மண்டைதீவின் வடக்குப் பக்கத்தில் உல்லாசக் கடற்கரையினை அமைக்கும் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இக்கடற்கரைக்குச் செல்வதற்காக,மண்டைதீவு பிரதான வீதியிலிருந்து புதிய வீதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் இவ்வீதியின் இரு மருங்கிலும் சோலர் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிய வருகின்றது.
மேலும் விபரங்கள் வருமாறு…
01-மண்டைதீவுச் சந்தியில் மிக விரைவில் கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்படவுள்ளதாக-பொலிசாரை ஆதாரங்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
02-மண்டைதீவு எக்கோ பீச் பார்க் என்ற பெயருடன் பல கோடி ரூபாக்களில் உல்லாசக்கடற்கரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
03-மண்டைதீவு உல்லாசக்கடற்கரையை நோக்கி 150க்கும் மேற்பட்ட சோலர் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
04-மண்டைதீவுச் சந்தியில் புதிய பஸ் தரிப்பிடம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. மண்டைதீவைச் சேர்ந்த அமரர் மயில்வாகனம் மதன்ராஜ் அவர்களின் ஞாபகார்த்தமாகவே -அன்னாரின் குடும்பத்தினரால்-தீவக பிரதான வீதியில் ஊர்காவற்றுறை நோக்கிச் செல்லும் பக்கம்-மண்டைதீவுச் சந்தியில் இந்த புதிய பஸ் தரிப்பிடம் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
05- மண்டைதீவில் சர்வதேச கிரிகெட் மைதானம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
விரைவில் தீவகத்தின் உல்லாசபுரியாக மண்டைதீவு மாறலாம்-ஆனால் இது ஆரோக்கியமான மாற்றமாக இருக்குமா?என்பதனை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
யாழ் நகருக்கு மிக அண்மையாக அமைந்துள்ள – தீவகத்தின் தலைத் தீவாக விளங்கும் மண்டைதீவின் மேல் அரச அதிகாரிகளின் பார்வைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ் நகருக்கு அண்மையாக அமைந்துள்ளதாலும் – போக்குவரத்துக்கு இலகுவாக இருப்பதனாலும்,அரச அதிகாரிகள் மண்டைதீவுப் பகுதியை,தெரிவு செய்திருப்பதாக மேலும் அறிய முடிகின்றது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மண்டைதீவுக்கு விஜயம் மேற்கொண்ட- இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால தலைமையிலான அதிகாரிகள் குழு- மண்டைதீவு பிரதேசத்தில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்ததாகவும்- நிர்மாணப்பணிகள் இவ்வருடத்திற்குள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்து வடமாகாண அமைச்சினால், மண்டைதீவின் வடக்குப் பக்கத்தில் நவீன உல்லாசக் கடற்கரையினை அமைக்கும் பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது. இந்த மாதக்கடைசியில் கடற்கரை திறந்து வைக்கப்படவுள்ளதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்தியொன்று தெரிவிக்கின்றது.
இவற்றுக்கு வேண்டிய பெருந்தொகையான உபகரணங்கள் மண்டைதீவுக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.
யாழ் வலம்புரி பத்திரிகையில், வடக்கில் அமைக்கப்படவுள்ள சிறுவர் மருத்துவமனையை,மண்டைதீவில் அமைப்பது எல்லா வகையிலும் பொருத்தமானது என்ற செய்தி வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இனி வரும் காலங்களில்-தீவகத்தின் தலைத்தீவாகிய மண்டைதீவு மிக முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாகவும்-உல்லாச புரியாகவும் மாறுவதற்கான வாய்ப்புக்கள் அமையப் பெற்றுள்ளதாகவே நம்பப்படுகின்றது.