ஊர்காவற்றுறை நாரந்தணை பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவனின் சடலமொன்று, இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவன் நேற்று திங்கட்கிழமை முதல் காணாமற்போயிருந்த நிலையிலேயே, இன்று வெற்றுக் காணியிலுள்ள மரமொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாணவனின் இறப்பு தொடர்பில் உறவினர்கள் சந்தேகம் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற ஊர்காவற்துறை நீதிவான் ஏ.எம்.எம்.றியால், விசாரணைகளை மேற்கொண்டார்.
சரவணை மேற்கு 1 ஆம் வட்டாரப் பகுதியிலுள்ள வேலணை மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்விகற்ற தவிசாலன் பானுசன் (வயது 17) என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற-க.பொ.த சாதாரண பரீட்சையில் 6 A திறமைச் சித்திகள் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன், தடய அறிவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. நீதிவானின் உத்தரவுக்கமைய சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேதஅறையில் வைக்கப்பட்டுள்ளது.


