வெளிநாட்டில் நடந்த உடன்பாட்டுக்கு அமையவே வித்தியா கூட்டுக் கொலை : தீர்ப்பாயத்திடம் பல தகவல்களை முன்வைத்தார் பதில் சட்டமா அதிபர்
“சுவிஸ் குமாரால் வெளிநாட்டில் செய்யப்பட்ட உடன்படிக்கைக்கு அமை வாகவே புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டார்.
சந்தேகநபர்கள் அனைவரும் உறவினர்கள். அவர்களின் கூட்டுத் திட்டத்துக்குள் மாணவி வித்தியா துரதிஸ்டவசமாகச் சிக்கிவிட்டார். மாணவிக்கான நீதியை தீர்ப்பாயம் வழங்கும்” இவ்வாறு பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா தீர்ப்பாயம் முன்னிலையில் நேற்றுத் தெரிவித்தார்.
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் தொடர் விசாரணை 3 மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயத்தின் (ட்ரயல் அட் பார்) முன்னிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நேற்று ஆரம்பமானது. வழக்கின் ஆரம்பத்தில் ஒழுங்கு விதிமுறைகளின் பிரகாரம் சட்டமா அதிபரின் தொடக்க உரை இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா மேலும் தெரிவித்ததாவது:
நீதியான தீர்ப்பை தீர்ப்பாயம் வழங்கும் இலங்கையின் சட்ட வரலாற்றில் முதன்முறையாக 3 மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நடைபெறுகின்றது.
யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற தீர்ப்பாய விசாரணை சிறப்பான முடிவைக் கொடுக்கும். அதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. வலுவான நம்பிக்கையை ஏற்படுத்தும் தீர்ப்பாயத்தை வடக்கு மாகாணத்தில் அமைத்தமைக்கு நீதித்துறைக்கு நன்றி கூறுகின்றேன்.
9 எதிரிகளுக்கு எதிராகவும் 41 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சதித்திட்டம் தீட்டியமை, வன்புணர்ந்தமை, கொலை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் இந்த 9 எதிரிகளுக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
மிகக் கொடூரமான – காட்டுமிராண்டித்தனமான – மிருகத்தனமான இந்தச் செயலுக்கு உயிரை விட்டது 18 வயதுச் சிறுமியான மாணவி வித்தியா. இந்தச் சம்பவம் காலை 7.30 மணிக்கு நடைபெற்றது. மாணவியின் படுகொலையால் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
வடக்கு மாகாணத்தில் சட்ட ஒழுங்கு பிரள்வையே இந்தச் சம்பவம் ஏற்படுத்தியது. மாணவ மாணவியர் மீது அச்சத்தை ஏற்படுத்தியது. ஊர்காவற்றுறை பொலிஸாரால் விசாரிக்கப்பட்டது. பின்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் இந்த வழக்குப் பாரப்படுத்தப்பட்டது. ஒரு வருட காலத்துக்குள் முடிவுறுத்தப்படுவதற்கு இந்த விசாரணை ஒரு இலகுவான காரியமல்ல.
கடினமான வழக்கு
இந்தக் காட்டுமிராண்டித்தனமான குற்றத்தைச் செய்த எதிரிகளை அடையாளப்படுத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நுணுக்கமான – ஆழமான முறையில் விசாரணைகளை முன்னெடுத்தது.
தீர்ப்பாயத்தில் முழு நம்பிக்கை
நீதியை நிலைநாட்ட எதிரிகளையும் சான்றுகளையும் தேடிச் செல்ல குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு மிகவும் கடினமான காரியமாகவிருந்தது. நான் இந்த இடத்திலே குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு நன்றி கூறுகின்றேன்.
பதில் சட்டமா அதிபர் என்ற வகையில் நான் நம்புகிறேன், இந்த தீர்மானம் நம்பிக்கையை ஏற்படுத்தும். நான் இந்தத் தீர்ப்பாயத்தை நிச்சயம் நம்புகின்றேன். விரைவாக நீதியான நியாயமான தீர்ப்பை வழங்குமென நம்புகிறேன். தீர்ப்பாயத்தால் சாட்சிகளின் உரிமைகள் உரித்துக்கள் பாதுகாக்கப்படும் என்றும் நம்புகின்றேன்.
மாணவியின் கொலைக்கு பெரும் பின்னணி உண்டு
சந்தேகநபர்களைப் பாதுகாக்கின்ற முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டதாக அறிவேன். அது தொடர்பாக விசாரணை நடத்தப்படும். இது ஒரு வன்புணர்வோ அல்ல கொலையோ அல்ல அதற்கு மேலாக ஒரு பின்னணி உண்டு. இந்த குற்றமானது முற்கூட்டியே அறியப்பட்ட ஒரு திட்டமாகும். திட்டமிடப்பட்ட குற்றம் உலகளவில் இதன் தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதாவது பன்னாட்டு மயப்படுத்தப்பட்ட குற்றம் என்று கூறுவதில் நான் தயக்கம் காட்டமாட்டேன். இந்த குற்றத்தின் பின்னணியில் உள்ள இன்னொரு குழுவினர் நாட்டுக்கு கெட்ட பெயர் உண்டாக்கும் செயலை செய்ய முனைகின்றார்கள். உலகளவில் இந்தக் குற்றத்துக்கான திட்டமிடல் நடந்திருக்கின்றது.
உறவினர்கள் இணைந்து
கூட்டுக் கொலை
சான்றுகள் சூழ்நிலைச் சான்றுகளுடன் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல்களுடன் இந்த விசாரணை ஆரம்பமாக உள்ளது.
1,2 மற்றும் 3 எதிரிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 4ஆம் 9ஆம் எதிரிகளும் சகோதரர்கள். 6 ஆம் எதிரியும் 9ஆம் எதிரியும் மச்சான் முறையான உறவினர்கள். 5பேரும் உறவுக்காரர்கள்.
5,7 மற்றும் 8ஆம் எதிரியும் உறவுக்காரர் அல்ல. அதாவது இந்தக் குற்றத்தின் முக்கிய சூத்திரதாரியான 9ஆம் எதிரியாக நோக்கும் நேரலை ஒளிபரப்பு செய்து பன்னாட்டுக்கு காட்டும் முகமாக நடாத்தப்பட்ட இந்தச் சம்பவத்துக்கு 9ஆம் எதிரி தனது மச்சனான 5ஆம் எதிரியைத் தொடர்பு கொண்டுள்ளார்.
வெளிநாட்டிலேயே
கூட்டு வன்புணர்வுக்கு
உடன்படிக்கை
வெளிநாடு ஒன்றிலிருந்து ஒரு உடன்பாட்டை 9ஆம் எதிரி பெற்றுள்ளார். நேரடியான ஒரு ஆபாசப் படத்தை உருவாக்கி விற்பது தொடர்பில் இந்த பன்னாட்டுச் சந்தையின் உடன்பாடு தெற்காசிய நாட்டில் உள்ள இளம் பெண்களின் ஆபாச வீடியோவே ஆகும். 9ஆம் எதிரி சுவிஸ் நாட்டின் குடியுரிமை பெற்ற ஒருவர். இலங்கைக்கு அதிகளவில் வந்து செல்கின்றவரும்கூட.
இந்தக் குற்றவாளிகள் 9 பேரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள். 9 எதிரிகளும் இளம் பெண்ணை கூட்டாகச் சேர்ந்து வன்புணர்ந்து காணொலி எடுத்து பின்பு கொலை செய்வதுதான் திட்டம். அவர்களின் திட்டத்துக்குள் தூரதிஸ்டவசமாக சிக்கிய பெண் வித்தியா.
சுவிஸ் குமார் நடந்தவைகளை உளறிவிட்டார்
9ஆவது எதிரி (சுவிஸ் குமார்) சம்பவம் தொடர்பான அனைத்து விடயங்களையும் சிறையில் வைத்து இன்னொரு நபருக்கு கூறியுள்ளார். சுவிஸில் வைத்து அவர் உடன்பாடு வழங்கிவிட்டு இலங்கையில் வந்து நிறைவேற்றுவது நிதிச் சலவைக்கு உள்ளிட்ட குற்றமாகும். இந்தப் புலன் விசாரணை மேற்கொள்ளப்படும் போது 20 மில்லியன் ரூபா லஞ்சம் வழங்க முற்பட்டது. இதுவும் நாங்கள் அறிந்திருக்கிறோம். இதன் சான்று விளக்கத்தின் போது வழங்கப்படும்.
காட்டுமிரண்டித்தனத்தை காணொலி எடுத்துள்ளனர்
2,3,5,6 ஆகிய 4 எதிரிகளால் கொடூரமாக வன்புணரப்பட்ட அந்தப் பெண் பிள்ளையின் உடற் சோதனையில் யோனிமடல் இல்லாமல் செய்யப்பட்டோ அல்லது அழிக்கப்பட்டோ இருக்கிறன்றது. பிறப்புறுப்பைச் சுற்றிப் பல காயங்கள் காணப்படுவதாக இந்த சோதனை தெரியப்படுத்துகின்றது. இது ஒரு வன்மையான கூட்டு வன்புணர்வாகும்.
இதன்போது 5, 6ஆம் எதிரிகளால் மாறி மாறி காணொலி எடுக்கப்பட்டது. 5, 6ஆம் எதிரிகள் தமக்கெதிரே இந்தக் காணொலியை முழுமையான வடிவமாக மாற்ற முறபடுகின்றார்கள். உடன்பாடு செய்யப்பட்ட அந்தக் கட்சிக்கு இந்தக் காணொலி விற்கப்படுகின்றது.
காணொலியை விற்றமைக்கு சான்றுகள் கிடைத்துவிட்டன
இந்தக் காணொலியானது விற்க்கப்பட்டு விட்டதை சான்றுகள் மூலம் அறியமுடிகிறது. கூட்டாக வன்புணர்வுவிட்டு அந்த மாணவி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டடிருக்கிறார். பிடரிப் பகுதிகளிலும் காயங்கள் காணப்பட்டன. பல காயங்கள் உடலில் காணப்பட்டன. வன்மையான முறையில் மாணவி கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இந்தச் சம்பவம் மாணவி பாடசாலை சென்று கொண்டிருந்த போது நடைபெற்றிருக்கிறது. யாருமற்ற பற்றைவெளியில் பிள்ளையைக் கடத்தி, பின்பு யாருமற்ற பாழடைந்த வீட்டில் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு மீளவும் அவர் கடத்தப்பட்ட இடத்துக்கு இழுத்துக் கொண்டு வரப்பட்டு கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
கை, கால்கள் இழுத்து அருகிலுள்ள மரத்தில் கட்டப்பட்டிருக்கின்றது. முழு நிர்வாணமாக மாணவி இருந்தார். நாட்டினுடைய சுய கௌரவத்தையும் களங்கப்படுத்தும் நோக்கத்திலே இந்த விடயம் நடத்தப்பட்டிருந்தது. அந்த நோக்கத்திலேயே இச்சம்பவம் நடைபெற்றிருக்கின்றது – என்றார்.
