எளிமை என்பது மனித வாழ்வில் என்றும் இனிமையானதே. மனிதன் ஓடி ஓடி உழைக்கின்றான். உண்கின்றான், வாழ்கின்றான், உறங்குகின்றான் இறுதியில் வாழ்வு முடிவடைகின்றது. இதற்கிடையில் எத்தனையோ சம்பவங்கள் நடந்து முடிவடைந்து விடுகின்றன. எனவே ஒருவனுக்கு உழைப்பு எவ்வளவு முக்கியமோ இவைபோல் ஓய்வும் சேமிப்பும் எளிமை வாழ்வும் இன்றியமையாததாகும். இன்றைய கணினிவேக பணம் பண்ணும் உலகில் எளிமையாக வாழ்வோர் மிகச் சிலரே. அந்தவகையில் மிகவும் எளிமையாக வாழ்ந்த ஒரு நாட்டின் தலைவரைப்பற்றிப் பார்ப்போம்.
தென்னமெரிக்கக் கண்டத்திலுள்ள குட்டி நாடுதான் உருகுவே அல்லது உருகுவை என்று அழைக்கப்படும் நாடாகும். இந்த நாட்டைப் பற்றிப் பலருக்குத் தெரிந்துகொள்ள வாய்ப்புக் குறைவாக இருந்தாலும் உலக உதைபந்தாட்ட ரசிகர்களுக்கு இந்தநாட்டின் உதைபந்தாட்ட அணியைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. 2014ம் ஆண்டு இடம்பெற்ற உலககிண்ண உதைபந்தாட்டத்தில் பெரும் பெரும் நாடுகளை கதிகலங்க வைத்த குட்டிநாடு. இப்போட்டியில் அபாரமாக விளையாடி உலகத்தின் கவனத்தை ஈர்த்துக்கொண்டாலும் இறுதிப் போட்டிக்குச் செல்லாமை உலக ரசிகர்களுக்குச் சிறிது கவலையை ஏற்படுத்தியது என்றே கூறவேண்டும்.

இந்த உருகுவே நாடு தென்னமெரிக்காக் கண்டத்தில் பிறேசில் ஆர்ஜன்ரீனா நாடுகளையும் கடலையும் எல்லையாகக்கொண்ட நாடாகும். 1.76.215 சதுரகிலோ மீற்றர் பரப்பளவுகொண்ட இந்த நாட்டின் மொழி ஸ்பானிஸ் மொழியாகும். பிறேசில் நாட்டிடமிருந்து 1825.08.25ஆம் திகதியன்று விடுதலைபெற்ற இந்த நாட்டின் சனத்தொகை3.4 மில்லியனாகும். 47 வீதமானோர் கத்தோலிக்க மதத்தினராவர். இந்த நாட்டின் முன்னாள் தலைவரைப் பற்றியது தான் இந்த எளிமையின் விடயமாகும்.
இந்தநாட்டின் தலைவராக கடந்த பத்து வருடங்களாக இருந்து அண்மையில் ஓய்வு பெற்றவர் தான் 79 வயது நிரம்பிய முயிகா(Mujica) இவர் தனது ஆட்சிக் காலத்திலும் இன்றும் குடிசையில்தான் ஆடம்பரமில்லாமல் எளிமையாக வாழ்ந்து வருகின்றார். தனது குடிசை வீட்டில் தனது மனைவி மற்றும் வீட்டுப் பிராணிகளுடன் வாழ்ந்து வருகின்றார். (மேலேயுள்ள படத்தில் அவரின் குடிசை வீடு காணப்படுகின்றது.)

இவை மட்டுமல்ல 1985ஆம் ஆண்டு வாங்கிய காரையே இன்றும் பாவிக்கின்றார். அதாவது நாடாளுமன்றத்துக்குப் போவதாயினும் மற்றும் தனிப்பட்ட பிரயாணங்களாயினும் இந்த வண்டியையே இவ்வளவு காலமும் பாவித்து வருகின்றார் என்னும் போது ஆச்சரியப்படாமல் இருக்க முடியுமா! ஆம்.. நாட்டின் தலைவர், மந்திரிமாரின் தலைவர். ஆடம்பரமாக மாடாமாளிகையில் வாழ்ந்திருக்கலாம். பாதுகாப்புப் படைகள் புடைசுழ, காவலாளிகள், ஏவலாளிகள், பணிப் பெண்கள் எனச்சேவை செய்ய வீட்டில் சுகபோகங்களுடன் வாழலாம் இவர், அனைத்தையும் வேண்டாம் என்று ஒதுக்கி சாதாரண குடிமகன்போல் மக்களோடு மக்களாக வாழ்ந்து வருகின்றார். கடைகளுக்குச் செல்வதும் தினமும் தினசரிப் பத்திரிகைகள் வாங்கிப் படிப்பதும், நடைபயிலலும், வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்வதும் இந்த 79 வயதான நாட்டுத் தலைவனின் அன்றாட வேலைகளாகும்.
இவற்றைவிட மந்திரிசபை பாராளுமன்றக் கூட்டங்களில் ஒழுங்காகக் கலந்துகொண்டு அரச கடமைகளைச் செய்து வந்த இவரையே உலகத்தின் எளிமையான நாட்டுத் தலைவர் என உலகின் பல ஊடகங்கள் வர்ணித்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். பாராட்டுக்குரிய இவரைப் போன்ற தலைவர்களை உலகில் இன்று எங்கு காண்பது. இவரைப் போற்றாமல் இருக்கமுடியுமா?
இன்றைய நாட்டுத்தலைவர்களைப் பாருங்கள் சர்வாதிகாரம், ஆட்சி அதிகாரம் சகல செளபாக்கியம், ஆடம்பரம், அரச பணத்தில் வாழ்வு, சந்ததி சந்ததியாக பொது மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதும் வரிப் பணத்தில் வாழ்வதும் சர்வசாதாரணமாகி விட்டது. இன்னும்பல தலைவர்கள் அரச படைகளின் பலத்துடன் ஏகபோக உரிமைகளோடு பல பெண்களை அடிமைகளாக்கி வாழ்கின்றார்கள். ஆனால் இந்த உருகுவே நாட்டின் தலைவர் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் சாதாரண பிரசைகளைப் போல் மக்களோடு மக்களாக இணைந்து வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது இவர் தான் மக்களின் உண்மையான தலைவன் எனப் போற்றலாம்.
ஆகவே நாம் எங்கு எப்படி ஆடம்பரமாக சகல வசதிகளுடன் வாழ்ந்தாலும், ஆடம்பரத்தில் மூழ்கி முத்தெடுத்தாலும் எப்போதும் எளிமையைக் கடைப்பிடித்து வாழவேண்டும். சக மனிதருக்கு உதவிபுரிந்து வாழ வேண்டும். நீதியுடனும் நேர்மையுடனும் உழைப்புடனும் மக்களோடு மக்களாக வாழ்வோமானால் எங்கள்வாழ்வு முடிந்தாலும் எங்கள் வாழ்வு என்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும். இந்த மனிதனின் வாழ்க்கைப் பாடத்தையும் பின்பற்றி வாழ்வோம். எளிமையை எப்போதும் கடைப்பிடித்து வாழ்வோமாக.
