புங்குடுதீவு மாணவி வித்தியா கொடூரக் கொலை வழக்கு புதிய திருப்பங்களுடன் நீதியை நோக்கி நகர்வு…

புங்குடுதீவு மாணவி வித்தியா கொடூரக் கொலை வழக்கு புதிய திருப்பங்களுடன் நீதியை நோக்கி நகர்வு…

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் கொடூரக் கொலைக்கு சுவிஸ்குமார் உட்பட ஆறு பேர் பிரதான காரணம் என குற்றப் புலனாய்வுதுறையினர் நேற்றைய தினம் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். குறித்த வழக்கில் இந்த அறிக்கை புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளதோடு, குற்றவாளிக ளையும் இனங்காட்டியுள்ளது.
புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா (வயது 18)  கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார். குறித்த கொலை வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.
இவ்வழக்கின் மரபணு பரிசோதனை அறிக்கைகள் நீதி மன்றில் சமர்ப்பிக்கப்படாத நிலையில், கடந்த வழக்கின் போது குறித்த கொலை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையிலேயே குற்றப்புலனாய்வுதுறையினர் நேற்றைய தினம் தமது விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
மே 13 நடந்தது என்ன? 
மே 12ஆம் திகதி கொலை செய்யப்படுவதற்கு முன்னர் காலை 7.20 மணிக்கெல்லாம் தனது வீட்டிலிரு
ந்து பாடசாலைக்கு செல்வதற்கு ஆயத்தமாகிய வித்தியா, யாருமே அற்ற பற்றைகள் நிறைந்த வீதியூடாக தனது பாடசாலைக்கு செல்கிறாள், பாடசாலை சென்ற வித்தியா பாடசாலை முடிவுற்று வழமையாக வீடு திரும்பும் நேரம் மூன்று மணியாகியும் வீட்டிற்கு அன்றைய தினம் வரவில்லை.
மாலை சென்றும் வித்தியா வீடு திரும்பாததனை அடுத்து வித்தியாவை தேடி உறவினர்கள் பாடசாலைக்கு செல்கின்றனர். அங்கு வித்தியா இல்லை எனக் கூறப்பட அனைவரும் இணைந்து வித்தியாவை தேட தொடங்குகின்றனர். மறுநாள் 13ஆம் திகதி காலை தனது தங்கை பாடசாலை செல்லும் வீதியினூடாக வித்தியாவின் மூத்த சகோதரர் தேடி செல்கிறார். அப்போது சகோதரருடன் சென்ற அவர்களின் வீட்டு நாய் வித்தியாவின் சடலத்தை கண்டுபிடிக்கின்றது.
தொடர்ந்து கைதுகள் 
வித்தியாவின் சடலம் கிடைக்கப்பெற்றவுடன் ஊர்காவற்றுறை பொலிசார், கொழும்பிலிருந்து வந்த குற்றப்புலனாய்வுதுறை சம்பவம் தொடர்பில் ஊடுருவ ஆரம்பிக்கின்றது. அதனை அடுத்து தொடர்ச்சியாக ஒன்பது பேர் கைதாகின்றனர். வழக்கும் நடைபெற்று வந்தது. 
கடந்த 10 மாதங்களாக வழக்கு நடைபெற் றது. மரபணு பரிசோதனைகளுக்காக கடந்த எட்டு மாதங்களாக வழக்கு பெரிதான எந்த முன்னேற்றங்களும் இன்றி சாதாரணமாக நடைபெற்று வந்தது. நடைபெற்றது கொலைதான் என மருத்துவ அறிக்கைகள் கூறிய போதிலும் அதனை நிகழ்த்தியவர்கள் யார்? என்பதனை நிரூபிக்க அனைத்து தரப்பும் முயற்சித்து வந்தன.
நேற்றைய வழக்கில் திருப்பம் 
கடந்த தவணையில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த வழக்கு தொட ர்பில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து விசாரணை அறிக்கைகளையும் சமர்ப்பிக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் கடும் தொனியில் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவினை அடுத்து மூவர் கைதாகி அதில் இருவரது வாக்கு மூலங்கள் பெறப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த வழக்கு மன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது கொழும்பு கூட்டுக் கொள்ளை குற்றப்புலனாய்வு  திணைக்கள பொறுப்பதிகாரி ஐ.பி.நிசாந்த சில்வா தமது விசாரணை முன்னேற்ற அறிக்கையை மன்றில் சமர்ப்பித்தார். அதில் பல உண்மைகள் வெளிவந்தன.
கொலைக்கு இதுதான் காரணம்
இரு காரணங்களால் தான் வித்தியா கொலை கொலை செய்யப்படுவதற்கு காரணம் என சி.ஐ. டி மன்றில் தெரிவித்துள்ளது. சுவிஸ்குமாரின் மைத்துனனான பிரதேச சபையில் பணியாற்றிய சிவதேவன் துஷாந்தன் என்பவர் மாணவி வித்தியாவை ஒரு தலையாக காதல் செய்ததாகவும், எனினும் இதற்கு மாணவி மறு ப்பு தெரிவிக்கவே மாணவியை படுகொலை செய்ய திட்ட மிட்டதாகவும் சி.ஐ.டி தெரிவித்தது.
அடுத்து, குறித்த கொலை வழக்கின் சந்தேக நபர்களும் சகோதரர்களுமான கோபாலசிங்கம் தவக்குமார், கோபாலசிங்கம் ஜெயக்குமார் ஆகியோர் கொள்ளை சம்பவம் ஒன்றில் ஈடுபட்டிருந்ததாகவும், இவர்களுக்கு எதிராக வித்தியாவின் தாயாரான சிவலோகநாதன் சரஸ்வதி சாட்சி சொல்லியிருந்ததாகவும், இதன் காரண மாகவும் வித்தியாவை படுகொலை செய்ய இவர்கள் உடந்தையாக இருந்துள்ளதாக சி.ஐ.டி தெரிவித்தது.
கஞ்சா நுகர்ந்துள்ளனர் 
வித்தியா கொலை செய்யப்படுவதற்கு இரு நாட்களுக்கு முன்னர் புங்குடுதீவினை சேர்ந்த பதினோராம் சந்தேக நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டவர் மூலமாக வித்தியாவை ஒருதலைக் காதல் செய்த சிவதேவன் துஷாந்தன் கஞ்சா போதைப்பொருளை பெற்றுள்ளார்.
முதலில் மதுபோதையில் இருந்த அனைவரும், பின்னர் கஞ்சாவினை  நுகர்ந்த பின்னரே வித்தியாவின் கொலையை கொடூரமாக அரங்கேற்றியுள்ளனர். கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாகவே வித்தியாவை எவ்வாறு கொலை செய்வது என கொலைகாரர்களால் திட்டம் தீட்டப்படுகின்றது.
திட்டமிட்டே வித்தியா கொலை அரங்கேறுகின்றது
பாடசாலை செல்லும் வழியில் வித்தியாவை வழிமறிப்பது என்றும், அதன் பின்னர் பற்றைக்குள் கொண்டு செல்வது எனவும் திட்டத்தை வகுத்துள்ளனர். முதலில் இவற்றை சுவிஸ்குமாரே திட்டமிட்டதாக சி.ஐ.டி. கூறுகின்றது. சம்பவதினமன்று வித்தியா பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் வருகின்றார். இரண் டாம்,  மூன்றாம் சந்தேகநபர்கள் வித்தியாவை வழிமறிக்கின்றனர். ஐந்தாம், ஆறாம் சந்தேக நபர்கள் வித்தியாவை பற்றைக்குள் இழுத்து செல்கின்றனர். அதன்பிறகு வித்தியா வன்புனர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றாள்.
இவ்வாறு கொடூரம் நடைபெற்றுக் கொண்டு இருக்க நேற்று முன்தினம் கைதான பதினொராவது சந்தேகநபர், அங்கு யாரும் வருகின்றனரா? என காவல் பார்த்துகொண்டு இரு ந்துள்ளார். ஒன்பதாம் சந்தேக நபரான சுவிஸ்குமார் இதற்கெல்லாம் திட்டம் போட்டு கொடுத்துள்ளார். 
கொலையை வேறு திசை நோக்கி திருப்ப திட்டம் 
வித்தியா கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உட் படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படுகின்றாள். இதன் பின்னர் கடற்படை மீது கொலையை பழி சுமத்துவதற்காக வித்தியாவின் உடலை கோரமான முறையில் கட்டிப்போட்டுள்ளனர். இதனை நிரூபிக்கும் வகையில் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள சிலரிடம் இதற்கு காரணம் கடற்படை தான் என கூறியுள்ளனர்.
இதன்மூலம் தம்மால் மேற்கொண்ட கொலையை கடற்படையினர் மீது பழியைசுமத்தி கொலை தண்டனையிலிருந்து தப்பிக்க முயற்சித்து உள்ளனர். இதன் காரணமாகத் தான் இந்த கொலையாளி சந்தேகநபர்களை இனமுறுகலை ஏற்படுத்தும் விதத்தில் செய ற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்விசாரணை மேற்கொள்ளப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவரும் தப்ப முடியாது 
முதலில் கைதாகிய ஒன்பது சந்தேக நபர்களுக்கும் (கொழும்பில் நின்றவர் உட்பட) குறித்த கொலை தொடர்பில் தெரியும். எங்கு? எவ்வாறு? எப்படி? நடைபெறப்போகின்றது என்பது குறித்து அனைத்துமே தெரியும் என சி.ஐ.டி. தெரிவித்துள்ளது.
ஆகையால் குறித்த கொலை குற்றச்சாட்டிலிருந்து எந்த நபரும் தப்ப முடியாது. நீதிமன்றால் வழங்கப்படும் தண்டனையிலிருந்தும் தப்பமுடியாது என நம்பப்படுகின்றது. குறிப்பாக அனைவருமே திட்டமிட்டு தான் வித்தியாவை படுகொலை செய்தனர் என்பது நேற்றைய சி. ஐ.டி அறிக்கையின் மூலம் அறிய முடிகின்றது.
அடுத்து என்ன?
குறித்த வழக்கு எதிர்வரும் பதினெட்டாம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தவணையில் மரபணு பரிசோதனை முடிவுகள் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் பத்தாம், பதினோராம் சந்தேக நபர்கள் பிரதான சாட்சியாளர்களாக மாறும் சாத்தியம் இருப்பதாக அறிய முடிகின்றது.
மேலும் ஒருசிலர் கைதாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாத நடுப்பகுதிக்குள் குறித்த வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில் மாற்றப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.
நீதவான் நம்பிக்கை
இந்த குற்றம் சகித்துக் கொள்ள முடியாத பாரதூரமான துக்ககரமான சம்பவமாகும். கட வுளின் உதவியுடன் இதற்கு நீதி கிடைக்கும் என ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.ரியால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நேற்று நடை பெற்ற வழக்கின் போது மனுதாரர் சார்பில் சட் டத்தரணிகளான கே.சுகாஸ், ஜே.பி.ஏ. ரஞ்சித் குமார் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
Vithiya

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux