பிரான்ஸ் தலைநகர் பரிஸில் வெள்ளிக்கிழமை இரவு ஆறு இடங்களில் சமகாலத்தில் நடந்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் 128க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 200பேர் வரை காயமடைந்துள்ளனர். இவர்களில் 80பேரின் நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பரிஸ் République பகுதியிலுள்ள நாடக அரங்கினுள் 300க்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்த வேளையில் அவர்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர்களை மீட்பதற்காக சென்ற காவல்துறையினரில் 11பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலிலேயே நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
பிரான்ஸ் ஜேர்மனி நாடுகளுக்கிடையில் நட்புரீதியான உதைபந்தாட்ட போட்டி stade de france மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை மைதானத்தின் வாசலுக்கு அருகே இரண்டு தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டதுடன் துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டுள்ளது.
இரவு களியாட்ட விடுதி ஒன்றின் மீதும், உணவு விடுதி ஒன்றின் மீதும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இதை விட பரிஸ் 11ஆம் மாவட்ட பிரிவில் பொதுமக்கள் கூடியிருந்த இரு இடங்களில் துப்பாக்கி சூடுகள் நடத்தப்பட்டுள்ளன.
இதனையடுத்து நாடு முழுவதிலும் அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து எல்லைகளையும் பிரான்ஸ் மூடியுள்ளது.
பாரிஸ் நகரிலுள்ள மக்கள் அனைவரையும் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இரு தற்கொலை தாக்குதல் நடைபெற்ற போது மைதானத்தில் விளையாட்டைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா கொலண்ட் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்.
இச்சம்பவங்களால் பிரான்ஸ்வாழ் மக்கள் பெரும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளனர். முழு ஐரோப்பிய நாடுகளுக்கும் இது அதிர்ச்சியான சம்பவமாகும்.
கடந்த சில மாதங்களாக சிரியா ஆப்கானிஸ்தான் ஈரான் லிபியா உட்பட முஸ்லீம் நாடுகளிலிருந்து 5இலட்சத்திற்கு மேற்பட்ட அகதிகள் ஐரோப்பாவிற்குள் சட்டவிரோத குடியேற்றவாசிகளாக வந்திருந்தனர். அகதிகளுடன் அகதிகளாக பயங்கரவாதிகளும் ஐரோப்பாவிற்குள் நுழைகின்றனர் என லிபிய புலனாய்வாளர்கள் கடந்த இரு மாதங்களுக்கு முதல் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையிலேயே இப்பாரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு அல்லது அவர்களுடன் தொடர்புடைய அமைப்புக்களே நடத்தியிருக்கலாம் என பிரான்ஸ் காவல்துறையினர் நம்புகின்றனர்.
இரட்டைகோபுர தாக்குதலுக்கு பின்னர் மேற்குலக நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.
இந்த வருடம் ஜனவரி மாதம் கேலிச்சித்திர சஞ்சிகையான சார்ள்லி ஹெப்டோ அலுவலகத்தின் மீது முஸ்லீம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18பேர் கொல்லப்பட்டனர். வணிகவளாகத்தில் பெண் பொலிஸார் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இச்சம்பவங்கள் நடந்த இடத்திற்கு அருகிலேயே கடந்த வெள்ளிஇரவு நாடக அரங்கிற்குள் வைத்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளன.
இதேவேளை ஜேர்மன் இத்தாலி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளும் தமது எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளன.
இத்தாக்குதல் முழு ஐரோப்பிய நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதால் எதிர்காலத்தில் அகதிகளை உள்வாங்குவதில் மிகக்கடுமையான போக்கை கடைப்பிடிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.