யாழ் தீவகத்தில்,சட்டவிரோதமாக கால்நடைகளை இறைச்சிக்காக கொன்றழிக்கும் சமூக விரோதிகளின் செயற்பாடு அதிகரித்திருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மண்டைதீவு,அல்லைப்பிட்டி,மண்கும்பான்,வேலணை,புங்குடுதீவு உட்பட தீவகத்தின் பெரும்பாலான பகுதிகளில்-கட்டாக்காலி கால்நடைகளையும்-கட்டி வளர்க்கும் கால்நடைகளையும்-இச்சமூக விரோதிகள் தொடர்ந்து வேட்டையாடி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
பசுமாடுகள்,கன்றுத்தாச்சி மாடுகளையும் கூட இவர்கள் விட்டு வைப்பதில்லை என்று மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
பகல்வேளைகளில் மாடுகளை பிடித்து பற்றைகளுக்குள்ளும்-பாழடைந்த வீடுகளுக்குள்ளும் மறைவாக கட்டிப்போட்டு விட்டு-இரவு வேளைகளில் வாகனங்களில் வந்து ஏற்றிச் செல்வதாக புங்குடுதீவைச் சேர்ந்த பொதுமகன் ஒருவர் தெரிவிக்கின்றார்.
கீழே இணைக்கப்பட்டுள்ள நான்கு படங்களும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மண்டைதீவில் எடுக்கப்பட்டவையாகும். மண்டைதீவில் பசுமாட்டை கடந்த திங்கட்கிழமை(29) ஆள் நடமாட்டம் இல்லாத பற்றைக்குள் வைத்து இறைச்சியாக்கிக் கொண்டிருந்த இரண்டு நபர்களை கைது செய்த பொலிஸார் செவ்வாய்க்கிழமை (30) அன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
இதன் போது சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் ஜுன் 7ஆம் திகதி வரை விளக்கமறிய லில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் ரியால் உத்தரவிட்டார்.
மேலும் கைது செய்தவர்களிடம் இருந்து இறைச்சிக்காகக் கொல்லப்பட்ட மாடு மற்றும் கூரிய கத்திகள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டன.
தீவகத்தில் அருகி வரும் கால்நடைகளை காப்பாற்ற-கடுமையான தண்டனைகளை நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வழங்க முன் வேண்டும்-என்று சமூக அக்கறையாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.