வவுனியா புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிசேகம் 26 வருடங்களின் பின்னர் கடந்த 15.09.2016 வியாழக்கிழமை அன்று இடம்பெற்றது .
கடந்த மூன்று தசாப்த காலத்தில் நாட்டில் நிலவிய அசாதாரண நிலைமை மற்றும் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் இடப்பெயர்வுகள் என்பவற்றுக்கப்பால் ஆலய நிர்மாண வேலைகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிசேகம் இடம்பெற்றது .
A9 வீதியால் பிரயாணம் செய்யும் அனைவரது காதுகளிலும் கேட்டுபழகிய திருப்பணி நிதி சேகரிக்கும் புளியங்குளத்தை சேர்ந்த இராமநாதன் அவர்களின் இந்த வார்த்தைகள் அந்த ஆலயத்தை உங்கள் ஞாபகத்துக்கு கொண்டுவரும் .
வலக்கை வளமில்லாவிட்டால் எட்டி இடக்கையாலும் போடலாம்.!
சில்லறை இல்லாவிட்டால் பரவாயில்லை தாளாகவும் ஏற்றுகொள்ளப்படும்!
இந்த வார்த்தைகள் தான் புளியங்குளம் முத்துமாரியம்மன் ஆலயத்தை உங்கள் நினைவுக்கு கொண்டுவரும்.
இந்த முத்துமாரியம்மன் ஆலய திருப்பணியில் புளியங்குளம் பிரதேசத்தை சேர்ந்த அடியார்கள் மட்டுமன்றி இலங்கை மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் வடபகுதி நோக்கி பயணம் செய்யும் தமிழர் சிங்களவர் முஸ்லிம்கள் வெள்ளையர்கள் என வேறுபாடின்றி அனைவரது பூரண ஒத்துழைப்புடனும் வாகன சாரதிகளின் தாராளமான பங்களிப்புடனும் ஆலயத்துக்குரிய திருப்பணி நிதியை இரவு பகல் பாராது தொடர்ச்சியாக தொண்டர்கள் ஒவ்வொரு பேருந்துகள் மற்றும் கண்டி வீதி வழியாக பயணம் செய்யும் அனைத்து வாகனங்களையும் மறித்து முத்துமாரி அம்பாளது விபூதி பிரசாதம் முதலியவற்றை வழங்கி பயணிகள் சாரதிகளிடம் திருப்பணி நிதியினை சேகரித்து இன்று அனைவரது பங்களிப்புடன் மிக அழகானதொரு ஆலயமாக வடிவமைக்கபட்டுள்ளது உண்மையிலே பாராட்டுதலுக்குரியது .
இலங்கையின் வரலாற்றில் முருகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அடுத்தபடியாக அனைத்து இன மத பேதமின்று அனைவரின் பங்களிப்புடன் அமைக்கபட்ட ஒரேயொரு கோவிலாக வவுனியாவின் புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் திருக்கோவில் விளங்குவது பெருமைக்குரிய விடயமாகும்.
தமிழ் நாட்டை சேர்ந்த சிற்பகலைஞர்களால் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயத்தை இனிவரும் காலங்களில் அனைவரும் தரிசித்து செல்லமுடியும்.
வவுனியா புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கும்பாபிசேகம் 26 வருடங்களின் பின்னர் 15.09.2016 வியாழக்கிழமை அன்று காலை 6.30 முதல் 8.30 வரையான சுப வேளையில் நூற்றுகணக்கான அடியவர்களின் அரோகரா முழக்கத்தின் மத்தியில் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ கே .பி. நந்தகுமார குருக்கள் தலைமையில் இடம்பெற்றது .
படங்கள்-தகவல்கள்-வவுனியாவிலிருந்து திரு கஜன்…