நாடு முழுவதும் இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் காற்றுடன் கூடிய அடைமழை காரணமாக 11பேர் வரை பலியாகியுள்ளதுடன் மேலும் பல ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.
வட மாகாணத்தில் இயல்புநிலை ஸ்தம்பித்ததுடன் 2 நாட்களில் 4ஆயிரத்து 414 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 833 பேர் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந் துள்ளனர். இதில் கிளிநொச்சி மாவட்டமே அதிகளவான பாதிப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில் அங்கு 7 ஆயிரத்து 249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களிலும் நேற்றைய தினம் மாலை வரை பெற்றுக்கொள்ளப்பட்ட தரவின்படி அதிகளவான மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கடும் காற்றினால் பாரிய அளவில் பொருட்சேதங்களும்; ஏற்பட்டுள்ளன. அத்துடன் வடக்கில் 374 வீடுகளும் வெள்ளம் மற்றும் சுழல்காற்றின் காரணமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
அந்த வகையில் அதிகப்படியாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2ஆயிரத்து 159 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 249 பேர் பாதிக்கப்பட்ட துடன் அவர்களில் 75 குடும்பங்க ளைச் சேர்ந்த 242 பேர் 5 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர்.
அதே வேளை 274 குடும்பங்களைச் சேர்ந்த 934 பேர் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். ஒரு வீடு முழுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 106 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மின்னல் தாக்கியதில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 197 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவில் 892 குடும்பங்களைச்சேர்ந்த 3 ஆயிரத்து 943 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 3 வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் 139 வீடுகள் பகுதியளவில் பாதிப்படைந்துள்ளன. மேலும் பிற்பகல் 4 மணிக்குப்பின்னர் கரவெட்டி அல்வாய்ப்பகுதியிலும் பருத்தித்துறை அல்வாய் வடக்கு பகுதியிலும் ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக 35 வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்டத்தில் 711 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 186 பேர் பாதிக்கப்பட்டதுடன் அவர்களில் 3 பேர் ஒரு நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளனர். 21 வீடுகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 55 வீடுகள் பகுதியளவில் பாதிப்படைந்துள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 289 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து ஒரு பேர் பாதிக்கப்பட்டதுடன் அவர்களில் 2 குடும்பங்களைச்சேர்ந்த 24 பேர் ஒரு நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளனர்.11 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் சுழல் காற்றினால் 38 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.அத்துடன் ஒட்டிசுட்டான் கட்டைக்காட்டு குளம் உடைப்பெடுத்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் 58 குடும்பங்களைச்சேர்ந்த 257 பேர் பாதிக்கப்பட்டதுடன் அவர்களில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். ஒரு வீடு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடும் காற்றினால் பேசாலைப்பகுதி கடற்கரையில் 47 றோலர் படகுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 17 படகுகள் முற்றுமுழுதாக கடலில் மூழ்கியுள்ளன.
அதில் 30படகுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மாந்தை மேற்குப்பகுதியில் 7 படகுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. மல்வத்து ஓயா நீர்த்தேக்கம் 11.2 அடியாக உயர்வடைந்துள்ள காரணத்தால் தம்பனிக்கைக்குளம், நானாட்டான் மடுக்கரை கிராமங்களைச்சேர்ந்த மக்களை அவதானமாக இருக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மன்னாரில் இருந்து புத்தளம் நோக்கிச்செல்லும் பாதை மூடப்பட்டுள்ளது.
இதேவேளை நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு அந்தந்த மாவட்டங்களின் பிரதேச செயலகங்கள் ஊடாக 3 நேர சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீரற்ற காலநிலை தொடற்ச்சியாக காணப்படுவதால் சேதவிபரங்கள் அதிகரிக்கக்கூடும் எனவும் அவற்றை எதிர்கொள்வதற்குரிய ஏற்பாடுகள் தயார்நிலையில் இருப்பதாகவும் அனர்த்தமுகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.