யாழ் கம்பன் கோட்டத்தில்,சிறப்பாக இடம்பெற்ற-  யாழ் ,இந்திய,மலேசிய  இலக்கிய வாதிகளின் சந்திப்பு-படங்கள்  விபரங்கள் இணைப்பு!

யாழ் கம்பன் கோட்டத்தில்,சிறப்பாக இடம்பெற்ற- யாழ் ,இந்திய,மலேசிய இலக்கிய வாதிகளின் சந்திப்பு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கொழும்பிற்கு வருகை தந்த இந்திய மற்றும் மலேசிய நாட்டு அறிஞர்கள் முப்பத்தைந்து பேர் 15.12.2016 வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தனர். இவர்களுக்கான வரவேற்பு வைபவமும் யாழ். இலக்கிய ஆர்வலர்களுடனான சந்திப்பும் 15.12.2016 வியாழன் மாலை நல்லூர் வடக்கு வீதியில் உள்ள கம்பன் கோட்ட மண்டபத்தில் நடைபெற்றது. 

நிகழ்வின் தொடக்கமாக மறைந்த ஈழத்து ஆக்க இலக்கியவாதிகளான கவிஞர் கல்வயல் வே.குமாரசாமி, சாகித்யரத்னா முல்லைமணி மற்றும் கலாநிதி ஆறு.திருமுருகனின் தாயார் சரஸ்வதி ஆறுமுகம் ஆகியோரது ஆன்ம சாந்தி வேண்டி ஒரு நிமிட மௌனப்பிரார்த்தனை இடம்பெற்றது. 
நிகழ்வில் செல்வி ச.ரவிச்சந்திரன் தமிழ்த்தெய்வ வணக்கம் இசைத்தார். கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் ச.லலீசன் தலைமையுரை ஆற்றினார். தலைவர் தனது தலைமையுரையில் இனத்தால், மதத்தால், தேசத்தால் நாம் வேறுபட்டிருப்பினும் தமிழால் இணைந்திருக்கின்றோம். தமிழின் பெயரால் நாம் ஒற்றுமையாக வாழ்வோம் என்றார். 
மேலும் எங்கள் மண்ணின் தாகங்களை ஏக்கங்களைச் சுமந்து செல்லுங்கள். உங்கள் ஊர்களில் எங்கள் கதைகளைச் சொல்லுங்கள். இங்கு தமிழ் வாழ்வு பெற்றால் உலகில் தமிழ் உன்னத நிலையில் வாழும் என்றார். 
தொடர்ந்து கருத்துரைத்த பேராசிரியர் எஸ் சிவலிங்கராஜா, சீறாப்புராணம் எழுதுவதற்கு எழுத்தாணி வழங்கியது யாழ்ப்பாணமே என்று தெரிவித்ததுடன் கடந்த காலங்களில் நிகழ்ந்த கசப்பான நிகழ்வுகளுக்காகத் தனது வருத்தத்தைத் தெரிவித்தார். பேராசிரியர்களாகிய நீங்களாவது சொல்லியிருக்கலாம் என்று சிலர் என்னிடம் கூறுகின்றனர்.  ஆனால் சொல்லி – இருக்கலாமோ தெரியாது என இரட்டை அர்த்தத்தில் குறிப்பிட்டார். 
மூத்த கவிஞர் சோ.ப. இலங்கையில் உள்ள கவிதைகள் பற்றியும் கவிஞர்கள் பற்றியும் கருத்துரைத்தார். இலங்கைக் கவிதைகள் பெருமை மிக்கவை என்றார். அவற்றுள் கிழக்கிலங்கை இஸ்லாமியக் கவிஞர்களின் கவிதைகள் முக்கியமானவை எனவும் குறிப்பிட்டார். 
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ், உலகளாவிய நிலையில் தமிழை உயர்த்த வேண்டும் என்றும் உலக நிலையில் தமிழ் மொழி வாழ்த்து ஆக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டார். 
வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், இஸ்லாமியர்களின் மீள்குடியமர்வு முக்கியமானது எனவும் இதற்குத் தன்னாலான பங்களிப்பு என்றும் உண்டு எனவும் குறிப்பிட்டார். 
வடமாகாண உறுப்பினர் அஸ்மின், இஸ்லாமிய எழுத்தாளர்களது வருகைக்கும் அவர்களுடனான சந்திப்புக்கும் அதிக எண்ணிக்கையில் இலக்கியகாரர்கள் வந்திருப்பது மகிழ்வைத் தருவதாகக் கூறினார். 
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன், தமிழகத்தில் தமிழ் ஊடகங்கள் கட்சி சார்ந்து இயங்குகின்றன. அத்துடன் அவற்றின் மொழிப்பிரயோகம் தமிழைத் தரம் தாழ்த்துவதாக அமைகின்றது. இந்த ஊடகங்கள் எம்மவர்களிடையேயும் செல்வாக்குச் செலுத்துகின்றது இவற்றிற்கு எதிராகப் போராட வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம் என்றார். 
இதே வேளை நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மாநாட்டு வருகையாளர் யாவரும் கருத்துக்களை வழங்கினர். யாழ். மண்ணில் தாம் கால்மிதித்தமை தமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டனர். 
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சி.பாஸ்கரா நிறைவுரையாற்றினார்.
வருகை தந்த குழுவில் கல்லூரிப் பேராசிரியர்கள், தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள், கவிதையாளர்கள், கட்டுரையாளர்கள், நாவலாசிரியர்கள், 
சிறுகதையாசிரியர்கள், குறும்பட இயக்குநர்கள், திரைப்படப் பாடலாசிரியர்கள் எனப் பலர் அடங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
படங்கள் –  ஐ.சிவசாந்தன்
dsc_0492 dsc_0493 dsc_0496 dsc_0500 dsc_0502 dsc_0503 dsc_0504 dsc_0508 dsc_0510 dsc_0511 dsc_0512 dsc_0513 dsc_0514 dsc_0515 dsc_0516 dsc_0521 dsc_0522 dsc_0523 dsc_0525 dsc_0526 dsc_0529 dsc_0530 dsc_0532 dsc_0534 dsc_0536 dsc_0537 dsc_0538 dsc_0540 dsc_0542 dsc_0543 dsc_0544 dsc_0546 dsc_0549 dsc_0552

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux