யாழில் கொள்ளைக் குற்றவாளிகளுக்கு கடும் சிறைத் தண்டனை-நீதிபதி இளஞ்செழியன் கடும் எச்சரிக்கை-விபரங்கள் இணைப்பு!

யாழில் கொள்ளைக் குற்றவாளிகளுக்கு கடும் சிறைத் தண்டனை-நீதிபதி இளஞ்செழியன் கடும் எச்சரிக்கை-விபரங்கள் இணைப்பு!

யாழ்.குடாநாட்டில் புதிய விதத்தில் தலையெடுத்துள்ள கொள்ளை, வழிப்பறிக் கொள்ளை, வீட்டுத்திருட்டுக் குற்றவாளிகளுக்கு கடும் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும், வழக்கு முடியும் வரையில் இவர்களுக்குப் பிணை வழங்கப்பட மாட்டாது என்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
பெருமளவு போதைவஸ்தை உடைமையில் வைத்திருந்த சந்தேக நபர்களுக்குப் பிணை கோரி கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணையின்போதே நீதிபதியினால் இந்த எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கின்றது. அத்துடன் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பெற்றோர்களுக்கு எதிராக ஈவிரக்கமின்றி தண்டனை வழங்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்துள்ளார். 
யாழ். குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற கொள்ளைச் சம்பவங்களின் மூலம் குற்றச் செயல்கள் அதிகரித்துச் செல்லும் போக்கு தலையெடுத்துள்ள நிலையில் போதை வஸ்து குற்றச்செயல் சந்தேக நபர்களுக்குப் பிணை வழங்க முடியாது என நீதிமன்றம் மறுத்துள்ளது.
குற்றச் செயல்கள் இடம்பெறுகின்ற பிரதேசங்களில் சைக்கிள் சுற்றுக்காவல் நடவடிக்கையில் பொலிஸாரை ஈடுபடுத்துமாறு, இந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த பருத்தித்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் நெல்லியடி பதில் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு, மன்று நேரடியாக உத்தரவிட்டுள்ளது. 
அதேபோன்று புதிதாகப் பதவியேற்றள்ள மானிப்பாய், கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரிகளையும் மன்றுக்கு அழைத்து விசேடமாக கொள்ளை வழிப்பறி கொள்ளை, திருட்டுக்கள் என்பவற்றைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருமாறு பணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் யாழ். குடாநாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுகின்ற இடங்கள் அனைத்தையும் உன்னிப்பாக அவதானித்து, அடையாளப்படுத்துவதுடன், அனைத்து பொலிஸ் நிலையங்களின் ஊடாகவும் சைக்கிள் சுற்றுக்காவல் கண்காணிப்புச் செயற்பாடுகளை ஆரம்பிப்பதுடன், அதிரடிப்படை பொலிஸாரைப் பயன்படுத்தி குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடாநாட்டின் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். 
Sans-titre

Leave a Reply