கடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் தனக்கு உதவுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை..

படத்தில் தாடியுடன் அமர்ந்து இருப்பவர் சூசையின் சகோதரர்

யுத்தம் அகோரமாக இடம்பெற்ற இறுதிச் சமயத்தில் படகு மூலம் தப்பிச் செல்லும் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தின் கடற்புலிகளின் தளபதி சூசையின் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கூடவே கைது செய்யப்பட்ட தனது மனைவியையும் மகனையும் விடுவிப்பதற்கு விநயமாக உதவுமாறு கோரி கடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

இன்று (2010.09.10) வடமராட்சி ஈபிடிபி அரசியல் அலுவலகத்திற்கு சென்ற கடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரரான பொலிகண்டி கிழக்கைச் சேர்ந்த சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம் தவராசா (வயது 61) வடமராட்சி ஈபிடிபி அமைப்பாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் மூலமாக இக்கோரிக்கையை விடுத்துள்ளார். அக்கோரிக்கையில் கடந்த வன்னியின் யுத்தம் அகோரமாக இடம்பெற்றபோது தனது மனைவி சந்திராதேவி (வயது 60) மகன் சிலம்பரசன் (வயது 16) மற்றும் தனது சகோதரன் சிவநேசனின் (சூசை) மனைவி சத்தியதேவி (வயது 46) மகள் சிந்து (வயது 18) மகன் மணியரசன் (வயது 17) ஆகியோர் 2009.05.14 அன்று படகு மூலம் தப்பிச் சென்று கொண்டிருக்கையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு திருகோணமலை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் ஐவரையும் விடுவிப்பதற்கு உதவுமாறு கேட்டுள்ளார். மேலும் 61 வயதாகும் தன்னைக் கவனிப்பதற்கு உறவினர் எவரும் இல்லையெனவும் தனது மகனை கல்வி கற்பிப்பதற்கு விருப்பமாக உள்ளது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார். 

ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாளை யாழ்ப்பாணம் வந்தவுடன் அவரிடம் உங்களது கோரிக்கை தொடர்பாக தெரிவித்து அமைச்சரை நேரடியாகச் சந்திப்பதற்கு ஆவண செய்து தருவதாக வடமராட்சி ஈபிடிபி அமைப்பாளர் சூசையின் சகோதரர் சிவலிங்கம் அவர்களிடம் உறுதியளித்துள்ளார். இதன் போது ஈபிடிபியின் கொற்றாவத்தைப் பகுதி அபிவிருத்திக்குழு உறுப்பினர் கணேசமூர்த்தி விஜிந்தனும் உடனிருந்தார்.      

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux