இராமநாதபுரம்,வட்டக்கச்சி மக்கள் ஒன்றியம், பரிஸில் 04.10.2015 ஞாயிறு மாலை நடத்திய 11வது ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக,வருகைதந்து கலந்து கொண்ட-தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்-இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சிறிதரன் அவர்களைச் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்ட- அல்லையூர் இணையத்தின் இயக்குநர் -ஒரு கோரிக்கை ஒன்றினையும் முன் வைத்தார்.
நீண்ட காலமாக முழுமையான புனரமைப்பு செய்யப்படாமல் கிடக்கும்-மண்டைதீவு,அல்லைப்பிட்டி ஆகிய இரு கிராமங்களையும் இணைக்கும்-பரவைகடல் ஊடான வீதியினை, வாகனப் போக்குவரத்திற்கு ஏற்றவகையில்-முழுமையாகப் புனரமைத்து தர ஆவண செய்ய வேண்டும் என்ற கோரிக்கையே அல்லையூர் இணையத்தின் இயக்குநரால் முன் வைக்கப்பட்டதாகும்.
தேர்தலுக்கு முன் இப்பகுதிக்குச் சென்று இவ்வீதியின் நிலையினை தாம் பார்வையிட்டதாகவும்- இவ்வீதியினை விரைந்து புனரமைப்பதற்கு தன்னாலான முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்வதாகவும் திரு சிவஞானம் சிறிதரன் அவர்கள் தெரிவித்தார்.
எமது இணையத்தில் முன்னர் பதிவு செய்திருந்த இவ்வீதி சம்மந்தமான செய்தியினையும் கீழே இணைத்துள்ளோம்.
அல்லைப்பிட்டி மண்டைதீவு மக்களை ரத்த உறவு முறைகள் இணைத்து வைத்திருக்கின்ற போதிலும்-இக்கிராமங்கள் இரண்டினையும் இணைக்கின்ற பரவைக்கடல் ஊடான வீதி பல தலைமுறைகளாக திருத்தப்படாமல் குண்டும் குளியுமாக பிரிந்து கிடக்கின்றது என்று இக்கிராம மக்கள் தொடர்ந்து கவலை வெளியிட்டு வருகின்றனர்.
பல தடவைகள் இவ்வீதியில் கிடந்த பள்ளங்கள் ஊரி போட்டு நிரவப்பட்ட போதிலும்-அடுத்து வந்த மாரிமழையில் ஊரி முழுவதும் நீரினால் அடித்துச் செல்லப்பட்டு மறுபடியும் குண்டும் குளியுமாக காட்சி தருகின்றதாம்.
இவ்வீதியினால் சைக்கிளில் கூட பயணிக்க முடியாத நிலையே இன்று வரை காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
சில தினங்களுக்கு முன்னர் மண்டைதீவுக்கு வருகைதந்து பொதுவைத்தியசாலையினை திறந்து வைத்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் இந்த வீதியின் புனரமைப்பு பற்றி சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
யாரு வந்தாலென்ன?யாரு போனாலென்ன?
எங்கள் அப்புவும் ஆச்சியும் வாழ்ந்த காலத்திலிருந்தே இந்த வீதி இப்படித்தான் கிடக்கிறதாம்.
யாராவது கருணை காட்டுவார்களா???
மண்டைதீவு வைத்தியசாலை வீதியை புனரமைத்து தாருங்கள்;வடக்கு மாகாண சபையினரிடம் கோரிக்கை –
அல்லைப்பிட்டி மற்றும் மண்டைதீவு மக்களிற்கு சேவையினை வழங்கி வரும் மண்டைதீவு பிரதேச வைத்தியசாலை வீதியினை விரைவில் புனரமைத்துத் தருமாறு யாழ். மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி கேதீஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மண்டைதீவு பிரதேச வைத்தியசாலை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன், சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரினால் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் தலைமையுரையாற்றிய சுகாதார வைத்திய அதிகாரி கேதீஸ்வரன் தனது தலைமையுரையில் குறித்த கோரிக்கையினை முன்வைத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1954 ஆம் ஆண்டு கட்டடப்பட்ட வைத்தியசாலையில் மகப்பேற்று விடுதியுட்பட அனைத்து பகுதிகளும் ஒருங்கே நிறைந்து இருந்தது. எனினும் கடந்த கால யுத்தத்தினால் சேதமடைந்திருந்தது. இன்று 60 வருடங்களின் பின்னர் மீண்டும் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
எனினும் மக்களது நலனைக் கருத்திற் கொண்டு கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னரே சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் குறித்த வைத்தியசாலைக்கு வரவேண்டும் எனின் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
அதில் முக்கியமானது வீதியாகும். குறித்த வீதியானது அல்லைப்பிட்டி மற்றும் மண்டைதீவு மக்களது பயன்பாட்டிற்கு உரியது. எனினும் மோசமான நிலையில் உள்ளதால் நோயாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான குறித்த வீதியை விரைவில் புனரமைத்துத் தர வடக்கு மாகாண சபை முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.