கண் என்பது இந்த உலகத்தைக் கண்டு இரசிப்பதற்கு எமக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பாகும். அது ஒரு நிழற்படக்கருவியைப் போன்று இயங்குகின்றது. ஒளியின் உதவியுடன் ஒரு நிழற்படக்கருவி பொருட்களைப் படம் பிடிப்பதைப் போல, ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம்பிடித்து, மனதில் பதிவு செய்து, பின்னர் அதை மூளையில் விருத்தி செய்கிறது. அதுமட்டுமின்றி, எமது உள்ளத்து உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பவை கண்களே.
அதனால் தான் கண்களில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் எமது ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, அழகுக்கும் உகந்ததல்ல என கூறப்படுகின்றது. எனினும், துரதிஷ்ர்டவசமாக கண்களில் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் சிலருக்கு நிவர்த்திசெய்ய முடியாத நிரந்தரமான பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்தி விடுகின்றன.
பொதுவாக பார்வைக் குறைபாடு என்பது இயற்கையாக அல்லது இடையில் ஏற்படும் விபத்துகள், நோய்நொடிகள் காரணமாக ஏற்படுகின்றது.
இதில் இயற்கையாக ஏற்படும் பார்வை குறைப்பாட்டை தாங்கிக் கொள்ளும் ஆற்றல் ஒரளவுக்கு இருக்கும். காரணம் தமது குறைப்பாட்டை அறிந்து அதற்கேற்ப வாழ பழகியிருப்பார்கள். எனினும், விபத்துக்கள் நோய்நொடிகள், அறியாமை காரணமாக இடைநடுவே பார்வையை இழந்தவர்களிடம் அதை ஏற்றுக் கொண்டு வாழும் வலிமை குறைவாகவே காணப்படும். உலகளாவியரீதியில் 20.5 மில்லியனுக்கு அதிகமான மக்கள் விழிப்புலனற்றோராகவுள்ளதாக அரசசார்பற்ற நிறுவனங்களின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இலங்கையை பொறுத்தவரை சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு அதிகமானோர் விழிப்புலன் அற்றவர்களாக உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. எனவே, விழிப்புலனில் ஏற்பட்டிருக்கும் குறைபாடு காரணமாக பார்வையை இழந்தோரை கௌரவிக்கவும், அவர்களுடைய உணர்வுகளை புரிந்துகொண்டு உதவி செய்யும் முகமாகவும் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி வெள்ளை பிரம்பு தினம் அல்லது விழிப்புலனற்றோர் தினம் உலகளாவியரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது.
விழிப்புலனற்ற மனிதர்களின் மீது உலக மக்களின் கவனம் ஈர்க்கப்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு விதமான நிகழ்ச்சித் திட்டங்கள், பாதயாத்திரைகள் என்பன இத்தினத்தில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. மூன்றாம் உலக நாடுகளை விட மேற்கத்தேய நாடுகளில் வெள்ளைப்பிரம்பு தினத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதைக் காண்கிறோம்.
‘வெள்ளைப் பிரம்பு’ உலக விழிப்புலனற்றோர் சம்மேளனத்தினால் 1969 ஒக்டோபர் 15 முதல் ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. வௌ்ளை பிரம்பின் பின்னணியினை ஆராய்வோமானால், இரண்டாவது உலக மகாயுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்கா ஜப்பானில் ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் அணுகுண்டை வீசியது என்பது உலக வரலாற்றில் மறக்க முடியாத ஒருகறை படிந்த நிகழ்வாகும்.
எனவே, அத்தகையதோர் பாரிய அழிவுக்கு பின்னர் அப்பகுதிகளில் பிறக்கின்ற பல குழந்தைகள் பார்வைக் குறைபாடுகளுடன் பிறந்தனர். எனவே, ஜப்பானில் அதற்கான சிகிச்சையினை பெற்றுக்கொள்வதற்காக வைத்தியர் Hey யை மக்கள் நாடினார்கள். எனினும், தன்னை நாடி வந்தவர்களில் பெரும்பாலானோருக்கு பார்வையை பெற்றுக் கொடுக்க வைத்தியரால் முடியவில்லை. எனவே இத்தகையதொரு பரிதாபகரமான நிலைமையை எதிர்நோக்கியவர்களை மனிதர்கள் என்ற வகையில் சமூகத்தில் நடமாட வைப்பதற்கு புதிய முறையொன்றினை தேடினார்.
அதன் பிரதிபலனாக உருவானதே வெள்ளைப் பிரம்பாகும். வைத்தியர் Hey யின் சிந்தனையில் விசையும், திசையும் (Mobility and Oriyantation)உருவானது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் நகர்வதற்கு பயன்படுத்திய முறையில் வெள்ளைப் பிரம்பு மகத்துவம் பெற்றது.
வெள்ளைப் பிரம்பைப் பயன்படுத்துவோர் விழிப்புலனற்றோர் ஆவர். இவ்விழிப்புலனற்றோர், ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு நகரும்போது அல்லது நடமாடும்போது அவர்களுக்கு பக்கத்துணையாக தாம் நகரும் இலக்கை நோக்கிய பயணத்திற்கும் வெள்ளைப் பிரம்பு வழிகாட்டுகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக, வெள்ளைப் பிரம்பினை பயன்படுத்தி வரும் ஒருவரை விழிப்புலனற்ற ஒருவர் என்று இனம் கண்டு கொள்ளவும், அவர்களுக்கு உதவுவதற்கும் வெள்ளைப்பிரம்பு உதவுகின்றது.
இதற்கான உலக அங்கீகாரம் 1969 இல் கிடைத்தது. அதுமட்டுமின்றி, இலங்கையில் 30 வருடங்களுக்கு மேற்பட்ட யுத்தத்தின் காரணமாக தமது அவயங்களை இழந்தவர்களில் அதிகமானோர் பார்வையை இழந்தவர்களாகவுள்ளனர். பார்வையற்றவர்களை குறைவாக பார்க்காமால் சக மனிதனைப் போல் ஏற்றுக்கொண்டு உதவி செய்ய முன்வருவோம்.
மேலும் நவீன தொலைத்தொடர்பு சாதனங்களின் அதீத பாவனை, முறையற்ற உணவு பழக்கவழக்கங்கள் என்பன காரணமாக இன்று இளையவர்கள் மத்தியில் அதிகமான பார்வை குறைப்பாடுகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றது. அலட்சியத்தினால் பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய கண்களையும் இழக்காதிருப்போம்.