நாம் பிறந்த மண்ணிலேயே இறுதி மூச்சை விடவேண்டும்-தாயகம் திரும்பிய தாய்-படித்துப் பாருங்கள்!

நாம் பிறந்த மண்ணிலேயே இறுதி மூச்சை விடவேண்டும்-தாயகம் திரும்பிய தாய்-படித்துப் பாருங்கள்!

உலகின் எந்த மூலைமுடுக்கு பகுதிக்குச் சென்று வாழ்ந்தாலும் எங்களுடைய சொந்த மண்ணில் வாழ்வது போல் வராது. இந்த மண்ணிலிருந்து சென்று 20 வருடங்களாகின்றது. இன்று மீண்டும் இங்கு வருவதற்கு சந்தர்ப்பம் கிடைத்ததை நினைத்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். என்னுடைய இறுதி மூச்சை நான் பிறந்து வளர்ந்த இந்த மண்ணில் தான் விடவேண்டும்”

இவ்வாறு கண்களிலிருந்து கண்ணீர் சொரிய தெரிவித்தார் இந்தியாவின் அகதி முகாமிலிருந்து நாடு திரும்பிய மூர்ஜகன் என்ற வயதான தாய்.

பொதுவாக ஒரு மக்கள் கூட்டத்தினர் தமது காலநிலை, பண்பாடுகளுடன் கூடிய பிரதேசத்திலிருந்து பல்வேறு காரணங்களின் நிமித்தம் பிறிதொரு பகுதிக்கு தற்காலிகமாக நகர்வதை இடப்பெயர்வு என்பர். அந்த வகையில் ஈழத்தமிழ் மக்களின் வாழ்வில் இன ஒடுக்குமுறைகள் தொடங்கிய காலத்திலிருந்து இடப்பெயர்வுகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்திருந்தன.

அதுமட்டுமின்றி யுத்தத்தின் கோரத் தாண்டவம் வடக்கு, கிழக்கு பகுதியில் அரங்கேறிய போது ஷெல் குண்டுகள், கைக்குண்டுகள், திடீர் கைதுகள், மரண ஓலங்கள் என்பவற்றின் மத்தியில் தமது வண்ணக் கனவுகளை சிதைத்து எந்நேரமும் பயத்துடனும், அச்சத்துடனும் வாழ்ந்தார்கள். இத்தகையதொரு சூழ்நிலையில் தான் வாழ வேண்டும் என்ற துடிப்பிலும், ஆசையிலும் பலர் உள்நாட்டுக்குள்ளும், வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்ந்தார்கள்.

எனவே அத்தகைய இடப்பெயர்வின் பிறிதொரு வடிவமாக இந்தியாவை நோக்கிய ஈழத் தமிழர்களின் நகர்வுகள் அமைந்தன. 1983 ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட கலவரங்கள், யுத்த நிலைமைகள் காரணமாக 3,04,269 பேருக்கு அதிகமானோர் தமிழ் நாட்டுக்கு அகதிகளாக சென்றுள்ளதாக அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.

இவர்கள் தமிழ்நாட்டில் திருச்சி, மதுரை, இராமநாதபுரம், சென்னை போன்ற இடங்களிலுள்ள அகதி முகாம்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் வசித்து வந்தவர்களாவர்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த போதிலும் அவர்கள் இலங்கைக்கு திரும்புவதில் காணப்பட்ட சட்டச் சிக்கல்கள், பாதுகாப்புக் கெடுபிடிகள் என்பவற்றின் காரணமாக பல்வேறு சவால்களை எதிர்கொண்டார்கள். எனினும் புதிய அரசாங்கம் பதவியேற்றதைத் தொடர்ந்து நிலைமைகள் ஓரளவுக்கு சீரடைந்துள்ளமையால் மீள் குடியேற்ற அமைச்சு, ஐ. நா. இலங்கைக்கான வதிவிட தூதரகம் என்பவற்றின் ஏற்பாட்டில் அவ்வப்போது நாடு திரும்பிய வண்ணமுள்ளார்கள்.

அந்த வகையில் கடந்த 13 ஆம் திகதி 1990 ஆம் ஆண்டளவில் யுத்த நிலைமைகள் காரணமாக மன்னார், பேசாலை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த 35 குடும்பங்களை சேர்ந்த 90 பேர் மீள் குடியேற்ற அமைச்சு, ஐ. நா. அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் இலங்கைத் தூதரகம் என்பவற்றின் ஏற்பாட்டில் நாடு திரும்பியிருந்தனர்.

இவர்கள் சுய விருப்பத்தின் பேரிலேயே நாடு திரும்பியிருந்தனர்.

இந்தியாவின் திருச்சி, சென்னை போன்ற பிரதேசங்களிலிருந்து வந்த இவர்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சு விமான பயணச்சீட்டு, வாழ்வாதாரத்திற்கான ஆரம்ப கொடுப்பனவு, போக்குவரத்துச் செலவு என்பவற்றை வழங்கியிருந்தது.

இலங்கையை வந்தடைந்த இவர்களிடம் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது, தமிழ்நாட்டிலுள்ள அகதி முகாம்களில் ஒவ்வொரு குடும்பங்களுக்கென தனித் தனியான அறைகள் வரிசையாக அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்கள். இவர்களுக்கு தமிழ் நாட்டு அரசாங்கத்தினால் குடும்பத் தலைவருக்கு 1000 ரூபாவும், ஏனைய 2 வயதுக்கு மேற்பட்ட குடும்ப அங்கத்தவர்களுக்கு 750 ரூபாவும், 2 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு 400 ரூபா எனவும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அது மட்டுமன்றி ஆரம்ப காலங்களில் வெளியில் சென்று கூலி வேலைகளை செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட போதும் அதற்குப் பிற்பட்ட காலங்களில் ஆண், பெண் இருபாலாருக்கும் கூலி வேலைகளுக்காக வெளியில் சென்று வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்கள்.

அதைத் தவிர அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினாலும், அவ்வப்போது வீட்டு உபகரணங்களும், பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்களும் தமக்கு வழங்கப்படுவதாக நாடு திரும்பியவர்கள் தெரிவித்தார்கள்.

எனினும் இடம்பெயர்ந்து வாழ்ந்தமையால் பல்வேறு சமூக, பொருளாதார இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டதாகவும் பலர் தெரிவித்திருந்தார்கள்.

குறிப்பாக பெற்றோர் இல்லாத நிலையில் பிறப்பினை பதிவு செய்வதற்கு விபரங்கள் தெரியாது பிறப்பினை பதியாமல் இருப்பதால் தமிழகத்தில் பிறந்த அவர்களின் பிள்ளைகளுக்கு பிறப்பு சான்றிதழ் இன்றி இருப்பதாக கூறினார்கள். எனவே இலங்கைக்கு திரும்பியுள்ளவர்கள் மீள் குடியேறி வாழும் போதும் தமது பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்ப்பதற்கு தொழில்களை பெற்றுக்கொள்வதிலும் பாரிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

இது தொடர்பாக கே. புஷ்பலாதா (45 வயது) தெரிவித்ததாவது:

“நாங்கள் 1990 ஆம் ஆண்டு மட்டக்களப்பிலிருந்து யுத்த நிலைமைகள் காரணமாக இந்தியாவுக்கு கப்பல் மூலம் குடும்பத்துடன் சென்றோம். ஆரம்ப காலங்களில் தமிழ் நாட்டிலிருந்த அரசாங்கங்கள் எங்களுக்கு பெரிதாக சலுகைகள் எதனையும் கொடுக்கவில்லை. எனக்கு அங்கு போய்தான் இரு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்கள் இருவருக்கும் இலங்கை பிறப்புச் சான்றிதழ் எதுவுமில்லை. இதனால் இங்கு பாடசாலைகளுக்கு அனுப்புவதில் சிக்கல்கள் ஏற்படும். பிறப்பு சான்றிதழை எடுப்பதற்கும் எந்த விபரங்களுமில்லை.” என அவர் தெரிவித்தார்.

இவை தவிர இடப்பெயர்வுகளின் காரணமாக முறைசாரா திருமணங்கள் இடம்பெற்றதாகவும் அதனால் தமது பிள்ளைகளை குடும்பத்தை விட்டு தள்ளி வைக்க நேரிட்டதாகவும் இவர்கள் தெரிவித்தார்கள்.

மேலும் சிலர் யுத்த நிலைமைகள் காரணமாக தமது சொத்துக்கள், காணிகளை இழந்துள்ளமையால் இருக்க இடமின்றி உறவினர்கள் வீடுகளுக்கு செல்வதாகவும் தெரிவித்தார்கள்.

எனவே எல்லாவற்றையும் இழந்தவர்களாக, இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து சென்று மீண்டும் சொந்த மண்ணில் வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இலங்கைக்கு திரும்பியுள்ள இவர்களின் வாழ்வை மீள் கட்டியெழுப்ப சரியான முறையில் உதவ வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

colrefugees_2105242753_4796348_23092016_spp_gry

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux