அன்புடன் ஆதரிக்கப்பட வேண்டியவர்கள் முதியோர்கள்-முதியோர் தின சிறப்புக் கட்டுரை இணைப்பு!

அன்புடன் ஆதரிக்கப்பட வேண்டியவர்கள் முதியோர்கள்-முதியோர் தின சிறப்புக் கட்டுரை இணைப்பு!

இவ்வுலகில் பிறந்த எந்த ஒரு உயிரினமும் என்றோ ஒரு நாள் மரணத்தை சந்தித்தேஆக வேண்டும். மனிதர்கள் மட்டுமல்ல செடி, கொடி, மற்றும் பறவைகள், மிருகங்களும் கூட ‘முதுமை’ எனும் பருவத்தினை என்றோ ஒரு நாள் அடைந்தே தீர வேண்டும்.

கட்டான உடலழகோடும் கம்பீரத் தோற்றத்தோடும் திகழ்ந்த அன்றைய இளைஞர்கள் இன்று முதியோர் என்ற பெயரிலே முத்திரை பதித்து பெரும்பாலானோர் பரிதாபத்தோடு வாழ்ந்து வருவதையும் நாம் காண்கின்றோம்.இன்றைய நவீன உலகிலே ‘முதியோர்’ என்றால் அதன் முக்கியத்துவம் குறிப்பாக இன்றைய இளைஞர் மத்தியில் உணரப்படுவதில்லை. இது ஒரு துரதிஷ்டமானது.

முதியோர் என்றால் கடந்த காலங்களில் உண்டு, கழித்து வாழ்ந்து முடித்தவர்கள்; வைத்தியசாலையும், மருந்துமாகத் திரிபவர்கள்; வலுவிழந்தவர்கள்; உடல் தளர்ந்தவர்கள் என்றெல்லாம் சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

முதியோர்கள் யார் என்பதை நாம் நன்கு சிந்தித்துப் பார்ப்போமானால் அவர்கள் வேறு யாருமல்ல… நம் பெற்றோர்கள்; நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கியவர்கள்; நமக்காக உழைத்து உருக்குலைந்தவர்கள்; நம்மை வாழ வைத்தவர்கள்; அனுபவசாலிகள் ;இளம் சமுதாயத்தின் எதிர்கால வழிகாட்டிகள்; இவ்வுலகில் நாம் கண்ட தெய்வங்கள்.

இவர்கள் அன்பாக, பண்பாக, பாசத்தோடு பிள்ளைகளால் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். இது பிள்ளைகளின் தலையான கடமையாகும். அதேவேளை முதியோர்களை பாதுகாப்பதும் சமுதாயத்தின் பொறுப்பாகும். நமக்கொரு பிள்ளை பிறந்தால் அதற்காக நாம் எவ்வளவோ அன்பு காட்டுகின்றோம். அதன் பாதுகாப்புத் தொடர்பாக நாம் எத்தனையோ அக்கறை எடுக்கின்றோம் ஆனால் நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கி வாழ வைத்த கண் கண்ட தெய்வமான, முதுமையடைந்த நம் பெற்றோரின் நலனில் அக்கறை காட்டுகின்றோமா என்றால் பெரும்பாலும் அது வேதனை கலந்த விடையாகவே இருக்கின்றது.

இலங்கையில் முதியோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் முதியோர்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாங்கம் அவர்களின் நலனைப் பாதுகாப்பதற்கும் உரிமைகளை மதிப்பதற்கும் 2000ம் ஆண்டின் 9ம் இலக்க முதியோர் உரிமை பாதுகாப்புச் சட்டத்தினை இயற்றி, இச்சட்டத்தின் மூலம் முதியோர்களின் உடல், உள ,சமய, சமூக, நலன்புரி நடவடிக்கைகளில் அக்கறை காட்டி வருகின்றது.

மேலும் ஐக்கிய நாடுகள் சபை ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியை முதியோர் தினமாகப் பிரகடனப்படுத்தி முதியோர்களைக் கெளரவப்படுத்தியும் வருகின்றது. 1991ஆம் ஆண்டிலிருந்து அனுஷ்டிக்கப்பட்டு வரும் இத்தினம் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தேசிய விடுமுறை தினமாகவும், ஜப்பான் போன்ற நாடுகளில் முதியோரை கெளரவிக்கும் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

அத்தோடு முதியோர்களுக்கென தேசிய சபையும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இச்சபையினூடாக முதியோர்களுக்கான பிரச்சினை தொடர்பில் தீர்வினைப் பெற்றுக் கொள்ளவும் முடியும். மேலும் முதியோர் பாதுகாப்புத் தொடர்பில் இலவச சட்ட உதவிகள் பெற பல ஏற்பாடுகள் இருந்த போதிலும் இவற்றைப் பெரும்பாலான பாமர முதியோர் அறிந்திருப்பதில்லை. இது தொடர்பில் முதியோர்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்குகள் நடத்தப்பட வேண்டும்.

முதியோர் தமது தேவைகளை இலகுவாக நிறைவேற்றிக் கொள்வதற்கும் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்குமாக அரசாங்கம் (தேசிய முதியோர் செயலகம்)பல செயல் திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது. முதியோர்கள் தமது தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் பூர்த்தி செய்து கொள்வதற்காக முதியோர்களுக்கென விசேட அடையாளஅட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த அடையாள அட்டை வைத்திருப்போர் பொலிஸ் நிலையம், வைத்தியசாலை, பஸ் வண்டி, மற்றும் தபாலகம் போன்ற இடஙகளில் முன்னுரிமை அடிப்படையில் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

கண்களில் வெண்படலம் ஏற்பட்டிருப்பின் இழந்த பார்வையை மீளப் பெற இலவச கண்சிகிச்சை, தனிமையினைப் போக்க பகல் நேர பராமரிப்பு நிலையம், 70 வயதைத் தாண்டியோருக்கு நிதி உதவிகள், இவைகளுக்கு மேலாக உளவியல் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஆலோசனை சபையும் ஏற்படுத்தப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

இன்றைய நவீன உலகில் இன்பங்களை அனுபவித்து வருவோர் பலர் முதுமையினை வெறுப்புடனே நோக்குகின்றனர். இந்த வெறுப்பின் வெளிப்பாடாக இன்று தனது பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் வீதியோரங்களிலும், அநாதை இல்லங்களிலும் வேதனையோடு காலம் கழித்து வருவதையும் காண்கின்றோம்.

சில வேளைகளில் மனைவி மக்களின் கடும் வேதனை மிகுந்த சொற்களையும் தாங்கிக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் ஏற்படுகின்றது. இதனால் முதியோர் பலர் மனப்பாதிப்படைந்து வேதனையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

முதியோர்கள் அறிவும் ஆற்றலும் பலதுறைகளில் அனுபவமும் கொண்டவர்கள். இவர்களது அறிவும் ஆலோசனையையும் பெறக் காத்திருக்கும் இளம் சமுதாயத்தினருக்கு பயன்படக் கூடிய வகையில் பல செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம்.

முதுமைக் காலத்தில் தனிமை, ஏக்கம், மற்றும் சதா சிந்தனையும் நிறைந்த நிம்மதியற்ற நிலையும் நிறைந்திருக்கும். இவற்றைப் போக்கி சந்தோஷமாகவும் துடிதுடிப்புடனும் வாழ வேண்டுமானால் மக்களுடன் தொடர்புடைய சமூகநல அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட வேண்டும். அப்போது தனிமையும் ஏக்கமும் பறந்தே போகும்.கிராம அபிவிருத்திச் சங்கம், ஓய்வூதியம் பெறுவோர் சங்கம்,மத்தியஸ்த சபை, முதியோர் சங்கம், சுற்றாடல் பணிகள், சிரமதான நடவடிக்கைகள் போன்ற சமூகநல செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் சொந்த வாழ்க்கைக்கு நிம்மதி கிடைப்பதோடு சமூகமும் பயன் பெறக் கூடியதாக இருக்கும்.

முதியோர்களில் பெரும்பாலானோர் பல்வேறுபட்ட நோய்களாலும் ஊட்டச்சத்துக்குறைவினாலும் பாதிக்கப்பட்டு அவதியுறுகின்றனர். இவர்களுக்கு மருந்து மாத்திரைகள் மற்றும் உடற்பயிற்சியும் முக்கியமாகும். இது தொடர்பில் முதியோர்களுக்கும் அவர்களைப் பராமரிப்போருக்கும் அறிவூட்டப்படல் வேண்டும்.

முதுமைக் காலத்தில் ஊட்டச்சத்து மிகமுக்கியமானதாகும். வீடுகளில் தனிமையில் இருந்து காலத்தை கழிப்பதை விட ஆத்ம திருப்திக்காகவும் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவது சாலச் சிறந்ததாகும். இதன் மூலம் கிருமிநாசினி பாவனையற்ற போஷாக்கு மிக்க மரக்கறிவகைகள், மற்றும் பழ வகைகளையும் பெற்றுக் கொள்வதோடு இதன் மூலம் அரசின் வீட்டுத் தோட்டத் திட்டத்திற்கும் ஆதரவு வழங்கியதாகவும் முடியும்.

முதியோர் சிலர் ‘நாம் முதியோர்தானே’ என நினைத்து அன்றாட சுகாதாரப் பழக்கவழக்கங்களில் அக்கறை காட்ட தவறி விடுகின்றனர். இது வெறுக்கத்தக்க செயலாகும். ‘சுத்தம் சுகம் தரும்’ என்பதை எக்காலத்திலும் மறந்து விடக் கூடாது.

ஆரோக்கிய நடைமுறைகளை கூடியளவு பின்பற்றி வந்தால் நோய்கள் மற்றும் பல சிக்கல்களிலிருந்து முடிந்தளவு முதியோர் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

எம்.ரி.ஏ. கபூர்
(ஊடகவியலாளர்)
பொதுச் செயலாளர், சிரேஷ்ட
பிரஜைகள் சம்மேளனம்
நிந்தவூர்.

SONY DSC

colelder110842874_4826506_30092016_spp

SONY DSC

SONY DSC

SONY DSC

SONY DSC

SONY DSC

SONY DSC

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux