தமிழர் வாழ்வுடன் பின்னிப்பிணைந்த உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகை-சிறப்பு இணைப்பு!

தமிழர் வாழ்வுடன் பின்னிப்பிணைந்த உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகை-சிறப்பு இணைப்பு!

தமிழர்களாகிய இந்துக்கள் வாழ்வில் வருடா வருடம் மாதாந்த ரீதியாக பண்டிகை என்ற பெயரில் எத்தனையோ பண்டிகைகள் வந்து போகின்றன. ஆயினும் இவற்றில் முதன்மை பெறுவது உழவர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகைதான்.

ஏனெனில் ஏனைய திருநாட்கள், பண்டிகைகள் யாவும் பிற மதத்தவர்கள் பிற இனத்தவர்களுடன் இணைந்து கொண்டாடப்படுபவை ஆகும். தைப்பொங்கல் திருநாளை மட்டும் இந்துக்கள் ஒன்று சேர்ந்து ஒரே நாளில் ஒரே திதியில் கொண்டாடுகின்றனர். இதனால் தைப்பொங்கல் தினத்தை தேசிய பொங்கல் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.

தமிழர்களுக்குரிய பன்னிரண்டு மாதங்களையும் தற்காலத்தில் சித்திரையில் தொடங்கி பங்குனி முடிய கணக்கிட்டுக் கொள்கின்றனர். இதனடிப்படையிலேயே பஞ்சாங்கங்கள் வெளிவருகின்றன.

தமிழர்களுக்குரிய 60 வருட சுற்றுப் பலன்களையும் சித்திரை மாதம் முதல் சரியாகக் கணக்கிட்டு வெளியிட்டு வருகின்றனர் சாஸ்திர விற்பன்னர்கள்.

ஆனால் தை மாதம் முதல் மார்கழி மாதம் வரை கணக்கிடுவதே தமிழர் முறையென பண்டைய இலக்கியங்கள் சான்று பகிர்கின்றன. விஞ்ஞான ரீதியாக கூட தை மாதமே சூரியன் தனது முழு ஒளிக் கதிர்களையும் பரப்புகின்ற தொடக்க மாதம் என்றால் மிகையாகாது.

சமய நூல்கள் தைப்பொங்கல் திருநாளை மகர சங்கராந்தி என்று கூறுகின்றன. சூரியன் தெற்கிலிருந்து வடக்காகப் பூமத்திய ரேகையைக் கடக்கும் போது தனு இராசியிலிருந்து மகர ராசிக்கு இடம் மாறுகின்றது. இந்த இடப்பெயர்ச்சியே மகர சங்கராந்தி எனக் கொள்ளப்படுகின்றது. மகர சங்கராந்தி உத்தராயண சங்கராந்தி என்றும் கூறப்படுகின்றது. உத்தரம் – வடக்கு ,அயனம் – செல்லல்.

எனவே சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் காலத்தின் தொடக்கத் திருநாளே உத்தராயண சங்கராந்தி ஆகும். சூரியனின் நகர்வு உழவர்களுக்கு சாதகமான காலநிலையை தோற்றுவிக்கின்றது. அதாவது விவசாயத்திற்கு சாதகமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கின்றது.

மிகப் பண்டைக் காலந் தொட்டு தமிழருக்கே உரித்தான திருநாளாக இருந்து வரும் இப்பொங்கல் திருநாள் உழவர் பெருமக்களுக்கு ஒரு சிறப்பான நன்னாளாக இருந்து வந்துள்ளது. குறிப்பாக தமிழ் (இந்து) உழவர்கள் தமது உழவுத் தொழிலுக்கு பேருதவி புரிந்த சூரியக் கடவுளுக்கு நன்றிக் கடன் செலுத்தும் புனித நாளாகவும் பொங்கல் திருநாள் இருந்து வந்திருக்கின்றது.

சங்க காலத்தில் நெல் அறுவடையின் போது நல்ல மழை வீழ்ச்சியுடன் நாடும் வீடும் ஊரும் உறவும் செழிக்க பெண்கள் சூரிய பகவானை நோக்கி விரதமிருந்து தை மாதத்தின் முதல் நாளான தைப்பொங்கல் பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடி வந்துள்ளனர். தங்களுக்கு இவ்வாண்டில் நல்ல விளைச்சலைக் கொடுத்த பூமி, சூரியன், நீர் ,விவசாயத்திற்கு உதவிய காளை, பசுக்கள் போன்ற இயற்கை சக்திகளுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில் பொங்கல் படைத்து வழிபடுவார்கள்.

தைப்பொங்கலுக்கு மறுநாள் பட்டிப் பொங்கல் என்ற மாட்டுப் பொங்கல் இடம்பெறும்.

பொங்கல் பண்டிகையை பொதுவாக நான்கு நாட்களைக் கொண்ட ஒரு சிறப்பான திருநாளாக எமது மூதாதையர்கள் கொண்டாடி வந்துள்ளனர். இதில் இயற்கையின் நியதி கூட பொதிந்துள்ளதை அவதானிக்க முடியும்.

பொங்கலுக்கு முதல்நாள் போகிப் பண்டிகை இடம்பெறுகின்றது. இதில் பொங்கல் பண்டிகைக்காக வீட்டை சுத்தப்படுத்துவது என்பது அர்த்தமாக உள்ளது. இதில் புனிதம் , சுகாதாரம் பேணப்படுகின்றது. இரண்டாம் நாள் பொங்கல் பண்டிகை (தை முதல்நாள்) இதற்கு அடுத்த நாள் (மூன்றாம் நாள்) மாட்டுப் பொங்கல். கடைசியாக காணும் பொங்கல் என வரிசையாக நான்கு தினங்கள் கொண்டாடப்படுகின்றது. இம்மரபை இன்றுவரை எமது மக்கள் கடைப்பிடித்து வருதுவது பெருமைக்குரிய விடயம் எனலாம்.

எமது பாரம்பரிய முறையின்படி மனிதன் வாழ்ந்த காலத்தில் பட்டினி என்பது எள்ளளவும் இருந்திருக்கவில்லை. உலகிற்கு உணவு கொடுத்த பெருமை எமது கீழைத்தேய நாடுகளுக்கு உள்ளது. வறுமையை அறியாதது தமிழினம்.ஆனால் இன்று மேற்குலக விவசாயப் படிமுறைக்குத் தாவி விட்டது. இதன் பலனாகவே பல்வேறு நோய்களுக்கும் இயற்கையின் சீற்றத்திற்கும் உட்பட்டிருக்கின்றோம்.

அன்று விவசாயி இயற்கையோடு ஒன்றி உறவாடி நல்ல விளைவைப் பெற்றுக் கொண்டான். கடவுளையும் இயற்கையையும் மனமுருக வணங்கி வந்தான். சூரிய ஒளி மூலமே இவ்வுலகம் இயங்கி வருகின்றது எனக் கண்டு சூரியனை வணங்கி நோய் நொடிகளின்றி நெடுநாள் வாழ்ந்து வந்துள்ளான்.

சூரியனின் சக்தி பெற்றே ஏனைய கிரகங்கள் யாவும் இயங்குகின்றன என்பதை அன்றே மெய் ஞானத்தின் ஊடாக எமது அறிஞர்கள் கண்டு அதைக் கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனால் தான் சூரிய வணக்கம் இந்து மதத்தில் முக்கியத்துவம் பெறுகின்றது. ஒளியே மூல வடிவம் என்கிறது இந்துமதம்.

அன்றைய விவசாயிகள் பொங்கல் பொங்கி முடிந்தவுடன் வீட்டு முற்றத்தில் சூரியக் கடவுளின் ஒளிக்கீற்றுப் படுகின்ற இடத்தில் சிறு பந்தலிட்டு (கரும்பு பாவிப்பது வழக்கம்) அதில் தலைவாழை இலை பரப்பி பொங்கலையும், இதர தானியங்கள் பழவகைகளையும் பக்தியோடு படைத்து சூரிய உதயத்தில் தீபம் காட்டி ஆராதனைகள் செய்து வணங்குவர். இதன்பின் தமது சுற்றத்தாருக்கு பொங்கலை பிரசாதமாக வழங்குவார்கள்.

இதன்பின் மாலையில் பல கலாசார விளையாட்டுகள் இடம்பெறும். சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டுகளுடன், அறிஞர்கள் ஒன்று சேர்ந்து புதிய கலைப்படைபுக்கள் அரங்கேற்றுதல் போன்றன இடம்பெறும். இது தமிழர்களின் ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாகவும் அன்றைய கால கட்டத்தில் இருந்து வந்திருக்கின்றது.

இன்றைய இயந்திரமயமான கால கட்டத்தில் பொங்கல் பண்டிகை பொங்கலுடனும், புதிய ஆடைகள் அணிவது பட்டாசு வெடியோசையுடன் பெரும்பாலும் நிறைவடைவதைக் காணக் கூடியதாகவுள்ளது.

ஆனால் ‘தைபிறந்தால் வழி பிறக்கும்’ என்ற சொல் மட்டும் மாற்றம் காணாத ஒரு மரபாக இருந்து வருகிறது. இந்துக்களின் வாழ்க்கை நெறிமுறைகள் காலத்தின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. இது உத்தராயண காலம், தெட்சணாயண காலம் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் (தை) ஆறுமாதம் உத்தராயண காலம் எனவும் (தை – ஆனி) இரண்டாவது ஆறு மாதம் தெட்சணாயம் எனவும் (ஆடி – மார்கழி) கொள்ளப்பட்டுள்ளது.

உத்தராயண காலம் தேவர்களுக்கு பகல்காலம். தட்சணாயணம் தேவர்களுக்கு இரவுக் காலம். மார்கழி மாதம் தேவர்களுக்கு விடிகாலைப் பொழுது. இக்காலத்திலேயே (மார்கழி) திருவெம்பாவை பூஜைகள் இடம்பெறுகின்றன. தேவர்களின் வருகையை வரவேற்பு செய்வதற்காகவும் அவர்களின் ஆசிகளை, அருளைப் பெறுவதற்காகவும் பாவை நோன்பு நோற்கப்படுகின்றது.

தை மாதம் தொடக்கம் முதல் எமது மங்கள காரியங்களான திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற அனைத்து நல்ல சுப நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. நாடுகளைப் பொறுத்த வரை தை பிறப்புடன் புதிய நாடுகளுடன் ஒப்பந்தங்கள் என நல்ல பல திட்டங்கள் முன்னெடுக்கப்படும். மக்கள் மனங்களில் கூட புதிய உத்வேகம் தோற்றம் காணும்.

எனவே தமது முன்னோர் காலம் அறிந்து செய்து வந்த உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகை உட்பட அனைத்துப் பண்டிகைகளையும் மரபு மாறாது பேணிப் பாதுகாக்க வேண்டும்.

எமது மரபுகள் அழிந்தால் அது இனத்தின் அழிவுக்கு வித்திடும்.

இந்த தைத்திருநாளில் நாம் சகல வளங்களும் பெறுவதுடன் நாடும் நாமும் பெற வேண்டுமென பிரார்த்திப்போம்.

(பனங்காடு தினகரன்
நிருபர்) 

DSC004481

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux