நான் சார்ந்திருக்கும் அரச வேலையின்படி தேர்தல் பற்றிப் பேச முடியாது. ஆயினும் தேர்தல் சுவாரசியங்கள் சிலவற்றை பகிர்ந்துகொள்ளாவிடின் எனக்கும் நித்திரை வராது.
.
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் (கிளிநொச்சி மாவட்டத்தையும் சேர்த்து) ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 15 அரசியல் கட்சிகளும் 06 சுயேச்சைக் குழுக்களும் களத்தில் இறங்கியுள்ளன. அதாவது 210 பேர் போட்டியில் நிற்கின்றனர்.
.
இலங்கையில் தற்போதுள்ள தேர்தல் முறைமை கட்சி விசுவாசத்தை வளர்ப்பதை விட தனிப்பட்டவர்களின் சுயநலத்தையே வளர்த்துவிடுகின்றது. இதனால் ஒரே கட்சிக்குள்ளேயே அவருக்குப் போடாதே இவருக்கும் எனக்கும் போடு என்று கூறும் போக்கு அதிகரித்துள்ளது. அதாவது சுயநலத்தை இன்னும் ஆழமாக வளர்த்து விட்டிருக்கின்றது.
.
தேடிய தேட்டங்களை – கடவுள் விருப்பு வாக்கு வடிவில் கரைத்துவிடுவார் போல எனக்குப்படுகின்றது.
.
எத்தனையோ விதமாகச் சம்பாதித்த செல்வத்தை (அது என்ன என்ன வழி என்று நான் சொல்ல மாட்டேன்) விருப்பு வாக்குக் கேட்பதில் வேட்பாளர்கள் கரைத்து வருகின்றனர். இல்லை இல்லை. மற்றவர்களுக்குக் கொடுத்து வருகின்றனர்.
.
தோற்பேன் என்று தெரிந்தும் இராவணன் போர்க்களம் போனது போல் தோற்பேன் என்று தெரிந்தும் விருப்பு வாக்கு விளம்பரங்களைத் தாராளமாகப் பிரசுரிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பிரபலமான முக்கிய பத்திரிகைகள் இரண்டினது விளம்பரக் கட்டணத்தை அறிந்தபோதுதான் எனக்குள் இந்த எண்ணம் தோன்றியது.
.
முன்பக்கத்தில் கலர் (சிறிய விளம்பரம்) முப்பத்தையாயிரம் ரூபா. உள்பக்கம் கறுப்பு வெள்ளை அறுபதாயிரம் கலர் எனின் ஒரு லட்சம் (பத்து வீத கழிவும் உண்டாம்)
.
யாழ்ப்பாணத்தில் இருந்து உதயமாகும் மற்றைய பத்திரிகையில் முழுப்பக்கம் கலர் இரண்டு லட்சம் கறுப்பு வெள்ளை ஒன்றரை லட்சம்.
.
இதில் அதிமுக்கியம் என்னவென்றால் கட்டணம் முழுமையாகச் செலுத்தப்படவேண்டுமாம்.
.
இதேவேளை கலர் போஸ்டர்கள் அச்சிட ஒரு போஸ்டருக்கு பன்னிரண்டு ரூபா வரை செலவாகின்றது எனவும் ஒரு நோட்டீசுக்கு இரண்டு ரூபா வரை செலவாகின்றது எனவும் (ஆயிரம் அச்சடித்தால்) அச்சக வட்டாரங்கள் கூறின.
.
இதைவிடக் கூடநின்று போஸ்டர் ஒட்டுபவர் உதவி ஒத்தாசை புரிபவர்களுக்கு சம்பளம் மற்றும் புரியாணி, கொத்துறொட்டிச் சாப்பாடு என ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாவுக்கு மேல் செலவு போகின்றதாம்.
.
இது உள்ளுர் மட்ட பிரசாரகர்களின் செலவு. தேசிய ஊடகங்களுக்குப் போனால் செலவு இரண்டு மூன்று மடங்காகிவிடும்.
.
நிலைமை இவ்வாறு இருக்க நேற்று பாண் வாங்குவதற்கு பேக்கரிக்குப் போனேன். எலக்சன் பாட்டு கடைக்கும் கேட்டுக்கொண்டிருந்தது. பேக்கரி முதலாளி என்னிடம் வெட்கத்தை விட்டுக் கேட்டார். மாஸ்டர் எப்ப எலக்சன்? இன்று ஊரில் உள்ள லோன்றிக்குப் போனேன். அங்கும் அந்த மனுசன் இதே கேள்வியைத் தான் என்னிடம் கேட்டார்.
.
இதுதான் மக்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றமோ?
