மண்கும்பான் செட்டிகாட்டுப் பகுதியில்,மிகப்பிரமாண்டமாக 100 அடி உயரத்தில் நீர்த்தாங்கி ஒன்று அமைக்கப்படுகின்றது-இதன் கட்டிடப்பணிகள் நிறைவுக் கட்டத்தை நெருங்கியுள்ளதை,நாம் பதிவு செய்த கீழ் உள்ள படங்கள் எடுத்துக் காட்டுகின்றன.ஆனால் இத்தண்ணீர்த் தொட்டி எதற்காக மண்கும்பானில் அமைக்கப்படுகின்றது என்பதனை இதுவரை இப்பகுதி மக்களால் அறிந்து கொள்ள முடியவில்லை-இது மழைநீர் சேகரிப்புத் தொட்டி என்றும்-இதில் சேகரிக்கப்படவுள்ள மழைநீர் மண்டைதீவு மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும்-15.10.2016 அன்று யாழிலிருந்து வெளியாகும் உதயன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.இதன் உண்மைத்தன்மையினை எம்மால் உறுதிபடுத்த முடியவில்லை.
இதோ உதயன் வெளியிட்ட செய்தியின் மீள் பதிவு ….
மண்டைதீவு மக்களின் நீண்டகால குடிநீர் தேவைகளை பூர்த்திசெய்யும் முகமாக -மண்கும்பான் பிரதேசத்தில் மழை நீர் சேகரிப்புத்தொட்டிகள் அமைக்கும் பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன.
நகர அபிவிருத்தி நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை போன்றவற்றினூடாக மீசாலை , பூநகரி, நாவற்குழி, கட்டுடை, வேலணை, மண்கும்பான் , மண்டைதீவு போன்ற பகுதிகளிற்கு நீர் வழங்குவதற்கான பாரிய அளவில் மழை நீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் மண்டைதீவுப் பகுதியில் நீண்ட காலமாக நிலவி வருகின்ற குடி நீர் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக மண்கும்பான் செட்டிகாட்டுப் பகுதியில் குறித்த நீர்த்தாங்கி அமைக்கப்பட்டு வருகின்றது.
இதற்கான கட்டுமானப்பணிகள் வரவிருக்கும் மழைகாலத்தை முன்னிட்டு துரிதகதியில் இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு குறித்த நீர்த்தொட்டியின் பணிகள் முடிவடையும் தறுவாயில் தமது குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள் எனவும் மண்டைதீவு பிரதேச மக்கள் மகிழ்ச்சி வெளி யிட்டுள்ளார்கள்.