துன்பமுற்ற மக்களுக்கு வழிகாட்டியாக உலகில் வந்துதித்த இயேசுபாலன்-சிறப்புக் கட்டுரை இணைப்பு!

துன்பமுற்ற மக்களுக்கு வழிகாட்டியாக உலகில் வந்துதித்த இயேசுபாலன்-சிறப்புக் கட்டுரை இணைப்பு!

நத்தார் பண்டிகை. ஊர் எங்கும் விழாக்கோலம், வீடுகளில் அலங்கரிக்கப்பட்ட குடில்கள், வண்ண வண்ண விளக்குகளால்  கிறிஸ்மஸ் மரங்கள், புத்தாடைகள் என்று உலகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் அதேவேளை, மனிதநேயத்தை மறந்து சிதைந்து கிடக்கும் இவ்வுலகிற்கு அவருடைய பிறப்பும் வாழ்வும் எடுத்துக்காட்டாக அமைகின்றன. இயேசு கிறிஸ்துவின் பிறப்பு சாதாரண பிறப்பல்ல, கடவுளே மனிதனாக இந்த உலகத்திற்கு வந்ததாகவும், அது தொடர்பாக பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே முன்னறிவிக்கப்பட்டதாகவும் கிறிஸ்தவர்களின் புனித நூலான வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயேசு பிரானின் பிறப்பு தொடக்கம் இறப்பு வரை ஒவ்வொரு அசைவும் உலக மாந்தருக்கு நற்செய்தியாக விளங்கின்றது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பை முன் கூட்டியே இறைதூதர்கள், ஞானிகள் உரைத்தனர். அப்போது அவர் எந்த வடிவில் பிறப்பார்? எங்கு பிறப்பார்? எப்படி இருப்பார்? என்ற எதிர்பார்ப்புடன் பலரும் காத்திருந்த வேளையில் கடும் குளிருக்கும், பனிக்காற்றுக்கும் நடுவில் ஏழ்மையிலும், எளியவராக பெத்தலேகமிலுள்ள மாட்டுதொழுவத்தில் மரியாளுக்கு மகனாக இயேசு நாதர் பிறந்தார்.

குழந்தையை துணிகளால் போர்த்தி தீவனத்தொட்டியில்தான் கிடத்தினார்கள். இதன் மூலம் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் இல்லையென்பதை தனது பிறப்பின் மூலம் இயேசு இவ்வுலகிற்கு உணர்த்தினார்.

அதனைத் தொடந்து அவர் பிறந்த செய்தி முதலில் எளிய மக்களான இடையர்களுக்குக் கிடைத்தது. அவர்கள் முன் தோன்றிய வானதூதர் ‘பெத்தலகேமில் மீட்பர் பிறந்திருக்கின்றார்’ என அறிவித்தார். எனவே இதன் மூலம் இயேசு பாவிகளையும், வறியவர்களையும் தேடி இவ்வுலகிற்கு வந்துள்ளார் என்பது உணர்த்தப்பட்டது.

விண்மீனின் உதவியுடன் ஞானிகள் வந்து குழந்தை இயேசுவை வணங்கி விட்டு அந்தச் செய்தியை ஏரோது அரசருக்கு அறிவிக்க, இயேசுவின் பிறப்பினை ஏற்றுக் கொள்ள முடியாத ஏரோது அரசன், இரண்டு வயதுக்குக் குறைந்த அனைத்தும் ஆண் குழந்தைகளையும் கொடூரமாகக் கொலை செய்ய ஆணை பிறப்பிக்கின்றான். எனினும் இக்கொலை அச்சுறுத்தல்களில் இருந்தும் குழந்தை இயேசு தப்பிப் பிழைத்தார். இதன் மூலம் அவருடைய வாழ்வும், போதனையும் கொலைக்கு அஞ்சாத நோக்கத்தை உடையதாகவிருக்கும் என்பது உணர்த்தப்பட்டது.

இயேசுவின் குடும்ப வாழ்க்கை பற்றிப் பார்ப்போமானால் குழந்தைப் பருவத்தில் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து நடந்து கொண்டதுடன், கடவுளுக்கும் மக்களுக்கும் உகந்தவராய் அவர் வாழ்ந்து வந்தார்.

ஜெருசலேம் கோயிலிலும் அங்கு நடக்கும் விழாக்களிலும் அவர் தவறாது பங்கு கொண்டார். இதன் மூலம் சிறுவயது முதலே ஆன்மிக விடயங்களில் அவர் கொண்டிருந்த ஈடுபாட்டைக் காணக் கூடியதாகவிருக்கின்றது. அதே போல் 30 வயது வரை தனது குடும்பத்தின் சுமையை சுமந்தார். வளர்ப்புத் தந்தையான யோசேப்புடன் இணைந்து தச்சுத்தொழிலுக்கு உதவியாக இருந்ததன் மூலம் அச்சுமையை ஏற்றுக் கொண்டதைக் காணக் கூடியதாகவிருக்கின்றது.

அதுமட்டுமன்றி தாய் மரியாளின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து எப்போதும் உதவியாக இருந்தார். அதற்கு உதாரணமாக கானா ஊர் திருமண வீட்டில் நடந்த சம்பவத்தைக் குறிப்பிடலாம். கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கல்யாணம் நடந்தது. தாய் மரியாளும் ,இயேசுவும் அவருடைய சீடரும் அந்தக் கல்யாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். அப்போது அங்கு எதிர்பாராத விதமாகத் திராட்சை இரசம் தீர்ந்து விட்டது. எனவே அது திருமண வீட்டாருக்கு ஒரு பெரிய இழுக்காக அமைந்து விடும் என்று மரியாள் அவர்களுக்காக ,இயேசுவிடம் பரிந்து பேச உடனே இயேசு தாயின் வார்த்தைக்கு மதிப்பளித்து ஆறு கல்தொட்டிகளில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த தண்ணீரைச் சுவைமிகுந்த திராட்சை இரசமாக மாற்றி உதவி செய்தார்.

முப்பது வயதான பின்னர் அவர் மற்ற ஊர்களுக்குச் சென்று கடவுளைப் பற்றி போதிக்க ஆரம்பித்ததுடன், அவருக்கு உதவியாக 12 சீடர்களையும் தேர்ந்தெடுத்தார்.

அக்காலப் பகுதியில் கொடுங்கோல் ஆட்சியாளர்களின் ஆதிக்கம் அதிகமாகக் காணப்பட்டது. ஆட்சியாளர்கள் தங்களுடைய சுகத்துக்காகவும், சுகவாழ்வுக்காவும் அடக்குமுறை சட்டங்களை மக்கள் மீது சுமத்தினார்கள். இரட்டிப்பான வரிகளையும் மக்கள் மீது சுமத்தி சுகம் கண்டார்கள். இதனால் மக்கள் திட்டமிட்டே வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அதன் விளைவாக சமூகத்தில் ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வுகள் உருவாகின. அதுமட்டுமின்றி, சமயரீதியான அடக்குமுறைச் சட்டங்களை நடைமுறைப்படுத்தினார்கள்.

ஏழைகள், விதவைகள், நோயில் வாடுவோர், கல்வி இல்லாதோர் இறைவனின் சாபத்திற்கு உட்பட்டோர் எனவும் யூதர் அல்லாதோர் தீண்டத்தகாதவர்களாவும் ஒதுக்கப்பட்டனர். எனவே இத்தகையதொரு சவால் மிக்க சூழ்நிலையிலேயே இயேசு தனது போதனைகளை துணிவுடன் ஆரம்பித்தார்.

அரசியல் சமய மையங்களின் செயற்பாடுகளை எதிர்த்தார். வறியவர்களோடும் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்களுடனும், யூதர்கள் அல்லாதோருடனும் உறவுகளை ஏற்படுத்தி அன்பு காட்டினார் . அது அடிமைத்தனத்திலிருந்த மக்களின் விடுதலைக்கு வித்திட்டது. அதுமட்டுமின்றி, மேன்மக்கள் கீழ் மக்கள் என்ற மமதை இல்லாமல் இறைவனின் படைப்பில் அனைத்து உயிர்களும் சமன் என்பதை உலகிற்கு அவர் எடுத்துக் காட்டியதுடன், அதற்கு முன்னுதாரணமாகவும் வாழ்ந்தார்.

அசுத்த ஆவிகளின் கட்டுக்களிலும், நோய்நொடிகளாலும் பாதிக்கப்பட்டிருந்த மக்களை தனது இறைநம்பிக்கையினால் குணப்படுத்தி புது வாழ்வினை அளித்தார். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மனித இயல்பைப் புரிந்து கொள்வதில் இயேசு தலைசிறந்தவராக இருந்தார். மனித உறவுகளின் மதிப்பினை மக்களுக்கு கற்பிப்பதற்கு எளிய உவமைகளை உதாரணமாகக் கூறி அதை விளக்கினார். அது போல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர் அளித்த ஆலோசனைகள் அவற்றை வேரோடு கிள்ளி எறிய உதவின.

இதன் மூலம் அவரிடம் காணப்பட்ட மனித நேயமுள்ள பண்புகள் உலகுக்கு எடுத்துக்காட்டாக அமைந்தன.அதனைப் போல் பாவச் செயல்களினால் அன்றாடம் கண்ணீருடன் வாழ்ந்த மக்களை மனமாற்றத்துக்கு அழைத்து அவர்களுக்கு மன்னிப்பளித்து நல்லாயனை போல் வழிகாட்டினார்.எனவே இயேசுவின் இந்த செயல் அதிகார வர்க்கத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் அமைந்தமையால் அவரை சிலுவையில் அறைந்து கொலை செய்தனர்.

இறுதியில் மனித வாழ்வினை அனைத்து சமூகத்தினருக்கும் உரித்தாக்கிட கொடூர சித்திரவதைகளுக்கும், கொலைகளுக்கும் முகம்கொடுத்து மரணித்தார். அதுமட்டுமன்றி, இயேசுநாதரின் உயிர் மூச்சு பிரிகின்ற வேளையிலும் உயரிய மனித பண்புகளை மண்ணில் வேறூன்றும் வகையில் ‘பிதாவே இவர்கள் அறியாமல் செய்கின்றார்கள். இவர்களை மன்னியும்’ என கூறியபடியே மரணித்தார். ஆகவே, இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் செய்தி அனைவருக்கும் நன்மையாகவும் ஆசிர்வாதமாகவும் அமைகின்றது.

15625767_1324288714308379_7985498584847290337_o

Leave a Reply