நெடுந்தீவு மக்கள் அனுபவித்து வரும் கடற்போக்குவரத்து துன்பங்களில் இருந்து தமக்கு விடிவு தேவை என எதிர்பார்த்துக் காத்திருப்பது பல தசாப்தங்களாக நடக்கிறது. மக்களின் துன்பங்களுக்கு ஒரு முடிவு தேவை என வற்புறுத்தாத எவருமே அங்கு இல்லை எனலாம். அந்த அளவுக்கு முக்கியம் மிக்க கடற்பயணத்துக்கு விடிவு கிடைக்கும் வகையில் “நெடுந்தாரகை” அடுத்த ஜனவரியில் நெடுந்தீவுக் கடலைக் கிழித்துச் செல்ல உதயமாகப் போகிறது எனற செய்தி மக்களுக்குக் கிடைத்த மகிழ்ச்சியான ஒன்றாகும்.
“டொக்யாட்” நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிகொண்டிருக்கும் நெடுந்தாரகை எதிர்வரும் டிசம்பர் முதல் வாரத்தில் மாகாண சபையிடம் கையளிக்கப்படவுள்ளது. படகைக் கட்டுவதற்கான பணிகள் தற்சமயம் இளம் பெற்று வருகின்றன. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னரே இந்தப் படகைக் கட்டுவதற்கான நடவடிக்கைகளுக்காக, நெல்சிப் திட்டத்தில் நிதி கிடத்திருந்தபோதும் அந்த வேலைத்திட்டம் தடைப்பட்டிருந்தது.
மக்கள் தமது போக்குவரத்துச் சேவைக்கு ஒரு நல்ல தீர்வு தேவை என்பதை அடிக்கடி வலியுறுத்திக்கொள்வதால் மாகாணசபை இந்த விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து புதிய படகைக் கட்டுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. உலக வங்கி மக்களுக்கு ஒரு உன்னதமான சேவையை வழங்கும் வகையில் ஏற்கனவே வழங்கிய நிதியிலும் பார்க்கக் கூடுதல் நிதியை இதற்கென வழங்கியுள்ளது. ரூபா 150 கோடி செலவில் புதிய படகைக் கட்டுவதற்கான பணிகள் கடந்த 08.02.206 செய்யப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக ஜூன் 7 ஆம் திகதி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.
“நெடுந்தாரகை” ஒரு கப்பலுக்கு இணையான அனைத்து சாதனங்களையும் உள்ளடக்கியதாக உருவாகிறது. வடதாரகைப் படகை விட நவீன வசதிகளைக் கொண்ட இந்தப் படகு 22 மீற்றர் நீளமும் 5.2 மீற்றர் அகலமும் கொண்டது. இது முற்று முழுதாக உருக்கினால் செய்யப்பட்ட படகாகும். இந்தப் படகைக் கட்டுவதற்கு முன்னர் ஆறு பேர்கள் கொண்ட கடல் தொடர்பான பாஸ் மெற்றிக் சேவையர்கள் கடலில் அலை காற்றுக் காலங்களின் நிலமைகள், காற்றின் அடிக்கடி மாறும் தன்மைகள் என கடல் சம்மந்தமான பிரச்சனைகளை ஆராய்ந்து அதற்கமைவாக படகை வடிவமைத்தனர்.
கண்ணாடி இழயிலான படகுகள் நெடுந்தீவுக் கடலைச் சமாளிக்கக் கூடியதல்ல என்பது நிபுணர்களின் கருத்து. அதனாலையே இந்தப் படகு உருக்கினால் அமைக்கப்படுகின்றது. குமுதினி போன்ற இரண்டு படகுகளை இந்தத் தொகைக்கு கட்டியிருக்கலாம் என்பதும் நெடுந்தீவு மக்களிடையே உள்ள கருத்தாகும் எனினும் நல்ல மரங்கள் கிடைக்கும் சூழ்நிலை இல்லை அதனால் உருக்கைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
வடக்கு மாகாண முதலமைச்சர், நெடுந்தீவு மக்களுக்கு ஒரு நல்ல வசதியான படகை வழங்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளார். அவரது நோக்கத்துக்கு அமைவாக அனைத்து வசதிகளையும் கொண்ட படகு ஒன்றைத் தருவிப்பதில் உலக வங்கியும் உறுதுணையாகவே உள்ளது. நெல்சிப் திட்டத்தின் பெறுகை நிபுணரும் பொறியியலாளருமான வே.த.இராஜவரதன் நெடுந்தாரகையின் வேலைகள் குறித்து தினமும் டொக்யாட் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு கண்காணித்து வருகிறார்.
80 இருக்கைகளைக் கொண்ட நெடுந்தாரகை ஒரு கப்பலுக்குரிய அனைத்து நிலைகளையும் கொண்டிருக்கும். படகு மூன்று அல்லது நான்கு மீற்றர் கடலுள் மூழ்கக் கூடிய நிலையில் அதற்குள் இருந்தபடியே உரிய இடங்களுக்குத் தொடர்பு கொள்ள முடியும் கடலில் உள்ள ஆழப் பாறைகள் தடைகள் இருப்பின் அதற்கான சமிக்ஞைகள் கரைகளை அவதானிப்பதற்கான வெளிச்ச வசதிகள், இரண்டு சிறிய பாதுகாப்புப் படகுகள், சட்டலைட் தொடர்புகள், எந்தப் பகுதியில் படகு சிக்கலை எதிர்கொள்கிறது என்பதை அறிவிக்கக்கூடிய வசதிகள் அனைத்தும் கொண்டதாகவே நெடுந்தாரகை உருவாக்கப்பட்ட வேண்டும் என்பதில் உலக வங்கி உறுதியாக உள்ளது.
இந்தப் படகு ஒரு மீற்றர் கடல் ஆழத்திலும் மிதக்கக் கூடியதாக இருக்கும். அத்துடன் 65 தொன் எடை கொண்டது. பொது மக்கள் தமது பயணப் பொதிகளுடன் தடைகளின்றிப் பயணிக்கக் கூடியதாக அமைக்கப்படுகிறது. படகின் வேகம் அதிகரிக்கப்பட வாய்ப்பில்லை. கொந்தளிக்கும் கடலில் மிகவும் வேகமாகச் செல்வது தவிர்க்கப்பட வேண்டும் என்பதால் நெடுந்தாரகையின் நெடுந்தீவு – குரிக்கட்டுவானுக்கான பயணநேரம் முக்கால் மணித்தியாலமாகவே இருக்கும். நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய நெடுந்தாரகைக்கென ஐந்து படகு ஊழியர்கள் தெரிவு செய்யபட்டு உரிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் பெறுகை நிபுணர் இராஜவரதன் தெரிவித்தார்.
நெடுந்தீவைச் சேர்ந்தவர்களே படகில் ஊழியர்களாக நியமிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் ஒப்புக்கொண்டார். படகின் அனைத்துக் கட்டுப்பாடுகளும் வடக்கு மாகான சபையிடமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நெடுந்தீவு பிரதேச சபையின் கண்காணிப்பு நெடுந்தாரகைக்கு உண்டு என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் படகுச் சேவை குறித்து வடக்கு மாகான சபையின் உறுதியான கட்டுப்பாடுகள் அவசியம்.
– லக்ஸ்மன்



