பொதுத் தேர்தலில் தமிழ் தேசியம்?ஆச்சரியமும் ஏக்கமும் கலந்த பார்வையுடன் வடக்கு வாழ் தமிழ் மக்கள்!

பொதுத் தேர்தலில் தமிழ் தேசியம்?ஆச்சரியமும் ஏக்கமும் கலந்த பார்வையுடன் வடக்கு வாழ் தமிழ் மக்கள்!

இம்முறை பொதுத்தேர்தலில் வடக்கின் களநிலவரம் தமிழ் மக்கள் முற்றிலும் எதிர்பார்த்திராத ஒரு சூழலை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. இறுதிப்போருக்கு பின்னரான 5 தேர்தல்களில் அரசுடன் பங்காளிக்கட்சி என்ற நிலையில் ஈபிடிபியும் அவ்வாறே அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வடக்கின் தமிழ் சூழலில் தம்மை தடம்பதித்திருந்தன.

ஆனால் இம்முறை இந்த தேர்தல் களம் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து கொண்டு சற்று விரிவடைந்திருப்பதாக தெரிகிறது. தாயகம், தேசியம், சுயநிர்ணயத்தை கோஷமாக கையில் எடுத்துக்கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி இம்முறை தேர்தலுக்காக தன்னை அடையாளப்படுத்தியிருக்கிறது.

போர் அவலங்களின் பேரால் தேசியத்தை முன்நிறுத்துவதன் மூலம் தனது வாக்கு வங்கியை இதுவரை காலமும் நிலைநிறுத்தி வந்த தமிழ் கூட்டமைப்புக்கு சவாலாக இப்போது இந்த முன்னணி தன்னை அடையாளப்படுத்தி இருப்பதாக தெரிகிறது.

தமக்கான வாக்கு வங்கியை எதிர்பார்த்து இனப்பிரச்சினைக்கான தீர்வுகளை திட்டமிட்டே தமிழ் கூட்டமைப்பு தவிர்த்து வந்தாகவும் இப்போது தனது இருப்புக்கு வசதியாக மைத்திரி அரசுடன் தன்னை பொருத்திக்கொண்டுள்ளதாகவும் இது ஒரு சந்தர்ப்பவாத அரசியலெனவும் அக்கட்சி தெரிவித்திருக்கிறது.

இதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதையாவது பெற்றுக்கொடுப்போம் என்கிற ஒரு பொய்யான நம்பிக்கையை தமிழ் மக்களுக்கு கொடுக்க தமிழரசுக்கட்சியினர் முயல்வதாகவும் அக்கட்சி குற்றம் சாட்டியிருக்கிறது. இதனிடையே, மூத்த பத்திரிகையாளராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டுள்ள வித்தியாதரன் முன்னாள் போராளிகளை முன்நிறுத்தி மேற்கொள்ளும் அரசியல் பிரவேசத்துக்கு கட்சியில் இடமளிக்க தமிழரசுக்கட்சி மறுத்திருப்பது புலிகள் சார்பு புலம்பெயர் அரசியல் வட்டாரங்களில் தமிழ் கூட்டமைப்பை நோக்கி சாதகமற்ற ஒரு பார்வைக்கு வழியை ஏற்படுத்தி இருப்பதாகவே அவதானிகள் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

கூடவே இம்முறை பொதுத்தேர்தலில் வட மாகாண சபை உறுப்பினர் அனந்திக்கு இடமளிக்க தமிழரசுக் கட்சி மறுத்திருப்பதும் புலிகள் சார்பு தமிழ் தேசிய ஆதரவாளர்களின் தமிழ் கூட்டமைப்புக்கான வாக்குகளில் சரிவை ஏற்படுத்தலாமென்பதாகவும் அபிப்பிராயங்கள் வெளியாகி இருக்கின்றன. தனது கணவனை மீட்டுத்தரக்கோரி நாட்டுக்கு உள்ளேயும் வெளி§யும் அனந்தி ஏற்கனவே பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் எழிலன் இறுதிப்போரில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து வெளியேற முற்பட்ட மக்கள் மீது நிகழ்த்திய தாக்குதல்கள் குறித்து இணையத்தளங்களில் வெளியான செய்திகள் குறிப்பாக தமிழரசுக் கட்சியை சற்று பாதித்திருப்பதாகவே தெரிகிறது.

தமது பங்காளிகளாக இருக்கும் போராளிக்கட்சிகளையும் அதன் உறுப்பினர்களையும் உள்ளார்ந்த ரீதியாக தீண்டத் தகாதவர்களாகவே நோக்கும் தமிழரசுக் கட்சிக்கு அனந்தியின் கணவர் குறித்து வெளியான செய்திகள் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். அதுமட்டுமன்றி தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவராக அனந்தியை நிறுத்தும்பட்சத்தில் அக்கட்சி சார்பில் ஏற்கனவே உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் இடம் பறிபோய்விடும் என்கிற அச்சமும் ஆதங்கமும் தமிழரசு கட்சி தலைமையிடம் தற்போது எழுந்திருப்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

தமிழரசுக் கட்சியின் இந்த மனப்பாங்குதான் தமிழ் கூட்டமைப்பில் தனக்கான இடத்தை மறுதலித்திருப்பதாக அனந்தியே அண்மையில் குறிப்பிட்டிருந்தார். நிற்க, வடக்கின் இன்னொரு தளத்தில் தமிழ் கூட்டமைப்புக்கு எதிராக தம்மை நிலைநிறுத்திக்கொள்ள முனையும் பிராந்திய கட்சிகள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையில் தேர்தல் கூட்டொன்றை அமைக்க மேற்கொண்ட முயற்சிகள் இன்னும் ஒரு முடிவுக்கு வரமுடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிகிறது.

இந்த தேர்தல் கூட்டு தன்னை முறையாக நிலைநிறுத்திக்கொள்ளுமாயின் தமிழ் கட்சிகளுக்கிடையிலான இணைந்த ஒரு முயற்சி என்ற வகையில் குறிப்பிட்ட ஒரு தொகுதி வாக்குகளுக்கு வாய்ப்புக்கள் காணப்படுகின்ற போதும் இந்த கூட்டுக்குள் தமக்கான இடம் குறித்த சர்ச்சைக்குள் இக்கட்சிகள் சிக்கிக்கொண்டுள்ளன.

இவை அனைத்தும் ஒருபுறமிருக்க, தமிழ் சூழலில் இப்பொதுத்தேர்தல் குறித்த சாதாரண குடிமக்களின் மனோநிலை குறித்த அவதானிப்பில் இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு மகிந்தவை அப்புறப்படுத்த முடிந்ததில் ஏற்பட்ட மனத்திருப்திக்கு அப்பால் பெரிதாக எந்த அரசியல் தரப்பையும் நோக்கி தமிழ் மக்கள் அக்கறை கொண்டிருப்பதை அவதானிக்க முடியவில்லை.

ஆட்சிமாற்றத்தின் பெயரால் மக்களின் வாக்குகளை அபகரித்தவர்கள் அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் தமக்கு எதனையும் பெற்றுத்தரவில்லையென தமிழ் மக்கள் ஆதங்கப்படுவதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டேயாக வேண்டும். புதுவரவுகள் வடக்கின் தேர்தல் களத்துக்காக தம்மை அடையாளப்படுத்தியுள்ள நிலையில் இவர்கள் எமக்கு எதனை பெற்றுத்தருவதாக கூறப்போகிறார்கள் என்கிற ஒரு ஆச்சரியமும் ஏக்கமும் கலந்த பார்வையுடன் தமிழ் மக்கள் இருப்பதையே இந்த பொதுத்தேர்தல் களம் வெளிப்படுத்தி நிற்கிறது.

f-1

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux