தீவகத்திலிருந்து யாழ் நோக்கி வந்த, ஹயஸ் வாகனம் ஒன்று பண்ணைப் பாலப் பகுதியில் உள்ள ரவுண்டப் போர்ட் அருகில் உள்ள மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.யாழ். பண்ணை பாலப் பகுதியில் திங்கட்கிழமை பிற்பகல் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்துச் சம்பவத்தில் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சிறிதரன் சிவமலர் (வயது 49) என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் ஏனைய ஐவரும் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த சிலர் தமது உறவினர்களுடன் நயினாதீவுக்குச் சென்றுவிட்டு, மீண்டும் திரும்பி வரும்போது, பண்ணைப் பாலத்திற்கு அண்மையாக ஹயஸ் வாகனத்தில் வந்துகொண்டிருந்த வேளை, வேகக்கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம் வீதி ஓரத்தில் நின்ற மின்கம்பத்துடன் மோதி இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஐவரும் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், உயிரிழந்தவரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்விபத்தினை அல்லைப்பிட்டி முன்னாள் கிராமசேவையாளர் திரு எஸ்.இரட்ணேஸ்வரன் அவர்கள் நேரடியாகப் பார்வையிடுவதனையும்-கீழே உள்ள ஒரு படத்தில் இணைத்துள்ளோம்.