அமைதியின் தேவ பாலகன்
யூதா கோத்திரத்தில் வந்த, தாவீதின் குடும்பத்தில் அவதரித்த யேசுபாலகனே.
மரியாளின் திருவயிற்றின் ஜெனித்த தேவபாலகனே.
எளிமையான மனித உடல் எடுத்து மாட்டு தொழுவத்தில் பிறந்தவரே.
குளிரைப்போக்க வைக்கோலை துணியில் பொதிசெய்து தலையணையாக கொண்டவரே.
ஏழ்மை நிலையில் பிறந்த திவ்விய பாலகனே,
எழிமையான இடையர்கள் உங்களை முதலில் வந்து துதித்தார்கள்.
எழியோரையும் ஏழ்மையையும் முதலில் அரவணைத்த அற்புத பாலகனே.
தேவ ராட்சியம் உம்முடையது, ஆனால் ஏழ்மை நிலையை ஏன் தோர்தொடுத்து, சிரித்துக்கொண்டே பிறந்தீர்.
ஏழ்மைநிலை கீழ் நிலையல்ல, அது புனித நிலை, அன்பு நிலை, அது உன்னை உயர்த்தும் நிலை, என
உன் பிறப்பு எமக்கு எடுத்துக்காட்டுகிறது.
மார்கழி மாத வாடைக்குளிர் வாட்ட, மாடுகளின் மூச்சு அனலூட்ட, மாட்டு தொழுவத்தில் ஒதுங்கி, மனிதர்கள் இரக்கமற்றவர்கள்,மிருகங்கள் மிருதுவானவர்கள் என்பதால் அவர்கள் இருப்பிடத்தில் பிறந்த யேசுவே! ஏன் உன் பிறப்பு இப்படி துன்பகரமாக இருந்தது.
அடிமைத் தனத்திலும், அறியாமையிலும் இருள் மண்டிக்கிடந்த உலகுக்கு ஒளியூட்ட, பாவ விலங்கறுத்து மோட்ச வீட்டின் உரிமையை மீண்டும் மனுக்குலத்துக்குப் பெற்றுத்தர,
அந்த காரத்தில் நின்று உலகை விடுவிக்க, மண்ணுயிர் மீது அணை கடந்த அன்பைச் சொரிந்து, இறை மகனாம் இயேசு, அமைதியின் தேவபாலன் புவியில் அவதரித்தார்.
கடவுள் தாமே தமது பெயரால் உங்களுக்குப் போதிக்கும்படி ஒருவரை அனுப்பாவிடில், மானிடரை ஒழுக்கத்தில் நிலைநிறுத்த உங்களால் முடியாது என்று பிளேட்டோ என்ற தத்துவஞானி எழுதியிருக்கிறார். அதுபோல் கி.மு. 5ம் நூற்றாண்டில் சோக்கிரட்டீஸ் என்ற தத்துவமேதையும் இதுபற்றிக் கூறியுள்ளதைக் காணலாம்.
சமாதானத்தின் வேந்தன், பாவத்தின் சாபத்தால் பாழ்பட்டு சஞ்சலத்தில் மூழ்கியிருந்த இவ்வுலகுக்கு, அமைதியும் மீட்பும் அளிக்க வந்தார்.‘உன்னதங்களில் கடவுளுக்கு மகிமையும், பூமியில் நல்மனதோர்க்கு அமைதியும் ஆகுக’ என்று இயேசு பிறந்த போது தேவதூதர் பாடி,இறைமகனின் அமைதிப் பணியை அவரின் திரு அவதாரத்தின் பொருளை உலகுக்கு அறிவித்தனர்.
அந்த அமைதி தேவபாலகனின் வருகை
உலகிற்கு ஒரு ஒளி, மனிதருக்கு ஒரு வழி
உங்கள் வாழ்விற்கு வழி காட்டும் இரு விழி.
உன்னைப்போல் பிறரை நேசி, என யேசு சொன்னார், இதில் எவ்வளவு இன்பம் இருக்கிறது தெரியுமா, செய்து பாருங்கள் உணர்வீர்கள்.
ஏழையை நீ நேசித்துப்பார், நோயாளிக்கு நீ உதவிப்பார், துயருற்றோரை நீ காப்பாற்றிப்பார், அப்படிச்செய்தால், நீ தான் கிறிஸ்தவன்.
தாய் தந்தையை நீ அன்பு செய், பெரியோரை நீ கனம் பண்ணு, ஆசான்களை நீ மதி, அப்படியானால் நீ தான் அறிவான மாணவன்.
பசியாய் இருப்பனுக்கு உணவளி, உறவை இழந்த மனதிற்கு ஆறுதல்கொடு, படிக்க வசதியற்ற மாணவருக்கு உதவிசெய், உன் வாழ்வை பிறருக்காகவும் வாழ மாற்றிவிடு, அப்படியானால் நீ தான் அன்பான மனிதன்.
உன்னைத் தேடி அமைதி வரும், உன் வாழ்வு பிராகாசமாக மாறும், அமைதியின் தேவபாலனின் ஆசி நீ கேட்காமலே உன்னை வந்தடையும்.
விபிலியத்தின் வார்த்தைகள் உயிருள்ளவை, நல்லவர்களாக நீங்கள் இருந்தால் தீமைகள் அணுகாது, அன்பு கொண்டவனாக நீ இருந்தால் ஆயுளும் குறையாது, ஆண்டவன் அருள் கிடைத்தால் உன் ஆயுளுக்குள் நின்மதியடைவாய்,
அமைதியாக வாழ், அன்போடு வாழ். பெற்றோர், உற்றோர், ஆசிரியரை மதித்துவாழ்,
படி-பணி, உழை-உதவு, அழை-உபசரி, நேசி-ஆதரி, நிமிந்துநில்- உன் நாட்டை, மக்களை நேசி, உனக்குள் அமைதியின் தேவ பாலகன் தினம் தினம் துணையாக இருந்து கொண்டே இருப்பார்.
அனைவருக்கும் நத்தார் வாழ்த்துக்கள் உரித்தாகுக.
அல்லையூர் அருள் தெய்வேந்திரன், சோதிடர், கவிஞர்.