யாழ்ப்பாணம்,சமூக விரோதிகளின் கூடாரமாக அமைய இடமளிக்கக்கூடாது-நீதிபதி இளஞ்செழியன்!

யாழ்ப்பாணம்,சமூக விரோதிகளின் கூடாரமாக அமைய இடமளிக்கக்கூடாது-நீதிபதி இளஞ்செழியன்!

30 வருடகால குண்டு வெடிப்புகளினால் அவலப்பட்ட யாழ்.குடாநாடு சமூக விரோதச் செயற்பாட்டாளர்களின் கூடாரமாக அமைய இடமளிக்கக் கூடாது என்று யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தியுள்ளார். 

யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளில் சமூக விரோதச் செயற்பாடுகள் தலையெடுத்துள்ள சூழலில், யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் – இந்த நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தபோதே, மேல் நீதிமன்ற நீதிபதியினால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

யாழ்.குடாநாட்டை சமூக விரோதச் செயல்களற்ற பிரதேசமாகவும், குற்றச் செயல்களற்றதொரு பிராந்தியமாகவும் உருவாக்குவதற்காக பொலிசாரின் ஊடாக நீதிமன்றங்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆயினும் ஆங்காங்கே குற்றச் செயல்களும் சமூக விரோதச் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன. 

திடீரென குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பதற்கான காரணம் என்ன என வினவிய நீதிபதி அவற்றைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் வினவினார். குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தி பொதுமக்கள் அச்சமற்ற நிலையில் வாழ்க்கை நடத்துவதற்காக பொலிசார் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார்கள் என யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். 

சமூகவிரோதச் செயல்கள் அதிகமாக அவதானிக்கப்பட்டுள்ள சுன்னாகம், கோப்பாய், மல்லாகம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசத்தில் விசேட பொலிஸ் அணியொன்று சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களைத் தேடி வலைவிரித்துள்ளது. இங்கு செயற்படுகின்ற சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். 

கரையூர், பாஷையூர், அரியாலை பகுதிகளை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனது நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்து, சமூகவிரோதச் செயல்கள், குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்ட பலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். 

கைக்குண்டுகள், வாள்கள் என்பவற்றுடன் கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொலிசாரின் சைக்கிள் சுற்றுக்காவல், வாகனச் சுற்றுக்காவல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு சந்தேகத்திற்குரிய இடங்களில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடுபவர்களைக் கண்காணித்து அவர்கள் மீது சம்பவ இடங்களிலெயே விசாரணை செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

சமூகத்தில் இடம்பெறுகின்ற களவு, கொள்ளைகளைத் தவிர்த்துக்கொள்வதற்காக பொதுமக்கள் கையாள வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தி வருகின்றார்கள். 

குறிப்பாக தமிழ் மக்களின் கலாசார பாரம்பரிய குடும்பச் சொத்தாகிய தங்கநகைகள், ஆபரணங்கள் என்பவற்றைப் பொதுவாக வீடுகளில் சாமி அறையிலோ அல்லது அனைவரும் சாதாரணமாகக் கையாள்கின்ற முறையிலான இடங்களிலோ வைக்காமல், கள்வர்களும் கொள்ளையர்களும் கண்டுபிடிக்க முடியாத இடங்களில் பாதுகாத்து வைக்க வேண்டியது குறித்து பொதுமக்களுக்கு அறிவூட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். 

பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து கேட்டறிந்த நீதிபதி இளஞ்செழியன் தங்க நகைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்குரிய சரியான வழிமுறைகளைப் பொதுமக்கள் கையாள வேண்டும். பொதுமக்கள் இந்த விடயத்தில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் கஷ்டங்கள் என்பவற்றைக் கேட்டறிந்து அவை குறித்து பொலிஸ் பொறுப்பதிகாரிகள் ஊடாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். 

நீதிபதி இளஞ்செழியன் மேலும் தெரிவித்துள்ளதாவது,

களவெடுக்கப்பட்ட நகைகள், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என்பவற்றைக் கொள்வனவு செய்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அத்தகைய நகைகளை உடைமையில் வைத்திருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு பெறுகின்ற நகைகளை உருக்கி உருமாற்றம் செய்வதும் குற்றமாகும். இத்தகைய குற்றம் புரிபவர்களைத் தண்டிக்குமாறு சட்டம் பரிந்துரை செய்கின்றது. 

எனவே, இத்தகைய நடவடிக்கைகளில் நகை வியாபாரிகளோ, வங்கிகளோ ஈடுபடக்கூடாது. தனியாரிடமிருந்து நகைகளை வாங்கும்போது நகைகளை விற்பவர்கள், அல்லது அடைவு வைப்பவர்களின் தேசிய அடையாள அட்டை முகவரி உள்ளிட்ட முழு விபரங்களையும் பதிவு செய்யும் நடைமுறையைக் கையாள வேண்டும். தங்க நகைக் கொள்ளைகள் அல்லது களவுகள் சம்பந்தமாக பொலிசார் விசாரணைகளை மேற்கொள்ளும் நகை வியாபாரிகளும் வங்கி அதிகாரிகளும் இத்தகைய விவரங்களைப் பொலிஸாருக்கு வழங்கி ஒத்துழைக்க வேண்டும். 

சாவகச்சேரி நீதிமன்றத்தை உள்ளடக்கிய தென்மராட்சி, பருத்தித்துறை நீதிமன்றத்தை உள்ளடக்கிய வடமராட்சி, ஊர்காவற்றுறை நீதிமன்றத்தைக் கொண்ட ஊர்காவற்றுறை ஆகிய பிரதேசங்களில் குற்றச் செயல்கள் குறைந்திருக்கின்றன. இந்தப் பகுதிகளில் இருந்து பொலிசாரை மேலதிகமாகப் பெற்று வாள்வெட்டு, குழுமோதல்கள், களவு கொள்ளைகள் இடம்பெற்று வருகின்ற மல்லாகம், சுன்னாகம், வட்டுக்கோட்டை, மானிப்பாய், கோப்பாய், அரியாலை, பாஷயூர், கரையூர் போன்ற பிரதேசங்களில் பணியில் அமர்த்தி குற்றச்செயல்களைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். 

முப்பது ஆண்டு கால குண்டு வெடிப்புக்களினால் அவலப்பட்ட யாழ் குடாநாட்டை சமூகவிரோதிகளின் கூடாராமாக்குவதற்கு இடமளிக்க முடியாது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள சமூக விரோதிகள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த பொலிசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் தனது கடமையைச் செய்யும். சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் இரக்கம் காட்டமாட்டாது கடும் தண்டனை வழங்கும் என்றார் நீதிபதி இளஞ்செழியன். 11012777_900078440050257_1231709370711428646_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux