யாழ்.மறை மாவட்டத்தின் எட்டாவது ஆயராக அருட்கலாநிதி அருட்தந்தை ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் அடிகளார் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்ஸிஸ் அருட் தந்தையினால் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்.ஆயர் இல்லத்தில் நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக பதவி அறிவிக்கப்பட்ட நிலையில் யாழ்.மரியன்னை பேராலய மணிகள் ஒலிக்கப்பட்டு பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கத்தோலிக்க அருட்தந்தையர்கள் கலந்துகொண்டனர்.
யாழ்.மறை மாவட்ட ஆயராக 1992ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை 23 ஆண்டுகள் வரை பணியாற்றிய அருட்தந்தை தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை திருச்சபைச் சட்டப்படி தனது 75ஆவது வயதில் 2013ஆம் ஆண்டு தன் பணி ஓய்வு விண்ணப்பத்தை ரோமாபுரிக்கு அனுப்பி வைத்திருந்த நிலையில் மேற்படி விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட பாப்பரசர் பிரான்சிஸ் யாழ்.மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருட்தந்தை ஜஸ்ரின் பேனாட் அடிகளாரை நியமித்துள்ளார்.
அருட்தந்தை ஜஸ்ரின் பேனாட் அடிகளார் 1948ஆம் ஆண்டு ஊர்காவற்றுறை புனித மரியன்னை ஆலயப் பங்கில் பிறந்துள்ளார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி மற்றும் யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியில் பெற்றுள்ளார்.
அடிகளார் 2007 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை யாழ். மறைமாவட்டத்தின் குரு முதல்வராகப் பணியாற்றியுள்ளார். அத்துடன் 2008ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு காலப் பகுதி வரை கத்தோலிக்க அச்சக அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.
குருத்துவப் பணியில் 40 ஆண்டுகளை 2014ஆம் ஆண்டு நிறைவு செய்துள்ள அடிகளார், தனது பணிக்காலத்தின் 31 ஆண்டுகளை கல்விப் பணியில் குறிப்பாக இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியிலும் புனித பத்திரிசியார் கல்லூரியிலும் சேவையாற்றி 2001ஆம் ஆண்டு கல்விப் பணியை நிறைவு செய்திருந்தார்.
இங்கிலாந்தில் கலாநிதிப் பட்டத்தையும் முதுகலை மாணிப் பட்டத்தையும் பெற்ற அடிகளார் இலங்கை அதிபர் சேவையில் வகுப்பு I தரத்தைப் பெற்று அரச பாடசாலைகளின் கொத்தணி அதிபராகப் பணியாற்றியுள்ளார்.
யாழ்.பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராக 1998ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை பணியாற்றி இவர் 1982 முதல் 1984வரை யாழ்.பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத் துறையில் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
யாழ்.மறைமாவட்ட ஆணைக்குழுவின் தலைவராக 1992– 2002ஆம் ஆண்டு காலப் பகுதியில் பணியாற்றிய அடிகளார் 1992 – 2006 வரை புனித சவேரியார் குருத்துவக் கல்லூரி மெய்யியல் துறையில் கல்வியியல் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.