருணத்தில் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
உரியவர்கள் கவனமெடுத்து வசதிவாய்ப்புக்களை பெற்றுத்தந்தால் தேசிய மட்டத்தில் சாதனை படைக்க முடியும்.
அத்தோடு எனது இலட்சியம் சிறந்த வீராங்கனை யாக வருவது. இதற்காக இப்போதிருந்தே என்னைத் தயார்படுத்தி வருகின்றேன். என்னைப் போல் பல வீரர்கள் மற்றும் வீராங்கனை கள் எமது பிரதேசத்தில் இருக்கின்றார்கள்.
அவர்களுக்கு போதிய வசதி வாய்ப்புகள் வழங்கினால் தீவக கல்வி வலய மாணவர்களும் தடகளத்தில் சாதிப்பார்கள் என்பது உறுதி’’ என்றார்.
இந்தப் போட்டியில் நானாட்டான் மகா வித்தியாலய மாணவி ருக்சாயினி 1.14 மீற்றர் உயரத்துக்குப் பாய்ந்து வெள்ளிப் பத்கத்தை வென்றார்.
தட்டுவன் கொட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவி பிரபாளினி 1.11 மீற்றர் உயரத்துக்குப் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தையும் தனதாக்கினார்.