தமிழர்கள் அனைவரும் கொண்டாடி வரும்-தைத்திருநாளாம் தைப்பொங்கல் தினத்திற்கு மறுநாள்-விவசாயிகளினால் தான் வளர்த்த மாடுகளுக்கு நன்றியோடு எடுக்கும் ஒரு விழா தான் மாட்டுப்பொங்கல் அல்லது பட்டிப்பொங்கல் ஆகும்.
இந்த வருடமும் வழமைபோல் யாழ் தீவகத்தின் அனைத்துப் பகுதிகளிலும்,விவசாயிகளினால் மாட்டுப்பொங்கல் விழா சிறப்பாக நடத்தப்பட்டது.
தீவகம் அல்லைப்பிட்டியில் விவசாயி ஒருவரினால்,மிகச்சிறப்பாக நடத்தப்பட்ட-மாட்டுப்பொங்கலினை கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.
இனி மாட்டுப்பொங்கல் பற்றி……
மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது மாட்டுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய மாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாக தமிழர்கள் இப்பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
மாட்டுப் பொங்கல் தினமான இன்றைய தினம் மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டி விடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் சலங்கை கட்டி அழகுபடுத்துவார்கள். திருநீறு பூசி ,குங்குமப் பொட்டிட்டு, தாம்புக் கயிறு அணிவித்து தயார் செய்வார்கள்.
உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்துக் கருவிகளையும் இதே போல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின்னர் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.