ஆழ்கடலின் ஆதிக்கத்துக்கு அடங்கி விடாமல் கற்பார்கள் காவல் செய்ய பனையும் பூவரசும் மற்றும் விருட்சங்களும் துணையிருக்க கல்வேலி அழகை மெருகூட்ட நிம்மதித் தூக்கமிடும் சுந்தர பூமி எம் நெடுந்தீவு.







நீண்ட கடல் வெளியால் பிளவுண்டு கிடப்பினும் எம்மவரின் சிந்தனை களும் செயல்வடிவங்களும் ஓங்கி ஒலித்த படி என்றும் இருக்கும். சுனாமியால்கூட நெடுந்தீவைத் தொட முடியாமற் போனது. அப்படியானதொரு தேசத்தின் சொந்தங்கள் மீதே 1985ஆம் ஆண்டு மே 15ஆம் நாள் அந்த வரலாற்றுத் துயரம் சுமத்தப்பட்டது.
நெடுந்தீவு மக்கள் மட்டுமன்றி உலகமே உறைந்து போன நாளாகியதுடன், விடுதலை வேட்கையை மேலும் வீறுகொள்ள வைத்த வரலாற்றுச் சம்ப வமாகவும் அது அமைந்திருந்தது.
நாளாந்த கடமைகளின் பொருட்டு அன்றைய நாளும் அப்பாவித்தனமாக பயணம் ஆரம்பமானது. குழந்தைகள், தாய்மார், அரச உத்தியோகத்தர்கள், பெரியவர்கள் என அறுபதுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்த குமுதினிப் படகு பரந்த கடல்வெளியில் நிறுத்தப்பட்டது.
பயணிகள் கரை வந்து விட்டதா? என எட்டிப் பார்த்த வேளை சிறிய படகு ஒன்றில் வந்தவர்கள் குமுதினிப் படகில் ஏறிக் கொண்டனர். சோதனையிட வேண்டும் என்று கூறி எல்லோரையும் பின்பக்கம் அறைக்கு (கொம்போட்மென்ட்) செல்லும் படியும் பணித்தனர்.
பின் ஒவ்வொருவராக முன் அறைக்கு (முதலாவது கொம்போட்மென்ட்) வரவழைக்கப்பட்டு கத்தி, கோடரி, கொட்டன்கள் என்பவற்றால் அடித்தும் வெட்டியும் கொத்தியும் சித்திரவதைகள் செய்து சரித்தனர்.
கடமையே கண்ணென வாழ்ந்து காட்டிய அதிபர் திருமதி புஸ்பராணி வேலுப்பிள்ளை, ஆசிரியர் க.சதாசிவம் குமுதினியின் பிரதானி தேவசகாயம்பிள்ளை இ.போ.ச.ஊழியர்களான ந.கந்தையா, ச.கோவிந்தன் மற்றும் க.கார்த்திகேசு போன்றோருடன் கர்ப்பிணிப் பெண் உட்பட ஈவிரக்கமின்றி யாவரும் குதறப்பட்டனர். குருதி வெள்ளத்தில் தத்தளித்த இவர்களில் 36 பேர் கொலைவெறிக்கு இரையாகினர். ஏனையவர்கள் உயிர்தப்பினாலும் நீண்டகால நோயாளிகளாகவே அவர்களால் வாழ முடிந்தது.
இனவாத அரசியலின் கோரமும், கோழைத்தனமும் வெளிப்படுத்தப்பட்ட இந்தச் சம்பவம் தமிழ் இன விடிய லுக்காக இளைஞர்களை வீறுகொள்ள வைத்த வரலாற்றுத் தடங்களில் முதன்மையானதெனலாம். சுமுகமான ஒரு சூழ்நிலை நிலவும் போது, குடும்ப உறவுகளோடு இணைந்திருக்க வேண்டியவர்கள் இன்று இல்லை என்பதை எண்ணிப்பார்க்கையில் இது எத்தனை கொடுமையானது என்பது புரியும்.
வெட்டுவதும் கொத்துவதும் வேரோடு சாய்ப்பதுவும் இனவாத சக்திகளுக்கு இது புதியதல்ல. குமுதினியில் மட்டுமல்ல குருநகரிலும் இதே கொடுமை நிகழ்ந்தது.
கவிஞர் கண்ணில் குமுதினிப் படுகொலை
சமகால கவிஞர்களால் குமுதினிப் படுகொலை கவிவரிகளில் வெளிவந்தன.
குமுதினிப் படகில் யார் வெட்டினார்கள்…
குருநகர் கடலில் ஏன் கொத்தினார்கள்…
நயினைக்கவிக்குலத்தின்
“கார்த்திகேசு என்னவானாள்…”
என்று நீளும் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவி அவலமும்
புங்குடுதீவு கவிஞர் சு.வில்வரத்தி னத்தின் “காலத்துயர்” கவிதையூடாக,
“முட்களை வெட்ட ஏந்திய வாள்கள்
மலர்களை, தளிர்களை, பிஞ்சுகள்
கனிய நின்ற தோப்புக்களை
வெட்டி எறிந்த குருதிக் காட்டில்
எது பூக்கும்?
என்ற ஏக்கமும் என்றும் எம் தீவு மக்களின் நாடித்துடிப்பின் அடையாளங்களாய் நீண்டு செல்லும்
திருப்பு முனை நோக்கி…
செல்லரித்துப்போன தேச கட்டுமானங்களில் எம்மவரின் இழப்புக்கள் நிலையானவை. இனவாத அரசுகளை ஆட்டங்காண வைத்த வரலாற்றுப் பதிவுகளில் ஒரு முக்கிய திருப்புமுனை ஈழ விடுதலை வரலாற்றில் என்றும் ஈரம் காயாத வரிகளாய் நிலைத்து நிற்பது குமுதினிப் படுகொலை. அன்று அரச படைகளின் கோரத் தாண்டவத்தால் குதறப்பட்டோரை ஒன்றுபட்ட “இளைஞர் அணிகளும்” பொதுமக்களும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததால் அநேகமானோர் காப்பாற்றப்பட்டனர் .
நினைவு தினமும் நினைவாலயமும்
இறந்தோரின் நினைவாக சமய வழிபாடுகளுடன் ஊர்வலங்களும் நினைவுக்கூட்டங்களும் நடத்தப்பட்டன. “இளம் பறவைகள் கலாமன்றம்” எனும் அமைப்பு நினைவாலயம் அமைப்பதற்கான முதல் முயற்சியை செய்திருந்தது.
காலப்போக்கில் குடிமக்கள் குழு, பிரதேச சபை போன்றன தற்போதைய நினைவாலயம் வரையான ஆக்கபூர்வ பணிகளை மேற்கொண்டிருந்தன எனலாம்.
32 வருடங்கள் நிறைவடையும் இன்றைய நாள்வரை பேசுபொருளாகவே குமுதினி அமைந்திருக்கின்றது.
குமுதினிப் படகின் சேவையும் தேவையும்
குமுதினிப்படகு இற்றைக்கு சுமார் 80 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. இன்றுவரை அது சேவை செய்து வருகின்றது. இடையில் பழுதானால் பத்திரிகைகள் சோககீதம் பாடுவதைக் கேட்கலாம். அத்தனை முக்கியத்துவம் குமுதினிக்கு உண்டு.
காற்றும் மழையும் வெயிலும் கொடு மழையும்
ஏற்று எமைச் சுமக்கும் குமுதினித்தாய்
கூற்றுவரின் கூட்டக்
கொடுங்கற்றி வாள்முனையில்
வீழ்ந்தாள் கடல் வெளியில்
உப்புதிருங்காற்றின்உதவியுடன் கரைசேர
செத்தவராய்ப் போனோம் நாம்
அவளோ…
சாகாவரமெடுத்தாள்
மீண்டும் எமைச் சுமக்க
குமுதினியின் வயது எண்பதைத் தாண்டினாலும் இந்தத் துன்பியல் இன்றுடன் 32 ஆண்டுகளைக் கடந்து நிற்கின்றது. எமது வாழ்வின் நெருக்கீடுகளையும், தடைகளையும் உணர்ந்துகொள்ளும் ஒரு நாளாக இன்றைய நாள் அமையும்.
குமுதினிக்குள் நடந்த இந்த சோகங்களைப் போல் குமுதினியும் பல சோகங்களைச் சுமந்தும் நெடுந்தீவு மக்களை சுமந்து கரை சேர்க்கும் தாயாக பெரிய பொறுப்பைச் செய்து வருகின்றாள்.
ஈரமின்றி இறுகிப்போன மனித மனங்களுக்கு வாழ்வின் வலியையும், வழியையும், வனப்புக்களையும் சொல்லும் வளமான ஆசானாய் இன்றும் எம்முடனே வலம்வரும் குமுதினியாள் என்றும் அவளே துணை என்ற நினைப்புக்க ளுடன் எம்மவரின் கடல்வழிப்பயணம் தொடர்கின்றது.