இந்து ஆலயங்களில் மார்கழி மாதத்தில் பக்திபூர்வமாக-இடம்பெற்று வரும் திருவெண்பாவையின் இறுதி நாளான இன்று சனிக்கிழமை(26.12.2015) அதிகாலை 3.30மணிக்கு,தீவகத்தில் பிரசித்தி பெற்ற-வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில்,முத்தமாரியம்மனுடன் சிவகாமி சுந்தரி சமேதராக நடராச பெருமான் எழுந்தருளி தெப்பக்குளத்தில் திருவுலா வந்த கண்கொள்ளாக் காட்சி இடம்பெற்றது.
அல்லையூர் இணையத்தினால்,பதிவு செய்யப்பட்ட ஆருத்திரா தரிசனத்தின் கண்கொள்ளாக்காட்சிகளை கீழே இணைத்துள்ளோம்.
கடந்த இரண்டு வருடங்களாக-வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஆருத்திரா தரிசனம் நடைபெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
தாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமானை நிந்தித்து ஒரு பெருவேள்வி நடத்தினர். சிவனார் பிச்சாடனர் வேடமேற்று பிச்சை எடுக்க முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார். முனிபத்தினிகள் தம்மை மறந்து பிச்சாடனராகிய சிவபெருமான் பின்னே செல்லலாயினார். இதனால் வெகுண்ட முனிவர்கள் வேள்வித்தீயில் மத யானை, முயலகன், உடுக்கை, மான், தீப்பிழம்பு என்பவற்றைத் தோற்றுவித்து சிவன்பால் ஏவினர். சிவனார் மதயானையைக் கொன்று, அதன் தோலை அணிந்தார். மற்றவைகளைத் தானே தரித்துக் கொண்டு முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தினார். இதுவே ஆருத்திரா தரிசனம் என்று சொல்லப்படுகின்றது.