இலங்கையின் வடக்கில் குற்றங்களை ஒடுக்க ஒருமாத காலக்கெடு : மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நடவடிக்கை-விபரங்கள் இணைப்பு!

இலங்கையின் வடக்கில் குற்றங்களை ஒடுக்க ஒருமாத காலக்கெடு : மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நடவடிக்கை-விபரங்கள் இணைப்பு!

வடக்கில் இடம்பெறும்  குற்றங்களை ஒடுக்க ஒருமாத காலத்தினுள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பொலிஸ் அதிகாரிகளுக்கு நேற்று அறிவுறுத்தினார்.  

முன்னுரிமை அடிப்படையில்  12 விடயங்களை உடனடியாக செயற்படுத்த வேண்டும்  என்றும் அவர் வலியுறுத்தினார்.    

வீதிகளில் சண்டித்தனம் செய்வோர், ரவுடித்தனத்தில் ஈடுபடுவோர், கோஸ்டிகளாக மோதிக்கொள்பவர்கள், வாள் வெட்டுக்களில் ஈடுபடுபவர்கள் என, பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற அனைத்து நபர்களையும், உடனடியாகக் கைது செய்து நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்துமாறு  உயரதிகாரிகளுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.   

யாழ்ப்பாணத்தில் பல அடாவடித்தன நடவடிக்கைள் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதனால், அனைத்து அடாவடித்தன நடவடிக்கைகளையும் சட்டத்தின் துணைகொண்டு, உடனடியாக ஒழிக்கப்பட வேண்டியது அவசியம் என்பதை அந்த அதிகாரிகளுக்கு நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.   

அதற்காக, வீதிகளில் பெண்கள், மாணவிகளைப் பின்தொடர்ந்து இம்சிப்பவர்கள், சந்திகளில் கூடிநின்று, பெண்களுக்கு தொல்லை கொடுப்பவர்களை, தண்டனை சட்டக் கோவையின் கீழான அலைந்து திரிபவர்களைக் கட்டுப்படுத்தும் சட்டத்தின் கீழ் கைது செய்வதுடன், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும்,பொதுமக்களுக்கு இடையூறு கொடுக்கும் வகையிலும் வீதிகளில் கூடி நின்று அடாவடித்தனம் செய்பவர்களை தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் கைது செய்து நீதவான் நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்துமாறும் நீதிபதி பொலிஸ் உயரதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி அறிவுறுத்தியுள்ளார்.  

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதைப் பழகத்தைத் தூண்டுகின்ற பான் பராக், மதன மோகனம்,லேகியம் போன்ற போதையூட்டுகின்ற சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் வியாபாரிகளை மிகவும் அவதானத்துடன் கண்காணிக்குமாறும், அவர்கள் விற்பனை செய்யும் பொருட்களை இரசாயனப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி, அவசியம் ஏற்படின் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி பொலிசாருக்கு வழிகாட்டியுள்ளார்.   

மாலை 6 மணிக்குப் பின்னர் பெண்கள் வேலைக்கு அனுமதிக்கப்படுவதில்லை. தாதியர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றார்கள். இந்த நிலையில் 6 மணிக்குப் பின்னர் பிரத்தியேக வகுப்புக்களை  நடத்துகின்ற அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்களையும் அழைத்து, உரிய சட்ட ரீதியான விளக்கங்களை வழங்கி,மாலை 6 மணிக்குப் பின்னர் மாணவ மாணவிகளுக்கு பிரத்தியேக வகுப்புக்கள் நடத்துவதைத் தவிர்க்குமாறும், அதனையும் மீறிச் செயற்பட்டு, ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் இடம்பெறுமானால், அதற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்துமாறும் நீதிபதி பொலிஸ் உயரதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.    

யாழ்ப்பானம் நகர்ப்பகுதிகளில் உள்ள மதுபான சாலைகள் நேரம் கெட்ட நேரத்தில் திறந்து, நேரம் பிந்தி பூட்டுவதும்,அடாவடித்தனங்களில் ஈடுபடுபவர்களுக்கு முக்கிய இடமாகவும், முக்கிய காரணமாகவும் இருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி இத்தகைய மதுபான சாலைகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.   

ஆலயங்கள், சமய நிறுவனங்கள் மற்றும் பாடாசலைகளுக்கு அருகில் உரிய அனுமதிபத்திரம் பெற்றுச் செயற்பட்டு வருகின்ற மதுபானசாலைகளின் பெயர்ப்பட்டியல்களையும் விபரங்களையும் திரட்டி, இவற்றுக்கு சட்ட வரம்பு எல்லைகளுக்கு முரணாக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி, பொலிஸ் மா அதிபர் ஊடாக மதுவரி ஆணையகத்திற்கு அனுப்பி, உள்ளக நிர்வாக நடைமுறைகளின் மூலம் சீர் செய்யுமாறும் நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.   

தமிழ் மக்களினதும், தமிழ் சமூகத்தினதும், முக்கியமான விடயங்களான கல்வி, பெண்களின் கௌரவம், மற்றும் அவர்களின் பாதுகாப்பு என்பவற்றைப் பாதிக்கின்ற செயற்பாடுகள் அவர்களின் உணர்வுகளைத் தூண்டி விடுவதாக அமையும். உணர்வுபூர்வமான இந்த விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களைக் கண்காணித்து, அத்தகைய செயற்பாடுகளை முளையிலேயே கிள்ளி எறிவதற்குரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமானால், ஒரு மாத காலத்தில் யாழ்ப்பாணம் அமைதிப் பூங்காவாக மாற்றம் பெறும் என்றும் நீதிபதி இளஞ்செழியன் பொலிஸ் உயரதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியுள்ளார். 

  யாழ்ப்பாணத்தில் சட்டத்தையும் ஒழங்கையும் நிலைநாட்டுவதற்காக எற்கனவே தாங்கள் எடுத்துள்ள சட்ட நடவடிக்கைகள் தடுப்புச் செயற்பாடுகள் பற்றி வடமாகாணம் மற்றும் யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் நீதிபதிக்கு விளக்கமளித்தனர்.   

இதனையடுத்து, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள அனைத்து சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள், பிராந்திய பொலிஸ் அதிகாரிகள், அவர்களுக்குக் கீழ் பணியாற்றுகின்ற பொலிஸ் அதிகாரிகள், தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள், மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு இந்த அறிவுறுத்தல்களையும் வழிகாட்டல்களையும் வழங்கி,இந்த மாவட்டங்களில் சமூக விரோதச் செயற்பாடுகளை ஒரு மாத காலத்தில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று நீதிபதி இளஞ்செழியன் வடமாகாணம் மற்றும் யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

saley

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux