ஜெயலலிதாவை எச்சரிக்கும் குஸ்பு—-

எங்கள் தலைவரை ஜெயலலிதா வம்புக்கு இழுப்பதும் அவரது குடும்பத்தினரை விமர்சிப்பதும் பண்பாடு ஆகாது. எங்களாலும் கீழே இறங்கி பேச முடியும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் சமீபத்தில் திமுகவில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட நடிகை குஷ்பு.
கற்பு குறித்துப் பேசி சிக்கிக் கொண்ட நடிகை குஷ்பு அந்த வழக்குகளிலிருந்து சமீபத்தில் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து வேகம் வேகமாக அவர் திமுகவில் இணைந்தார். தற்போது திமுகவின் பிரசார பீரங்கிகளில் ஒருவராக மாறியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தொடர்ந்து முதல்வர் கருணாநிதியை தாக்கிப் பேசி வருவதை கண்டித்து குஷ்பு ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் ஜெயலலிதாவை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து குஷ்பு கூறுகையில்,

ஜெயலலிதாவுக்கு கோவை, திருச்சி கூட்டங்களில் மக்கள் அலைமோதியதாக சொல்கின்றனர். அது மக்கள் கூட்டம் அல்ல. கடந்த தேர்தலில் தோற்றதும் அவர் வெளியே வரவில்லை. ஓய்வு என்று அறைக்குள்ளேயே இருந்தார். நாலரை வருடங்களாக அவரை பார்க்க முடியவில்லை.

எனவே வேடிக்கை பார்க்க அவரது கட்சிகாரர்களே திரள்கிறார்கள். அவரது தோல்விக்கு கவுண்ட்டவுன் ஆரம்பமாகி விட்டது.

எங்கள் தலைவரை ஜெயலலிதா வம்புக்கு இழுப்பதும் அவரது குடும்பத்தினரை விமர்சிப்பதும் பண்பாடு ஆகாது. எங்களாலும் கீழே இறங்கி பேச முடியும். ஆனால் நாகரீகமாக பேசுங்கள் என்று சமீபத்தில் நடந்த பேச்சாளர் கூட்டத்தில் கலைஞர் கூறியுள்ளார்.

ஜெயலலிதா எங்கு வேண்டுமானாலும் கூட்டங்கள் நடத்தி பேசட்டும். நாங்கள் அவரது கூட்டங்களை வேடிக்கையாகத்தான் பார்க்கிறோம். அவற்றை போட்டியாக எடுத்துக் கொள்வது இல்லை. எங்களுக்கு அந்த கூட்டங்களால் எந்த பாதிப்பும் இல்லை என்று பேசியுள்ளார் குஷ்பு.

Leave a Reply