ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் காவிய புருஷர் செங்கை ஆழியான்-சிறப்புக் கட்டுரை இணைப்பு!

ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் காவிய புருஷர் செங்கை ஆழியான்-சிறப்புக் கட்டுரை இணைப்பு!

நூல்களுக்கு முன்னுரை எழுதுவதையோ அல்லது படைப்புகளுக்கு முன்னால் என் நிஜமுகத்தை நீட்டுவதையோ நான் பொதுவாகவே தவிர்த்து விடுவதுண்டு. கூடிய வரை தட்டிக்கழிப்பேன். காரணம் சகலதையும் உன்னிப்பாக பார்த்து அவை பற்றி எனக்குள் நானே மதிப்பீடுகளைச் செய்து ஓர் அபிப்பிராயத்தை உருவாக்கிக் கொள்வதோடு நின்றுவிடுவது எனது இயல்பான வழக்கமாகும்.

அதிலும் சஞ்சிகையாளனாக மாறிய இந்த இடைக்காலத்தில் மிக நிதானமாக இந்த நத்தை ஓட்டிற்குள் நானே சுருட்டிக் கொள்ளும் ஒதுங்கும் முறையை அனுசரித்து வந்திருக்கிறேன். பல்வேறுபட்ட படைப்பாளிகளுடன் நெருங்கிப் பழக வேண்டியது எனது தொழில் முறை நட்பு. கூடிய வரை சொந்த அபிப்பிராயங்களை மனதிற்குள் புதைத்து விட்டுத் தான் காரியமாற்றி வருகின்றேன். அதற்காக எனக்கொரு கருத்தில்லை என்று இதற்கு அர்த்தமன்று. எனக்கேயான சொந்தக் கருத்துகளுக்காக நான் யாருடனும் மோதிக் கொள்வது இல்லை. அது இக்கால கட்டத்திற்குத் தேவையுமில்லை.

நண்பர் செங்கை ஆழியான் என்னைப் பாதித்து விட்டார். அதற்குக் காரணம் அ வரின் பழகும் எளிமை. பந்தா இல்லாத பழக்க வழக்கங்கள், இலக்கிய நேசிப்பு… இவை தவிர, இவரது இடையறாத உழைப்பு. ‘இந்த மனிதனால் எப்படி இப்படிச் செயற்பட முடிகிறது?’ என விழிகள் அகல நான் வியப்பதுண்டு. அதன் மூலம் என்னை நெறிப்படுத்துவதுண்டு. ஒரு வேளை இந்தப் பிரமிப்பின் விளைவு தான் இந்த முன்னுரையோ என எனக்குச் சொல்லத் தோறுகிறது.

ஒருவர் உழைக்கும் விதம் தான் அவருடைய உண்மையான தகுதிகளைக் காலக்கிராமத்தில் நிர்ணயிக்கும் அளவு கோலாகும். இந்த ‘இரவு நேரப் பயணிகள்’ என்ற தொகுதியில் பதினொரு சிறுகதைகள் அடங்கியுள்ளன. இந்தப் பதினொன்றில் ஏழு கதைகள் மல்லிகையில் பிரசுரமாகியுள்ளன. பிரசுரிப்பதற்கு முன்னர் இவரது கதைகளை ஆற, அமர படித்துப் பார்ப்பது வழக்கம். இத்துடன் அச்சுக்குப் போகின்ற படிகளை ஒப்பு நோக்கிப் பார்க்கின்ற வேலையும் எனதே. எனவே கருத்தூன்றிப் படித்து விடுவேன்.

எனவே இதிலுள்ள கதைகளைப் பற்றி மாத்திரமல்ல, இவரது பல்வேறு கதைகளை அநேகமாக அவையாவும் மல்லிகையில் வெளிவந்தவையே. எல்லாவற்றைப் பற்றியும் எனக்கு நன்கு பரிச்சயம். இலக்கியக் களத்தில் பன்முகக் கருத்தோட்டங்கள் மலிந்துள்ள சூழலில் இவரது படைப்புகள் மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டு மலர்ந்தவையாகும்.

நமது நிகழ்காலத்தில் கருமையான, கடுமையான வாழ்க்கையின் உக்கிரமான இரவுகளை இவரது இக்கதைகளில் தரிசிக்கின்றோம். இந்த வழி தெரியாமையிருட்டில் பாமர மக்களெனப் படித்தவர்களால் நம்பப்படும் மனிதர்கள் இதய வெளிச்சத்தில் நம்பிக்கையோடு நடைபோடுகின்றனர். வாழ்க்கையை வாத்சல்யத்துடன் நேசிப்பதன் காரணத்தால் தமது வாழ்க்கைக்கு எதிராகத் தம்முன் முகம் காட்டும் பாரிய இடர்களுக்கெதிராக இவர்கள் மன வலிமையுடனும், ஆன்ம பலத்துடனும் போராடுகின்றனர் முகம் கொடுக்கின்றனர்.

இங்கே தனி மனித வெற்றியல்ல முக்கியம். இன்றைக்கு மானுடம் அந்தச் சிரமங்களுக்கு மத்தியிலான சூழ்நிலையில் நிமிர்ந்து நிற்க முனைகின்றதே அது தான் முக்கியம். இன்றைக்கு இந்த மானுடப் பெரும் முயற்சி நமக்கெல்லாம் வெகு இயல்பானதாகத் தெரியலாம். நாளை என்றொரு நாள் வரும். அன்று இந்த மானிடத்தைப் பேணிய சாமானிய மனிதர்கள் நிச்சயம் காவிய புருஷர்களாகப் பேசப்படுவார்கள்.

அந்நிய ஆக்கிரமிப்புக்குட்பட்ட வியட்னாமிய நெல் வயல்களினூடே வலம் வந்த விவசாயி எப்படி அந்த மண்ணிற்கு நடந்த கொடுமைகளைக் கூட வாழ்வின் சுவையாகக் கருதி தனது தினசரி வாழ்வைச் செப்பனிட்டு வாழ்ந்தானோ அப்படி வாழ்ந்து காட்டுகிறான் நம்மவன். புரட்சிக்குள்ளாகிய ரஷ்ய நாட்டில் ஒரு மில் தொழிலாளி தற்காலிக சிரமங்களைப் பொருட்படுத்தாமல் நிமிர்ந்து நின்று வாழப் பழகினானோ அப்படி வாழ்ந்து காட்டுகிறான் நமது மண்ணைச் சேர்ந்த இந்தச் சாதாரணன். இது எவ்வளவு பெரிய அதிசயிக்கத்தக்க விடயம்.

இந்த சாமானியன் ஈழத்து இலக்கியத்துக்கே ஏன் தழிலக்கியத்திற்கே புதியவன். மிக மிகச் சாதாரண மனிதனை முன் எப்போதுமே காணாத கதாநாயகனை இவரது கதைகளில் காண்கின்றோம். பாமரர்களாகக் கருதப்பட்ட இவர்கள் பிரச்சினை என்று நேர் கொள்ளும் போது காட்டும் பொறுமை, நிதானம், அதே சமயம் வீரியம் என் நெஞ்சைக் கவர்ந்ததுண்டு. அது தான் இத்தொகுதியின் வெற்றியாகக் கணிக்கின்றது.

இந்த இலக்கியப் புதியவனை நமக்கு இனங்காட்டித் தந்திருக்கிறார் செங்கை ஆழியான். அவரது பாத்திரப் படைப்புகளில் என்னைக் கவர்ந்த அம்சம் இதுதான். இந்தச் சோக சூழ்நிலையிலும் வாழ்வின் நேசிப்புத்தான் இச்சிறுகதைகள் அனைத்தினதும் மையக் கருவாகும். இவரது பேனாவுக்குள் ஒரு துயரம் கலந்த வீரம் வெளிப்படுகின்றது.

‘அடிக்கடி நிறைய எழுதுகின்றார்’ என்றொரு குற்றச்சாட்டு இவர் மீது சொல்லப்படுவதுண்டு. இதற்கு இரண்டு முகங்கள் உள்ளன. ஒன்று எதுவுமே சமீப காலங்களில் எழுதாதவர்கள் சொல்வது. இது கையாலாகாத் தனத்தின் வாய் வெளிப்பாடு. அடுத்தது உணர்ந்து சொல்வது. இதில் ஓரளவு நியாயம் உண்டு. அதே சமயம் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

படைப்பாளிக்கும் ஒரு நேரமுண்டு. படைப்புக்கும் ஒரு காலமுண்டு. ‘படைக்கலாம் படைக்கலாம்’ எனக் காலம் கடத்திக் கொண்டே போனால், முடிவில் அந்தப் படைப்பாளி மந்தித்துப் போய் மரத்து விடுவான். இறைக்க இறைக்கத்தான் நீர் ஊறும். பல பிரென்சு, ஆங்கில, இத்தாலிய எழுத்தாளர்கள் சம நேரத்திலேயே பல நாவல்களைச் சிருஷ்டித்தனர் என்பது இலக்கிய உண்மை. அடிக்கடி எழுதுகிறார் என்று குற்றம் சாட்டுவதைவிட என்ன எழுதுகிறார், அது இலக்கியத் தரமானதாக மிளிர்கின்றதா என்பதையே நாம் பார்க்க வேண்டும்.

நான் நினைக்கின்றேன், செங்கை ஆழியானின் இயல்பான முயற்சிகளின் வெளிப்பாடுகளின் ஓர் அம்சம்தான் இந்தப் படைப்புத் தொழிலும் என்று. அவர் சொல்வதைப் போல, அவரால் எழுதாமலே இருக்க முடியவில்லை. ஆகவே எழுதுகின்றார். பெர்னாட்ஷோ கூடத் தினசரி பத்துப் பக்கங்களுக்கு மேல் எழுதி வந்தவர் என்பதை நாம் மறந்து விட முடியாது.

ஒரு படைப்பாளி எழுதுவதெல்லாம் உயர்ந்த சிருஷ்டியாக வந்துவிடுவதில்லை. சில வகைதான் தேறும். எனவே அதிகமாக எழுதுகின்றார் என்ற குற்றச்சாட்டை நான் ஓங்கி நிராகரிக்கின்றேன். கற்பனை வளம் இருக்கும் போது தொடர்ந்து எழுதுவது தான் சரி. இதில் ஒரு சுயநலமும் உண்டு. மல்லிகை இவரது படைப்புகளை விரும்பி வரவேற்கக் காத்திருக்கின்றது.

‘ஒரு ஷெல்லும் ஏழு சன்னங்களும்’ என்ற ஒரு சிறுகதை மல்லிகையில் வெளிவந்தது. இதன் பின்னர் ‘சுபமங்களா’ விலும் வெளியிடப்பட்டது. இக்கதை பற்றித் தமிழகத்தில் பலரும் பாராட்டினார்கள். இக்கதை மல்லிகையில் வெளிவந்த காலத்தில் நான் என் நெருக்கமான இலக்கிய நண்பர்களிடம் மனந் திறந்து சொன்னதுண்டு. ‘இக்கதை சர்வதேச தரம் வாய்ந்த சிறுகதை. இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டால் அது சர்வதேசப் பெருமை பெறும்’ என்று அப்போதே சொல்லி வைத்தேன். அது பின்னர் நிதர்சனமாகியது பலரும் பேசினர்.

ஈ ழத்து எழுத்தாளர்களுக்கு ஒரு பெரும் குறையுண்டு என நான் அடிக்கடி சிந்திப்பதுண்டு. ‘நமது படைப்புக்கள், நமது கருத்துக்கள், சிந்தனைகள் இன்னமும் வெளி உலகிற்கு எட்டாமல் இந்த மண்ணிற்குள்ளேயே புதைந்து போயிருக்கின்றன’ என நான் கவலைப்பட்டதுண்டு. மலையாள எழுத்தாளர்கள் வங்கத்துப் படைப்பாளிகள் சர்வதேச புகழ் பெறுவதற்கு அந்த நாட்டு ஆங்கில மொழி அறிஞர்கள் பாரிய தொண்டு செய்துள்ளனர்.

இயன்றளவும் செய்து வருகின்றனர். ஆனால் ஆசியாவிலேயே கல்வித் தரம் உயர்ந்த நாடு என்று போற்றப்படும் நமது நாட்டில் அதிகம் படித்தவர்களில் தமிழர்களில் அநேகர் உளர். எனக் கல்வித் தகைமை பேசும் நமது மண்ணில் நமது படைப்புகளை மொழி ஆக்கம் செய்ய ஆங்கிலப் புலமை உள்ளவர்கள் அருகிப் போயுள்ளனர் என்பது விசனிக்கத் தக்க தொன்றாகும்.

மற்றவர்கள் மூலம் நமது படைப்புகளின் குறை நிறைகளை அறிவதன் மூலம் தான் எம்மைச் செப்பனிட முடியும். தமிழகத்திலிருந்து கூட ஓர் இலக்கியக் குரல் கேட்கின்றது. நாடகம், கவிதை வளர்ந்த அளவிற்கு நாவல், சிறுகதை வளரவில்லை என்ற குரல் மேலும் தொடர்ந்து கேட்கின்றது.

‘இந்தக் கருத்தை மொத்தமாகச் சொல்ல நமது நாட்டிலிருந்து எத்தனை படைப்பு நூல்களைப் படித்துள்ளீர்கள்’ என்பது தான் நமது கேள்வி. வ. வே. சு. ஐயரிலிருந்து புதுமைப்பித்தன் ஊடாக ஜெயகாந்தன் வரை வந்துள்ள ஈழத்துப் படைப்புக் காலத்தில் தோன்றிய நூல்களில் எதனைப் படித்துப் பார்த்துவிட்டு இக்கருத்தைச் செல்கின்றீர்கள் என்றே நாம் கேட்க வேண்டியவர்களாகவுள்ளோம். அதற்கு அனுசரணையாகச் செங்கை ஆழியானின் மேற்சொன்ன கதையையும் அவரது ‘காட்டாறு’ நாவலையும் படித்துப் பார்க்குமாறு சிபார்சு பண்ணுகின்றேன்.

மிகவும் ஆச்சரியப்படத்தக்க விதமாகச் செங்கை ஆழியான் மிகக் குறுகிய காலத்தில் இந்நூலிலுள்ள கதைகளை எழுதியுள்ளார். ஓர் எழுத்தாளனை அவனுடைய தத்துவப் பார்வையிலிருந்து பிரித்துவிட முடியாது. அவனுடைய சொற்களுக்கு உணர்ச்சியும், எழுத்துக்கு எழுச்சியும், வாழ்க்கைக்கு அர்த்தமும் தருவது அவனுடைய தத்துவப் பார்வையே.

செங்கை ஆழியானுக்கு அவருக்கேயுரித்தான ஒரு தத்துவப் பார்வையுள்ளது. எனக்கும் அப்படியே. இரண்டுமே ஒன்றாக இருக்க வேண்டும் என்பது இங்கு தேவையில்லை. ஆனால் பரஸ்பரம் ஒருவரை யொருவர் நன்கு விளங்கிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் பரஸ்பரம் நெருங்கி வந்துள்ளோம் என்பதே யதார்த்தமாகும்.

வயது ஒரு காரணம். அனுபவம் வேறொரு காரணம். இந்தப் போர்க்கால அனுபவங்களைப் பார்த்துப் பார்த்து இருவருமே பரிதவித்து தவிப்பதும் இன்னோர் காரணமாக இருக்கலாம். ஆனால் ஆரோக்கியமான திசை வழியில் நாம் இணைந்து விட்டது தான் உண்மை. மலரும் மல்லிகையில் செங்கை ஆழியானின் படைப்புகள் தொடர்ந்து வருவது உனது ஒப்புதல் வாக்கு மூலத்தை உண்மைப்படுத்தும்.

பல காலங்களுக்கு முன்னர் செங்கை ஆழியானுக்கும் அவரது இலக்கியப் பாதையைப் பின்பற்றியவர்களுக்கும், எனது இலக்கியக் கொள்கையாளர்களுக்கும் இடையே இலக்கிய உறவுகளில் கருமை படர்ந்திருந்தது. ஆனால் அதிசயம் என்னவென்றால் இன்று நாம் அனைவரும் தத்தமது சொந்தக் கோட்பாடுகளை, கொள்கைகளைச் சிறிதும் விட்டுக் கொடுக்காமல் இணைந்தே செயலாற்றி வருகின்றோம். இந்த அளவிற்குச் செங்கை ஆழியான் பெரிதும் பங்காற்றியதுண்டு.

கொழும்புப் பல்கலைக்கழக உதவி விரிவுரையாளராகவும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ஆறு ஆண்டுகள் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். அக்காலத்தில் கொழும்புத் துறை ஆசிரிய கலாசாலை வருகை விரிவுரையாளராகவும் இருந்துள்ளார்.

அக்காலங்களிலும் பின்னர் வெளிவாரிப் பட்டதாரி மாணவர்களின் விரிவுரையாளராகவும் இருந்த காலத்தில் நூற்றுக் கணக்கான புவியியலாளர்களை உருவாக்கியுள்ளார். இவர் எழுதிய புவியியல் நூல்கள் இன்றும் உயர் வகுப்பு மாணவர்களின் வழிகாட்டிகளாக விளங்குகின்றன.

இவரது ஐம்பதுக்கு மேற்பட்ட புவியியல் நூல்களை வழிகாட்டியாகக் கொள்ளாத புவியியல் மாணவர்கள் எவரும் இருக்க முடியாது. பரந்தளவில் ஒரு புவியியல் சமூகத்தினை இவர் இந்நாடு முழுவதும் கொண்டுள்ளார். இவருடைய ஒரு தொகுதி நூல்கள் பொது அறிவு, பொது உளச் சார்பு சார்ந்தவை.

பதவிகள்

1964 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தைவிட்டு பட்டதாரியாக வெளியேறி 1971 வரை ஆசிரியத் தொழிலில் பணியாற்றினார். 1971 இல் ஓய்வுபெறும் வரை உயர் நிர்வாக சேவை அதிகாரியாகப் பதவிகள் பல வகித்தார். பதவிகள் இவரைத் தேடி வந்தன. அவர் வகித்த பதவிகள் இவரால் பெருமை பெற்றன.

முதலில் காரியாதிகாரியாகக் கிண்ணியாவிலும் பின்னர் செட்டிகுளத்திலும் கடமையாற்றினார். அதன் பின்னர் உதவி அரசாங்க அதிபராகத் துணுக்காய், பாண்டியன்குளம், கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் பணியாற்றி, கிளிநொச்சியின் மேலதிக அரசாங்க அதிபராகவும் பிரதிக் காணி ஆணையாளராகவும் பதவி உயர்வு பெற்றார்.

கிளிநொச்சி மாவட்டம் உருவாகியபோது, அம் மாவட்டத்தின் நிர்வாகத்தினை முதன் முதல் ஒழுங்கு படுத்திய மூன்று நிர்வாக சேவை அதிகாரிகளில் அவர் ஒருவர். 1992 வரை குணராசா தனது நிர்வாகப் பணிகளை, அதாவது இரண்டு தசாப்தங்களுக்கு மேல் வன்னிப் பிரதேசங்களிலேயே ஆற்றியுள்ளார். அவர் கூறுவதுபோல இப்பிரதேசங்களின் வாழ்வியற் கோலங்களை அவர் அவற்றின் பலத்தோடும் பலவீனத்தோடும் தரிசித்து இலக்கிய வடிவங்களுள் சிறைப்படுத்திக் கொள்ள இந்த அனுபவம் உதவியது.

1992 ஆம் ஆண்டு தான் பிறந்த மண்ணிற்கு அதாவது யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெற்று, யாழ்ப்பாணப் பிரதேச செயலாளராக அமர்ந்து கொண்டார். இக்கால வேளையில் 1997 -/ 2000 வரை ஏறக்குறைய மூன்றாண்டுகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அவரைத் தன் பதிவாளராகப் பெற்று அவரது சேவையை அனுபவித்தது.

பின்னர் மீண்டும் நல்லூரின் பிரதேச செயலாளராகப் பதவியேற்று, 2001 இல் ஓய்வுபெற்றார். ஓய்வுபெற்ற பின்பும் அவரது நிர்வாகப் பணி ஓயவில்லை. ஓய்வுபெற்ற பின்னர் இரண்டாண்டுகள் சங்கானை, தெல்லிப்பளை ஆகிய பிரதேசங்களின் பிரதேச செயலாளராகக் கடமையாற்றினார்.

அதன் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணத்தின் வடபிராந்திய ஆணையாளராகப் பதவி வகித்தார். அவ்வேளை அவரை யாழ்ப்பாண மாநகர சபையின் மாநகர ஆணையாளராக மாகாண சபை நியமித்தது. ஓராண்டிற்கு மேல் யாழ்ப்பாண மாநகர ஆணையாளராகப் பணிபுரிந்துள்ளார்.

இன்று உலக வங்கியினால் நிதி உதவப்பட்டு, வடக்கு கிழக்கு மாகாணத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் சமூக நிலைப்பாட்டிற்கான அணித் தலைவராகக் கடமையாற்றி வருகின்றார். அவரது நிர்வாகப் பணி இன்னமும் ஓயவில்லை. காரியாதிகாரி, உதவி அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேசச் செயலாளர், பிராந்திய ஆணையாளர், பல்கலைக்கழகப் பதிவாளர் மாநகர சபை ஆணையாளர் என அவர் வகித்த பதவிகள் பலவாகும். அவை அவரால் பெருமையுற்றன.

சமூகப் பணிகள்

யாழ். இலக்கிய வட்டத்தின் ஆரம்பகால உறுப்பினராகவும் இன்று அதன் தலைவராகவும் உள்ளார். இலங்கை இலக்கியப் பேரவையின் தலைவராகவும் விளங்குகிறார். தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இலக்கிய கலாநிதி பண்டிதமணி க. கணபதிப்பிள்ளையின் நினைவாக வழங்கப்படும் சம்பந்தர் விருதுக்குழுவின் இணைப்பாளர் கனகசெந்தி கதா விருது அமைப்பின் பணிப்பாளர், இவற்றைவிட கலட்டி எச்சாட்டி மஹாமாரி அம்மன் தேவஸ்தானம், வல்லூன்றி புனித தீர்த்தக்கேணிப் பரிபாலன சபை, கோம்பயன்மணல் பரிபாலன சபை என்பனவற்றின் தலைவராகவும் விளங்குகிறார்.

சிறுகதைத் துறை

ஈழத்தின் சிறுகதைத் துறையில் செங்கை ஆழியான் தனக்கென ஓரிடத்தினைக் கொண்டுள்ளார். சுமார் 150 சிறுகதைகளுக்கு மேல் எழுதியுள்ளார். இலங்கை, இந்தியா, கன்டா, பிரான்ஸ். லண்டன் எழுத்தாளர்களுக்கென்றே ஓர் இடத்தைக் கட்டடத்துடன் பெற்றுத் தருவதில் அவர் ஆற்றிய பங்கு வரலாற்றில் குறிப்பிடத் தக்கதாகும்.

சமீப ஆண்டுகளாக மக்களிடையே நமது படைப்புகளை வாசிக்கும் வழக்கம் அதிகரித்து வந்துள்ளது. இதற்கு நமது மக்களின் பாரிய அனுபவங்களும் அரசியல் விழிப்புணர்வுமே அடிப்படைக் காரணங்களாகும்.

இப்படி அதிகமாக வாசிப்புப் பழக்கமுள்ளவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் படைப்புக்களைத் தந்தவர்களில் முதன்மையானவர் செங்கை ஆழியான் ஆவார்.

நமது படைப்புகளில் அதிக நூல்களை வெளியிட்டவரும் அவர் தான். இதன் மூலம் அண்மைய ஆண்டுகளில் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் மீது கணிசமானவளவு தாக்கத்தை ஏற்படுத்தும் செல்வாக்கை அவர் பெற்றுள்ளார். இவரது படைப்புகளில் சில காலத்தையும் மீறிப் பேசப்படுமென மெய்யாகவே நம்புகிறேன். சில கதைகள், நாவல்கள் மொழி மாற்றம் செய்யப்படுவதன் மூலம் இவரது பரிமாணம் வேறு பல கட்டங்களை அடையும் எனவும் நம்புகிறேன்.

புதிய வரலாற்றுக் காலகட்டத்தில் நாம் வசிக்கின்றோம். இந்தக் கால கட்டத்திற்குரிய அடி ஆதாரமான மனிதனை – அவனுடைய மானிட உணர்வுகளை – எழுத்தாளர்கள் என்கின்ற முறையில் தூர நோக்காகச் சிந்தித்துப் புதிய புதிய கோணங்களில் தரிசித்து எழுத்தில் வடித்து வைக்க வேண்டும். அவை வெறும் பிரசாரக் கோஷங்களாக அமைந்து விடாது, ஆழமான கலை இலக்கியப் படைப்புகளாக வருங்காலச் சந்ததியினருக்கு நமது பரம்பரையின் முதுசமாக விட்டுச் செல்ல வேண்டும்.

செங்கை ஆழியான் என்கிற படைப்பாளியிடம் எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு. சாதிக்கப் பிறந்தவர் என்கிற எதிர்பார்ப்புகளும் உண்டு. வருங்காலத்தில் இந்த எழுத்துக்கள் அதற்குச் சாட்சி சொல்லும். 

col_5133657718_4049860_29022016_spp_gry

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux