எங்கள்  ஊரின்  பண்பான மனிதனை இழந்து விட்டோம்-கலங்குகிறார் டென்மார்க்கிலிருந்து  இரா.சொ.லிங்கதாசன் அவர்கள்-படித்துப் பாருங்கள்!

எங்கள் ஊரின் பண்பான மனிதனை இழந்து விட்டோம்-கலங்குகிறார் டென்மார்க்கிலிருந்து இரா.சொ.லிங்கதாசன் அவர்கள்-படித்துப் பாருங்கள்!

நேற்று முன் தினம்(12.12.2016) எனது பாலர் பள்ளி ஆசிரியைகளில் ஒருவர் இறந்த செய்தியை முகநூலில் வெளியிட்டு இருந்தேன். நேற்றைய தினமும் இன்றைய தினமும்(13.12.16) அதற்கு பின்னூட்டம்(அனுதாபம், அஞ்சலி) தெரிவித்திருந்தவர்களுக்கு ‘நன்றி’ எழுதுவதற்கு முன்பாகவே அண்ணன் ஜெயரத்தினம்(ஜெயம்) அவர்களின் மறைவு பற்றிய செய்தி என்னை வந்தடைந்தது.

இதுவும் எனக்கு மிகப் பெரியதொரு அதிர்ச்சியே. காரணம் அண்ணன் ஜெயரட்ணம் அவர்கள் மிகவும் வயதான ஒரு மனிதன் அல்ல. அவரது வயது வெறும் 55 மட்டுமே. அவரை அவரது இளம் வயதில் இருந்து நாங்கள் அறிவோம். இலங்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் ‘டியூஷன் வகுப்பு’ நடத்துபவர்களின் கல்விப் பங்களிப்பு ஒவ்வொரு மாணவரின் கல்வியிலும், கல்விக் காலத்திலும் எத்துணை காத்திரமானது என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த வகையில் எனது கடந்த கால ‘டியூஷன் ஆசிரியர்களில்’ அண்ணன் ஜெயரட்ணம் அவர்கள் முக்கிய இடத்தைப் பெறுகிறார். இவர் எனது 5 ஆவது வகுப்பில் இருந்து எங்கள் கிராமமாகிய அல்லைப்பிட்டியில் எனக்கு ‘டியூஷன்’ ஆசிரியராக அறிமுகம் ஆகினார். பெரும்பாலான மாணவர்களைப் போலவே எனக்கும் 5 ஆவது வகுப்பில் இருந்து ‘கணித பாடம்’ வேப்பங் காயாக கசந்தது. அதனை, அந்தக் கசப்பை கொஞ்சமேனும் நீக்கியவர்களில் முதலிடத்தை அண்ணன் ஜெயரட்ணம் அவர்களுக்கு வழங்குவேன்.

இவர்களது சகோதரர்களும் கல்வியில் சிறந்து விளங்கியவர்களும், ‘டியூஷன் வகுப்பு’ நடத்தியவர்களுமே ஆவர். இருப்பினும் இவருக்கென்று ஒரு தனிப் பட்ட மதிப்பு இருக்கவே செய்தது. அதிகம் இரைந்து பேசாதவர்; இலங்கையில் அந்தக் காலத்தில் (80 கள்) டியூஷன் ஆசிரியர்களும் பாடசாலை ஆசிரியர்களைப் போலவே தன்னிடம் பயிலும் மாணவனை / மாணவியை அடித்தோ, கிள்ளியோ, ஆகக் குறைந்தது ‘காதை முறுக்கியோ’ தான் பாடம் நடத்தி வந்தனர். ஆனால் அண்ணன் ஜெயரட்ணம் அவர்கள் இவர்களுக்கு எல்லாம் விதி விலக்கு. இவர் என்னை மட்டுமன்றி இவரிடம் கல்வி பயின்ற ஏனைய மாணவர்களையும் அடித்தோ, கிள்ளியோ, காதை முறுக்கியோ, ஏசியோ(திட்டியோ) நான் பார்த்ததில்லை.

அவ்வளவு பண்பான, மென்மையான மனிதன். ஆனாலும் பட்டி மன்றங்களில் இவர் எந்தப் பக்கம் நின்று வாதிடுகிறாரோ, அந்தப் பக்கமே வெல்லும். அந்தளவுக்கு ‘வாதத்தில்’ திறமைசாலி. இவர் வேலணை மத்திய மகா வித்தியாலயத்தில்(சேர்.வைத்திலிங்கம் துரைசுவாமி மத்திய மகா வித்தியாலயம்) கல்வி கற்ற காலப் பகுதியில் தனது கல்வித் திறமையால் எங்கள் ‘அல்லைப்பிட்டிக் கிராமத்தின்’ முத்திரையை, சிறப்பை அந்தப் பாடசாலையில் அழுத்தமாகப் பதித்ததுடன், தனது பெற்றோருக்கும் பெருமை சேர்த்த ஒரு மகன். பின்னாளில் நான் அல்லைப்பிட்டியில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் பாடசாலைக்கு படிக்கச் சென்ற போதும் என்னைக் காணும்போதெல்லாம் தனது ஒரு மாணவனாகவே மதித்து நடத்தினார்.

நான் 10 ஆவது வகுப்பை அண்மித்தபோது என்னைக் காணும்போதெல்லாம் சொல்வார். “நீ எனது நம்பிக்கை நட்சத்திரங்களுள் ஒருவன். உன்னிடமிருந்து 8 பாடமும் ‘D’ (Distinction) என்ற பெறுபேற்றை(Result) எதிர்பார்க்கிறேன்” என்று அடிக்கடி சொல்வார். இது ஒரு ‘உளவியல் ஊக்குவிப்பு’ (Psychological motivation) என்றோ ‘உற்சாகப்படுத்தலின்'(Encouragement) ஒரு வகை என்பதோ அப்போது எனக்குத் தெரியாது. 1987 அக்டோபரில் 10 ஆவது வகுப்பு இறுதித் தேர்வுக்கு நாங்கள் படித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மூண்ட இந்தியப்படை , புலிகள் போர் காரணமாக வடக்கு, கிழக்கில் டிசம்பரில்(1987) நடைபெற வேண்டிய பரீட்சைகள் நடைபெறாமல் போனது. மறு பரீட்சை முன் அறிவிப்பு ஏதுமின்றி 1988 யூலையில் நடைபெற்றது. அப்போது என்னால் அண்ணன் ஜெயரட்ணம் அவர்கள் எதிர்பார்த்த பெறுபேற்றில் அரைவாசியைத்தான் எட்டித் தொட முடிந்தது.

வழமை போல அல்லைப்பிட்டி கிராமசபை அலுவலகத்தில் உள்ள ‘நூலகத்தில்’ நான் அவரை சந்தித்தபோது எனது பரீட்சை முடிவை நான் பயந்து கொண்டே மிகத் தயக்கத்துடன் கூறிய போது, எந்தவித முக மாற்றமும் இன்றி என்னை முதுகிலே தட்டிக் கொடுத்து என்னை வாழ்த்தினார். அத்துடன் நின்று விடாமல் “12 ஆவது வகுப்பில் உன்னிடம் இருந்து நான்கு பாடங்களுக்கும் ‘A’ (The outstanding performance) என்ற ரிசல்டை எதிர்பார்க்கின்றேன்.” என்றார். எனது குறைவான தேர்ச்சிக்கு என்ன சொல்லப் போகிறாரோ என்று பயந்து நின்ற எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம். இப்படி ஒரு பண்பான, நேர் மறையான சிந்தனை கொண்ட மனிதனை நான் பார்த்ததே இல்லை.

இவை மட்டும் அன்றி இவரது பெருமைகளை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. அவற்றில் முக்கியமான ஒன்றை இவ்விடத்தில் குறிப்பிட்டு முடிக்கிறேன். 1980 களில் எங்கள் அல்லைப் பராசக்தி வித்தியாலயத்துக்கு தேடாது கிடைத்த மாணிக்கமாய் வந்து சேர்ந்தவர் ஆங்கில ஆசிரியர் தே .மரியநாயகம் அவர்கள். அவர்தான் கலைகளின் பால் ஈர்க்கப் பட்டாலும், போதிய, உதவியின்றி, ஊக்குவிப்பு இன்றி துவண்டு போய்க் கிடந்த அல்லையூர்க் கலைஞர்களைத் தட்டி எழுப்பி, புத்துணர்ச்சி ஊட்டி புதுப் பொலிவுடன் முன்னேற வைத்தார்.

அவர் முதலும் கடைசியுமாக அல்லைப்பிட்டியில் பிரபல எழுத்தாளர்களை எல்லாம் அழைத்து(கே.டானியல், தெணியான், டொமினிக் ஜீவா, செங்கை ஆழியான் போன்றோர் ) ‘கலை, இலக்கிய இரவு’ என்றோர் விழாவை நடத்தினார். இந்த விழா சிறப்பாக நடைபெறுவதற்கு ஆசிரியர் மரியநாயகம் அவர்களுடன் தோளோடு தோள் நின்று உழைத்தோரில் அண்ணன் ஜெயரட்ணம் அவர்கள் முக்கியமான ஒருவர்.

அப்போது அல்லைப்பிட்டியில் உருவாகிய ‘இலக்கிய கலா மன்றத்தின்’ தலைவரும் இவரே. இத்தகைய சிறப்புகள் கொண்ட ஒரு மனிதனை எங்கள் ஊராகிய அல்லைப்பிட்டிக் கிராமம் ராணுவத்தால் 1990 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் அழிக்கப் படுவதற்கு சில மாதங்கள் முன்னர் சந்தித்தேன். அப்போதும் என் எதிர்காலம் பற்றியே பேசினார். அவரிடம் கல்வி பயின்ற அத்தனை மாணாக்கர்களும் குறிப்பிடத் தக்க விதத்தில் நல்ல நிலையிலேயே வாழ்கிறோம். இருப்பினும் கடந்த 26 வருடங்களாக அவரை நானோ, என்னை அவரோ தொடர்பு கொள்வதற்கு ‘கால தேவன்’ அனுமதிக்கவில்லை.

இது யாருடைய தவறும் அல்ல. விதி விட்ட வழி. நேற்று முன்தினம் எனது உறவினரும், அல்லையூர் இணையத்தின் இயக்குநருமாகிய சிவா செல்லையா அவர்களோடு பேசிய போது ‘அண்ணன் ஜெயரட்ணம்’ அவர்கள் உடல்நிலை மோசமடைந்து இருப்பதாக அறிந்தேன். அப்போது நான் சொன்னேன். “அவரது மனைவி, மகனுக்காகவேனும் இந்த இயற்கை அவரை நீண்ட காலம் வாழ வைக்கும்” என்றேன். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது. ஒரு சில மணி நேர இடைவெளிக்குள்ளேயே அண்ணன் ஜெயரட்ணம் அவர்களின் மரணச் செய்தி. வந்து சேர்ந்தது.

இதுதான் இயற்கையின் தீர்ப்பு என்றால் யாரால் அதை மீற முடியும்? இறைவன் என்னும் அந்த இயற்கையின் தீர்ப்புக்கு மதிப்பளித்து அண்ணனுக்கு விடை கொடுக்கிறேன். சென்று வாருங்கள் ‘ஜெயம்’ அண்ணா! அல்லைப்பிட்டியின் ‘மண் மறவாத மனிதர்களின்’ பட்டியலில் உங்களுக்கும் இடம் உண்டு. உங்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலியினைச் சமர்ப்பிக்கிறேன்.

உங்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் ஆத்மா சாந்தியடைந்து இறைவன் பாதங்களைச் சென்றடைய வேண்டுவதனைத் தவிர வேறென்ன என்னால் முடியும்?

“தண்ணீர் விட்டோ வளர்த்தோம்; சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?
எண்ணமெல்லாம் நெய்யாக எம் – உயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ?

“எழுமை ஏழ்பிறப்பும் உள்ளுவர் தம்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு (107) -வள்ளுவர்-

கனத்த இதயத்துடன்
உங்கள் முன்னாள் மாணவன் / நண்பன்/ ஊரவன்
இரா.சொ.லிங்கதாசன்
டென்மார்க்
14.12.2016

allaiyoor-copy-15

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux