தாயகத்தில் சந்ததி காக்கும் கல்விப்பணியில் முன்னுதாரணமாக திகழும்-இலங்கை ப. மா.ஒன்றியம் பிரான்ஸ்!

தாயகத்தில் சந்ததி காக்கும் கல்விப்பணியில் முன்னுதாரணமாக திகழும்-இலங்கை ப. மா.ஒன்றியம் பிரான்ஸ்!

தாயகத்தில் சந்ததி காக்கும் கல்விப்பணியில் முன்னுதாரணமாக திகழும்-இலங்கை பழைய மாணவர் ஒன்றியம் பிரான்ஸ்

தாயகத்தில் நலிவுற்றிக்கும் எம் உறவுகளின் வாழ்வாதாரத்தை வளம் படுத்த புலத்தில் இருக்கும் எம் உறவுகளின் உதவிகள் பலவழிகளிலும் வந்து கொண்டுதான் இருக்கின்றது. அனால் எமது தேசத்தின் எதிர்காலம் நோக்கிய நீண்ட பார்வையில் , காலத்தின் தேவை உணர்ந்த கட்டாய பணியை காலம் தாழ்த்தாது செய்ய துணிந்திருக்கும் இந்த ஒன்றியத்தின் செயற்பாடு உண்மையில் போற்றப்படவேண்டியது . மிகப்பெரிய ஒரு பணியை சரியாக இனங்கண்டு அதற்கான பொறிமுறைகளை நிதானமாக உருவாக்கி அதனை நிறைவேற்றி காட்டியிருக்கின்ற அவர்களின் செயற்பாடு, இருண்டு கிடந்த எம் தேசத்துக்கு ஒரு நம்பிக்கை வெளிச்சத்தை காட்டி நிற்கின்றது என்றால் அது மிகையாகாது. பிரான்சு நாட்டில் பாரிசில் இருந்தபடி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் பரந்து கிடக்கும் எம் தேசத்தில் கல்விக்காய் ஏங்கும் வறிய மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கு கரம் கொடுத்து நிற்கும் இவர்களின் செயற்திறன் மிக்க கட்டமைப்பும் , அதனை நிர்வகிக்கும் திறனும், ஓவ்வொரு மாணவனையும் கண்காணித்து கொண்டிருக்கின்ற அக்கறையான பொறிமுறையும் , ஆர்பரிக்காமல் அமைதியாக கடமையை மட்டுமே செய்யும் கண்ணியமும் எமினத்தை தரணியிலே தலை நிமிர்த்தும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி நிற்கிறது. இனங்காணப்படுகின்ற ஓவ்வொரு மாணவனுக்கும் வருடத்துக்கு தலா 10000.00 ரூபாய்களை வழங்க உறுதி எடுத்திருக்கும் இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியம்பிரான்சு ஆயிரம் மாணவர்களை நோக்கி தனது முதலாவது திட்டத்தை நடைமுறைப்படுத்துவது இன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கவேண்டி உள்ளது.தெரிவுசெய்யப்படும் மாணவர்கள் கண்ணியமாக கல்வியை தொடர்ந்தால் அவர்கள் கல்வியில் உயர்ந்த நிலை அடையும்வரை அவர்களுக்கான உதவிகள் தொடரும் என்கின்ற ஒன்றியத்தின் நிலைப்பாடு உண்மையில் அந்த மாணவர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரமாகவே அமைந்திருக்கின்றது.

இந்த சாதனையை , தேசத்தை நோக்கிய மிகப்பெரிய பொறுப்பை கையில் எடுத்திருப்பவர்கள் யார்?. இதற்கான பதிலும் எம் இனத்திற்கு ஒரு முன்னுதாரணமாகவே அமைந்திருக்கின்றது.

இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் செறிந்து வாழும் தேசங்களில் பிரான்சும் ஒன்று. அதன் தலைநகரம் பாரிஸ். பாரிஸ் நகரத்தின் இதயப்பகுதியில் எம்மக்கள் இடம்பிடித்து இருக்கிறார்கள் அதன் பெயர் லாசப்பேல்“. எமது நாட்டின் அடையாளங்களுடன் எம் தேசத்தை சித்தரிக்கும் அந்தப்பகுதி, எம் இனத்தின் உழைப்பையும், இயல்புகளையும், பண்பாடுகளையும், கலாச்சாரத்தையும் உலகிற்கு உணர்த்தி நிற்கும் புலம்பெயர்ந்த எம் இனத்தின் தலைநகரம் என்று சொன்னால் அது பொய்யல்ல. அந்த மண்ணில் இருந்து தான் இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியம் பிரான்சு ” 2015ம் ஆண்டு கால்பதித்து 2016ம் ஆண்டு தை மாதம் 5ம் திகதி எம் தேசத்துக்கு கரம் கொடுத்திருக்கின்றது. அதாவது 05/01/2016 அன்று முதல் கட்டமாக 260 மாணவர்களுக்கான நிதியை வவுனியா மக்கள் வங்கியில் உள்ள இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியம் பிரான்சு இன் கணக்கின் ஊடாக ஓவ்வொரு மாணவனது வங்கி கணக்கிற்கும் பரிமாற்றம் செய்துள்ளது. 260 மாணவர்களுக்குமான வங்கி கணக்குகளையும் திறந்து அந்த நிதியை அந்த மாணவர்கள் தமது கல்வியை முன்னிறுத்திய அத்தியாவசிய தேவைக்காக பயன்படுத்துவற்கான வழியையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றது. சத்தமே இல்லாத சாதனை இது.

பிரான்சில் இருக்கின்ற எமது தேசத்தின் பல பழைய மாணவர் சங்கங்கள் தமது பாடசாலைகளையும் கடந்து எமது நாட்டை நோக்கி சிந்தித்ததன் பயனால் ஒன்றாக சங்கமித்து உருவாக்கியதே இந்த ஒன்றியம்.தாயகத்தில் வாழுகின்ற எம் உறவுகள் மீது கொண்ட பாசமும் நேசமும் மட்டுமே இவர்கள் மனங்களில் வேர்விட்டு ஆங்காங்கே விழுதெறிந்து விருட்சமாக எழுந்து நிற்கின்றது UAETS -FRANCE .இந்த விருட்சத்தில் இணைந்திருக்கின்ற ஓவ்வொரு பழைய மாணவனாலும் அவனை உருவாக்கிய அந்த பாடசாலை அன்னை பெருமை கொண்டு நிற்கின்றாள். இந்த ஒன்றியத்தில் இணைத்திருக்கின்ற பாடசாலைகளின் பழைய மாணவர்களின் ஒற்றுமை ,எம் இனத்தின் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்கின்றது. தமது காத்திரமான பணியாலும் , அன்பான அணுகுமுறையாலும், அனைத்து பழைய மாணவர்களுக்கும் உரிமையுள்ள தன்மையாலும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளபட்ட ஒரு ஒன்றியமாக தன்னை நிலைநிறுத்தி எமது எதிர்கால சந்ததியின் கல்வி வளர்ச்சியே தமது இலக்கு என்ற கொள்கையோடு சத்தமில்லாமல் தனது பணியை தொடர்கின்றது. ’’கற்க கசடற கற்றவை கற்ற பின் நிற்க அதற்கு தக’’ என்ற வள்ளுவரின் வாக்குக்கு அமைவாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்த பழைய மாணவர்கள் அனைவரும் என்றும் எம் தேசத்தால் நன்றியோடு பார்க்கப்படுவார்கள்.

நன்றி .

DSC_0116 DSC_0102

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux