புதிய தொழில் நுட்பத்துடன் இலவச மருத்துவ ஊர்திச் சேவை வட மாகாணத்தில் தொடக்கம்-விபரங்கள் இணைப்பு!

புதிய தொழில் நுட்பத்துடன் இலவச மருத்துவ ஊர்திச் சேவை வட மாகாணத்தில் தொடக்கம்-விபரங்கள் இணைப்பு!

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடமாகாணத்தின் கிராமப்புறங்களில் நிலவுகின்ற போக்குவரத்து வசதியின்மையைக் கருத்திற் கொண்டு வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சகம், இலவச ஆம்புலன்ஸ் சேவையொன்றை புதனன்று ஆரம்பித்திருக்கின்றது.

வடமாகாண சுகாரத்துறை அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம் கிளிநொச்சியில் இதனை ஆரம்பித்து வைத்திருக்கின்றார்.

நூறு ஆம்புலன்ஸ் வண்டிகள் இதற்காகப் பயன்படுத்தப்படவுள்ளன.

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் இருந்து ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் கீழ் இந்த 100 ஆம்புலன்ஸ் வண்டிகளின் நடமாட்டங்களைக் கண்காணித்து, அவற்றை சேவையில் வழி நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

கிளிநொச்சியில் 18 ஆம்புலன்ஸ் வண்டிகளும், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய நகர வைத்தியசாலைகளில் தலா 17 வண்டிகளும் யாழ் வைத்தியசாலையில் 31 வண்டிகளையும் வைத்து இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

கிளிநொச்சியில் உள்ள இந்த சேவைக்கான நடுவண் அலுவலத்துடன், 021 2224444, 021 2225555 ஆகிய இரண்டு தொலைபேசி இலக்கங்களின் ஊடாகத் தொடர்பு கொண்டு இந்த சேவையைப் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

மகப்பேற்றுக்கான அவசர உதவி தேவைப்படுகின்ற கர்ப்பிணித் தாய்மார்கள், மாரடைப்பு போன்ற உடலநலப் பிரச்சனைகள் மற்றும் வீதி விபத்துக்களின்போது படுகாயமடைந்து, அவசரமாக வைத்திய சேவை தேவைப்படுபவர்கள், விஷக்கடி – பாம்புக்கடியினால் பாதிக்கப்படுபவர்கள் போன்றவர்கள் அவசரமாக மருத்துவமனைகளுக்குச் செல்வதற்காக இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றார் வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம்.

கிளிநொச்சி அலவலகத்தில் 8 அலுவலர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டிருப்பார்கள். ஆம்புலன்ஸ் வண்டிகளில் அதற்கென பயிற்றப்பட்ட ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

இலங்கையில் முதன் முறையாக அரச சுகாதாரத்துறையினரால் இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவை வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

வீதி விபத்துக்களில் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக வைத்தியசாலைகளுக்குச் செல்ல முடியாத காரணத்தினால் உயிரிழந்துள்ளார்கள். போக்குவரத்து வசதியின்மை காரணமாக பல இடங்களில் அவசர வைத்திய சேவை தேவைப்படுவோர், அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் செல்ல முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இடம்பெறுகின்ற உயிரிழப்புக்களைத் தவிர்ப்பதற்காகவும் நோயாளிகளுக்கு ஏற்படுகின்ற அவசர வைத்திய தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அவர்களை உடனடியாக மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்வதற்காக இந்த இலவச சேவை ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது என்றார் டாக்டர் சத்தியலிங்கம்.

தனியானதொரு கட்டமைப்பின் கீழ் இந்த சேவையை விரிவுபடுத்த வேண்டும் என்பதே வடமாகாண சுகாதார அமைச்சின் நோக்கம். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்றார் வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம்

160106152219_northambulancesrilankasathialingam_512x288_bbc_nocredit

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux