மனித வாழ்வு சிறப்பானதாக அமைவது நெறிமுறைகளும் விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்படுவதன் பின்னணியிலே தங்கியுள்ளது. எந்த நெறிமுறையும் அல்லது விதிமுறையும் மீறப்படுகின்றபோது, அங்கு பிரச்சினைகளும் இழப்புக்களும் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன.
“அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சு’’ என்று கூறப்படுகின்றது. நேரிய சீரிய வாழ்வியல் முறையே உயர்வான சமூக விழுமியங்களைத் தோற்றுவிக்கின்றதாக அமையும். இதுவே ஒரு சமூகத்தின் பண்பியலையும் வெளிக்காட்டி நிற்கும். மதிக்கப்படுகின்ற வரை மிதிக்கப்படாமல் வாழ்வியல் தொடரும்.
வீதி விதிமுறைகள்
போக்குவரத்து மனித வாழ்வோடு இரண்டறக்கலந்த ஒரு வாழ்வியல் முறையாகும். நெறிமுறைகளை நாம் கடைப்பிடிக்கின்றபோது வாழ்வியலில் ஒழுக்கம் மேலோங்கிக் காணப்படும். குழப்பங்களோ பிரச்சினைகளோ ஏற்படமாட்டாது. இவ்வாறே மனிதனின் வாழ்வானது ஓரிடத்திலே இருந்து விடுவதில்லை. பயணித்து மீண்டும் அந்த இடத்தை வந்தடைவதையே தொடர் வாழ்வியல் செயற்பாடாகக் கொள்ளப்படுகின்றது.
எனவே விதி முறைகளை முறையாகக் கடைப்பிடித்துப் பயணிக்கும்போது விபத்துக்கள் ஏற்படாமல் காத்திடலாம். அத்துடன் உளநெருக்கீட்டுக்கும் ஆளாகத் தேவையில்லை. விதிமுறைகள் மீறப்படும்பொழுது விபத்துக்கள் உளநெருக்கீடுகள் சிலவேளை உயிரிழப்புகளும் ஏற்பட்டு விடுவதைச் செய்தித் தாள்கள் மூலமாக அறிகின்றோம்.
அண்மைக் காலமாக அநேக இளம் உயிர்கள் எமது மண்ணின் வளங்களான பெறுமதிகள் இழக்கப்பட்டுள்ளன. இவைகள் விதிமுறைகள் மீறப்படுவதனாலும் அதிவேகத்தினாலும் ஏற்பட்டவை என்பதை இன்னும் உணரா நிலையே எம்மிடையே காணப்படுவது வேதனைக்குரியதாகும்.
இன்றைய நிலை
இன்றைய காலங்களில் வாகனங்களின் அதிகரிப்பினால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்ட வண்ணமே இருக்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது நான்கு ஐந்து இரண்டு சில்லுவாகனங்கள் இருக்கவே செய்கின்றன. ஒவ்வொருவரும் தத்தமது தேவை கருதி, தமது வேலைத்தளத்துக்கு விரைவாகச் சென்று விரைவாகவே மீண்டும் வரவேண் டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனாலே வாகனப்பாவனையானது அதிகரித்துக் காணப்படுவதால் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படாத நிலை; விபத்துக்கள் உடல், உயிரிழப்புக்கள் உள நெருக்கீடுகள் ஏற்படவும் காரணமாக அமைந்து விடுகின்றன. நேருக்கு நேர் மோதுதல் பாதசாரிகளை அடித்துச் செல்லுதல் பின்னால் சென்று மோதித்தள்ளுதல் இவைகள் அடிக்கடி நிகழ்வனவாக இருக்கின்றதென்றால் விதிமுறைகள் சரியாகக் கடைப்பிடிக்காத நிலை என்பதை, ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களே அநேகர் இருக்கின்றார்கள்.
தம்மில் பிழை இல்லை என்று மறுத்துரைப்பதனால் பிழைகள், பின்பற்றத்தவறிய விதிமுறைகள் சரியென்றாகிவிடாது. நீதிமன்று, நியாயத்தீர்ப்பு, தண்டம், தண்டனை என்று வீணாக அலையவேண்டிய நிலைகளே ஏற்படுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றன.
விபத்து ஏற்படாமல் தடுக்கும் சில வழிமுறைகள்
வாகன ஓட்டுநர் அதிவேகத்தைக் குறைத்து வேகக் கட்டுப்பாட்டுடன் பயணித்தல், ஒளிச் சமிக்ஞைகள், சைகைகளை மதித்துப் பின்பற்றுதல், நிறக் குறியீடுகளில் காட்டப்பட்டவாறு கடைப்பிடித்து பயணித்தல் பாதசாரிகளை மதித்து நடத்தல் அவ்வாறு பாதசாரதிகளும் மதித்து நடத்தல், உரிய இடங்களில் குறிக்கப்பட்ட வேகத்திலே உரிய வேளைகளில் பயணத்தில் எமது தேவைகள்போல மற்றவரின் தேவையையும் உயர்வாக மதித்துப் பயணித்தல் – இவை போன்ற செயற்பாடுகளை விதிமுறைகளை மீறாமல் செயற்பட்டால் போக்குவரத்து நெரிசலின்றி, ஒழுங்கு முறையுடன் விபத்துக்கள் ஏற்படாமல் நெருக்கீடுகள், உயிரிழப்புக்கள் ஏற்படாமல் தவிர்த்துக் கொள்ளலாம்.
இவற்றைக் கடைப்பிடிக்க யாவரும் முற்படுகின்றபோது பயணங்களைப் பயமின்றித் தொடரலாம்.
ஒழுங்கு முறைகள்
பின்பற்றப்படாத ஒரு சில இடங்களில் மக்களின் செயற்பாடுகள் இவ்வாறு அமைந்து காணப்படுகின்றன. உ+ம் ஒளிச்சமிக்ஞை உள்ள சந்திகளில் ஒவ்வொரு வீதிப் பகுதியிலும் ஒரு வெள்ளை நிற நிறுத்தற் கோடும் இரண்டு இடைவெளி மஞ்சள் கோடுகளும் போடப்பட்டுள்ளன. இரண்டு மஞ்சள் கோடுகள் பாதசாரிகள் செல்வதற்கான கோடுகள். ஆனால் சில இடங்களில் வெள்ளைக் கோட்டைத் தாண்டி இரண்டாவது மஞ்சள் கோட்டில் வாகனங்களை நிறுத்துகின்றார்கள்.
இதனால் பாதசாரிகள் தமக்குரிய இடத்தால் செல்லமுடியாமல் அல்லற்படுவதைக் காண்கின்றோம். அத்தோடு தமக்குரிய பச்சை வெளிச்சம் ஒளிராத வேளையிலும் தமது அவசரத்தால் திசைமாறிச் செல்வதால் விபத்தைச் சந்திக்க வாய்ப்புள்ளது. பாதசாரிகள் நடந்து செல்லும் மஞ்சள் கடவை (பல இடங்களில் தெளிவற்றுள்ளது) களில் பாதசாரிகள் செல்லும் போது வாகன ஓட்டுநர்கள் தரிக்காது முன்பின்னாக வந்த வேகத்திலே செல்கின்றார்கள். இதனாலே விபத்தும் உயிரிழப்பும் ஏற்படும். இப்படியான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.
எனவே வாகன ஓட்டுநர்கள் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். பாதசாரிகளை மதிக்க வேண்டும், நிறச்சமிக்ஞைகள், ஒளிச் சமிக்ஞைகள வேகக்கட்டுப்பாட்டு குறியீடுகள், இடக்குறியீடுகள், கடவைக் குறியீடுகளை மதித்து, வேகத்தைக்குறைத்து, விதி முறைகளைக் கடைப்பிடித்தால் விபத்துக்கள், இழப்புக்களைத் தவிர்த்து, முறையான பயப்பீதியில்லாத பயணங்களை மேற்கொண்டு எம் வருங்காலச் சந்ததியினரும் விதி முறைகளையும், நெறிமுறைகளையும் கடைப்பிடிக்கின்றவர்களாகச் செயற்பட நாங்கள் முன்ன தாரணமுள்ளவர்களாகச் செயற்பட முன்வருவோம்.
– அன்ரனி பீற்றர்

