போரின்போது மாத்திரமின்றி போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் வடக்கில் பனைவளம் அழிக்கப்படும் நடவடிக்கை தொடர்ச்சியாகவும் பரவலாகவும் முன்னெடுக்கப்படுகிறது. இது தொடர்பில் மீள் மரநடுகை திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதில்லை என்று பலரும் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். வடக்கின் தனித்துவமான அடையாளமாக பனைவளம் விளங்குகிறது. இதேவேளை பனை வளத்தை நம்பி வாழும் பல குடும்பங்கள் வடக்கில் வசித்து வருகின்றனர். கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தின்போது பனை மரங்கள் பெரியளவில் அழிக்கப்பட்டன. இதனால் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தீவகத்திலும் பனை வளம் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருவதாகவும் அங்கு தொடர்ந்து பனை வளத்தை பாதுகாக்கும் வகையில் மர மீள் நடுகை திட்டம் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தீவகத்தைப் பொறுத்தவரையில் யுத்த காலத்தில் தமது தேவைக்காக இராணுவத்தினர் பெருமளவான பனைமரங்களை அழித்துள்ளதுடன் தொடர்ந்தும் தனிநபர் பயன்பாட்டுக்காகவென்று பனைமரங்கள் அழிக்கபட்டு வருவது தொடர்கின்றது.
தீவகத்தில் பலர் சட்டவிரோதமாக பனைகளைத் தறித்து வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும் குற்றம் சுமத்தப்படுள்ளது. தீவக வீதி அகலிப்புக்காக அல்லைப்பிட்டி முதல் ஊர்காவற்துறை வரை சுமார் 20 கிலோமீற்றர் வீதியில் பல நூற்றுக்கணக்கான பனைகள் அழிக்கப்பட்டுள்ளன.
தீவகத்தைப் பொறுத்தவரையில் பனைவளத்தை ஆதாரமாக கொண்டு பல குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் -இப்படி தொடர்ந்து பனைமரங்கள் அழிக்கப்பட்டு வருவதனால் அவர்களின் வாழ்வாதாரம் எதிர்காலம் பாதிக்கப்படும்-என்றுசுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் அதன்பொருட்டு மீள் மர நடுகையை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.