எங்கள் கிராமத்து கற்பகதரு பனை

பண்டையகால தமிழர்களுடைய வாழ்வியல் முறை இயற்கையோடு ஒன்றாகப் பின்னிப்பிணைந்த ஒன்றாகவே இருந்துள்ளது என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு. இயற்கை அன்னையின் கொடைகளில் ஒன்றான பனை வளம் யாழ் குடாநாட்டு மக்களின் நடைமுறை வாழ்வோடு இறுகப்பின்னிப் பிணைந்திருந்த முறைபற்றி இன்றைய இளம் தலைமுறையினர் அறியவில்லை என்பது கவலையான ஒரு விடயமாகும்.
யாழ் குடாநாட்டு பழங்குடி மக்கள் பனை ஓலைகளால் வேயப்பட்ட வீடுகளிலேயே வாழ்ந்தார்கள். அது தவிர புதிதாக வீடு கட்டுவதற்கும் பனை மரங்களில் இருந்து பெறப்பட்ட மரக்குற்றிகள், சிலாகைகள், வளைவுகள் என்பவற்றை அவர்கள் பயன்படுத்தினார்கள். பனை மரம் மூலம் பெறப்பட்ட பொருட்களின் இருந்து கட்டப்பட்ட வீடுகள் வெயில் காலத்தில் குளிர்ச்சியையும் மழைகாலத்தில் இதமான வெப்பத்தையும் கொடுத்தது. இதனால் வருடம் முழுவதும் சிறந்த சுவாத்தியத்துடன் அவர்கள் ஆரோக்கியமாகவும் மனநிறைவோடும் வாழ்ந்தார்கள்.
அவர்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்த பனை மரங்கள் குடாநாடு எங்கும் பனத்தோப்புகளாகக் காட்சியளித்தது. பனங்குருத்தோலைகள் கொண்டு அக்காலத்தில் பல விதமான பாய்கள் இழைக்கப்பட்டன. இப்பாய்களிலே அவர்கள் படுத்து உறங்கினார்கள். சாயம் பூசப்பட்ட வர்ண வேலைப்பாடுகள் கொண்ட பாய்களைக் கொண்டு விருந்தினர்களுக்கு ஆசனம் அமைத்துக் கொடுத்தார்கள். வீட்டிற்கு யாராவது விருந்தினர்கள் வந்தால் முதலில் மூலையில் சுருட்டி வைத்திருக்கும் பாய்களை உதறி விரித்துப்போடும் பழக்கம் அவர்களிடம் இருந்தது. அக்காலத்தில் பனை ஓலையின் பயன்பாட்டிற்கு எல்லையே இல்லை எனக்கூறலாம்
வீடுகளில் அன்றாடம் பாவிக்கும் பொருட்களுக்கும் பனைக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. சமையலறைகளில் பயன்படுத்தப்பட்ட சுளகு, பெட்டி, கடகம் , திருகணை, உறி போன்றவையும் பனம் பொருட்களாகவே இருந்தன. மேலும் கதிர்ப்பாய்கள் என்று அழைக்கப்படும் பாய்களுக்கு காரணப்பெயராகவே இப்பெயர் அமைந்திருந்தது. கமக்காரர்கள் தங்கள் உழைப்பின் மூலம் பெறப்பட்ட நெல், தினை, குரக்கன், வரகு, உழுந்து, பயறு, சணல், புழுக்கொடியல், ஓடியல், மிளகாய், போன்றவற்றை வெளியில் காயப்போடுவதற்காக பெரிய பாய்களைப் பயன்படுத்தினார்கள். இதனால் இப்பெரிய பாய்களை கதிர்ப்பாய்கள் என்று அழைத்தார்கள்.
19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பனை ஓலை கொண்டு பின்னப்பட்ட மிகப்பெரிய பாரிய கூடைகளிலேயே கமக்காரர்கள் நெல்லை சேமித்து வைத்தார்கள். வீட்டின் சாமியறைகளில் வைக்கப்படும் கோர்க்காலிகளில் நான்கு, ஐந்து கூடைகளில் பல தரப்பட்ட பொருட்களை அவர்கள் களஞ்சியப்படுத்தும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள். இக்கூடைகள் சாதாரணமாக ஏழு, எட்டு அடி உயரத்தையும் ஐந்து, ஆறு அடி விட்டத்தையும் கொண்டவையாக அமைந்திருந்தன.
கூறைச்சீலைகள், பட்டுவேட்டிகள் போன்ற முக்கிய பெறுமதி மிக்க ஆடைகள் திறந்து மூடக்கூடிய நீள் சதுர பெட்டிகளில் வைத்து அப்பெட்டிகளை பெட்டகங்களுக்குள் வைத்துப் பாதுகாத்தார்கள்
கிணறுகளில் இழுத்து நீரை அள்ளுவதற்கு துலாக்களே அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டன. அதுமாத்திரமல்லாமல் நீரை மொண்டு அள்ளுவதற்கும் பனை ஓலை பட்டைகளைப் பயன்படுத்தினார்கள். வயல் பிரதேசங்களில் அமைந்திருந்த துரவுகள் மூலம் கைப்பட்டைகள் கொண்டு சிறுபயிற்ச்செடிகளுக்கு நீர் வார்த்தார்கள்.
யாழ் குடாநாட்டு மக்களின் வணக்க வழிபாட்டு இடங்களான கோவில்களிலும் பனை ஓலைகளைப் பயன்படுத்தினார்கள். விபூதி வைப்பதற்கும் பூக்கள் கொய்வதற்கும் பனை ஓலைக்குடுவைகளையும் பயன்படுத்தினார்கள்.
ஆயுள் வேத வைத்தியர்கள் வாடகங்களை எழுதுவதற்கும், சோதிடர்கள் சாதகங்களை எழுதுவதற்கும் ஓலைச் சுவடிகள் கையாளப்பட்டன. பண்டைய காலத்தில் நூல்களை யாத்தவர்களும் ஓலைச்சுவடிகளைப் பாவித்தார்கள்.
பனையில் இருந்து பெறப்படும் பனங் கள்ளை பிளாவில் குடிப்பதை இன்பமாகக் கருதினார்கள் அக்கால பெருங்குடிமக்கள். அவர்களின் விறகுத் தேவைகளையும் பனை, ஓலைகள், மட்டைகள், பன்னாடைகள்ம் கொக்காரைகள், ஊமல்கள் கொண்டு நிறைவேற்றினார்கள்.
பனங்கட்டிகளுக்கான குட்டான்களை பனை ஓலைகொண்டு உருவாக்கினார்கள். காசு, வெற்றிலை, பாக்கு என்பவற்றை வைப்பதற்கு அக்காலப் பெண்கள் கொட்டைப்பெட்டிகளை உபயோகப்படுத்தினார்கள். இக்கொட்டைப் பெட்டிகள் சாயம் பூசப்பட்டு அழகுடன் மிளிர்ந்தன. காட்டுக்கரைகளில் ஆடு, மாடுகளை மேய்ப்பவர்கள் பனை ஓலைத் தொப்பிகளை கட்டாயம் அணிபவர்களாக விளங்கினார்கள்.
யாழ் குடாநாட்டு மக்களிடையே ஆட்டு இறைச்சி பங்கு போடல் முக்கியமான ஒன்றாகும். இவ்ஆட்டு இறைச்சிகளை பச்சை பனை ஓலைகளில் பொதி செய்து பங்கு பிரிப்பவர்களுக்கு அனுப்பும் பழக்கம் இன்றும் காணப்படுகின்றது. இதனால் இறைச்சி பழுதடையாமல் பல மணி நேரத்திற்கு பாதுகாக்கப்படும் தன்மை உண்டு. பனை தறிக்கப்படும் போது கிடைக்கும் பனங்குருத்து மிகவும் சுவை கொண்டதுடன் அபூர்வ ஆயுள்வேத மூலிகையாக் கருதப்படுகிறது.
அக்காலத்தவர்கள் பட்டியாக வளர்க்கப்படும் மாடுகளுக்கு பனை ஓலைகளை உணவாக வழங்கினார்கள். துலாக் கயிறுகளையும் ஆடு, மாடுகளை கட்டுவதற்கான கயிறுகளையும் வடங்களையும் பனை நார் கொண்டு தயாரித்தார்கள்.
அக்கால மக்களின் இனிப்புத் தேவையை பதநீர் மூலம் பெறப்படும் பனங்கட்டி, பனஞ்சீனி, பனங்கற்கண்டு ஆகியவை பூர்த்தி செய்தன. அத்துடன் பனாட்டை காலையிலும் ஒடியற்கூழை பகலிலும் ஒடியற்பிட்டை இரவிலும் உணவாக உண்டார்கள். இடைவேளைகளில் புழுக்கொடியல், பதநீர் போன்றவற்றை உண்டார்கள். இதன் காரணமாக அவர்கள் மிகவும் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள். தினைமாவும் பனம் பழச்சாறும் சேர்த்து செய்யப்படும் பனங்காய்ப் பணியாரங்களை வயது வேறுபõடு இன்றி அனைவரும் உண்டு மகிழ்ந்தார்கள். தங்களின் தாகசாந்திக்கு நொங்குகளை பயன்படுத்தியதுடன் பனங்குரும்பைகளை அரித்து கறவை மாடுகளுக்கு உணவாக வழங்கினார்கள்.
யாழ். மாவட்டத்தின் பணப்பயிர்களில் ஒன்றான புகையிலை தென் இந்தியõவிற்கும், தென் இலங்கைக்கும் அனுப்பப்படும் போது புகையிலை சிப்பங்களைக் கட்ட பனை ஓலைகள் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டன. பஞ்சம் போக்கி என சிறப்பாக குடாநாட்டு மக்களால் அழைக்கப்படுகின்ற பனை வளமானது அக்காலத்தில் சீதனம் வழங்கப்படும் போது பனங்கூடல்களாக முக்கியத்துவம் பெற்றிருந்தது.
‘கற்பகம் பொலியும் கடவுட்பனை வாழி’ என நவாலியூர் சோம சுந்தர புலவர் கூட பனையை வாழ்த்திப் பாடியிருக்கிறார். எனவே அக்கால யாழ் குடாநாட்டு மக்களின் வாழ்வோடு பனை இறுகப் பின்னிப் பிணைந்திருந்தது என்பது தெளிவாகின்றது. பனையின் பெருமையறிந்து யாழ்ப்பாணத்தில் தற்போது குறைந்துள்ள பனைவளத்தை வளப்படுத்துவதற்கு வீடுதோறும் பனங்கன்றுகளை நாட்டுவோம்.. அதன் மூலம் பயன் பெறுவோம்

Leave a Reply