இலங்கைப் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடைபெறும் விளையாட்டுப்போட்டிகளில் தேசிய மட்டத்துக்கு தெரிவான மாணவர்களை தேவிபுரம் அ.த.க.பாடசாலை சிறப்பித்துள்ளது.
கடந்த 2015-09-29 ம் நாள் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய மட்டத்துக்குத்தெரிவான 7 மாணவர்கள் சிறப்பிக்கப்பட்டதோடு இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக முல்லைத்தீவு மாவட்டத்தின் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.
இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட தேவிபுரம் அ.த.க.பாடசாலையில் கடந்த 2015-09-29 அன்று தேசிய மட்டத்திற்குத்தெரிவான அப்பாடசாலையைச்சேர்ந்த 7 மாணவர்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்
பாடசாலை முதல்வர் திரு.சற்குணசீலன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக மதிப்புக்குரிய வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் அவர்கள் கலந்துகொண்டதோடு நிகழ்வின் சிறப்புவிருந்தினர்களாக முல்லைக்கல்வி வலய தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் திருவாளர் பீதாம்பரம் ஐயா அவர்களும் விளையாட்டு ஆலோசகர் திருவாளர் மைக்கல் திலகராசா அவர்களும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்கள், தகுதிவாய்ந்த பயிற்சியாளர்களால் பயிற்றுவிக்கப்பட்டு முறையான கடின பயிற்சிகள் மூலம் இந்நிலையை எட்டியிருக்கும் மாணவர்களுக்கும் வெற்றிக்கு உழைத்த பயிற்றுவிப்பாளர்களுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்ததோடு தொடர்ந்தும் தேசியமட்டத்திலும் எம்முல்லைமண் அடையாளப்படுத்தப்படட்டும் என்றும் தெரிவித்தார்
விருந்தினர்கள் பாடசாலை ஆசிரிய மாணவர்கள் மற்றும் பெற்றோர் கிராமமக்கள் எனப்பலரும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.