உறவுகளைப் பறிகொடுத்த துயரின் ஆறாம் ஆண்டு  நிறைவு மே 18……

உறவுகளைப் பறிகொடுத்த துயரின் ஆறாம் ஆண்டு நிறைவு மே 18……

இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. தமிழர்களைப் பொறுத்த வரைக்கும் இது சோகத்தின் உச்ச நாள்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவடைந்ததாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. என்றாலும் ஆயிரக்கணக்கான உறவுகளின் உயிர்களைக் காவுகொண்ட நாளாகவே அன்றைய தினத்தை தமிழர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

யுத்தம் முடிவடைந்து இன்றுடன் ஆறு ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன. வழமை போன்று போரில் உயிர் நீத்தோர் நினைவாக அவர்களது ஆத்ம ஈடேற்றத்துக்கான பிரார்த்தனைகளும், நினைவேந்திச் சுட ரேற்றுவதும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் நடைபெற ஏற்பாடாகி இருக்கிறது.

உண்மையில், யுத்தம் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்து இறுதியில் அங்கு நடந்த கொடூரங்களும் சோகங்களும் தமிழர்களின் இதயங்களில் மாறாத ரணங்களாகவே இருக்கின்றன. அன்றைய தினத்தில் இழந்த உறவுகளுக்காக அகம் உருகி உணர்வுகளால் அஞ்சலி செலுத்துவதைத் தவிர வேறு எதனைத்தான் செய்ய முடியும். யுத்தத்தில் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் உயிர்கள் உயிர்கள்தான்.

இவர்களின் ஆத்ம சாந்திக்காக ஒரு நிமிடம் கண்ணீர் சிந்தி சுடரேற்றுவதில் தவறில்லை. இழந்த தமது உறவுகளுக்காக கண்ணீர் சிந்தி அஞ்சலி செய்வதென்பது அந்த மக்களின் உணர்வும் உரிமையும், ஆறுதலுமாகும்.

உயிர் நீத்தோருக்காக ஈமக்கடன் செய்வதும், ஆன்ம ஈடேற்றத்துக்காகப் பிரார்த்தனை செய்வதும், கோயில்களிலும் வீடுகளிலும் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதும் பொது நினைவு கூரல் நிகழ்வுகளை ஏற் பாடு செய்வதும் அந்தந்த மக்களின் உணர்வுகளோடு சம்பந்தப்பட்ட விடயம்.

ஆனால் அரசாங்கத்தின் அறிவிப்பு தமிழ்ப் பிரதேசங்களில் சங்கடமான நிலையை உருவாக்கியிருக்கிறது. ‘உயிர்களை இழந்தவர்களுக்காக யாரும் அஞ்சலி செலுத்துவதற்கோ, சுடரேற்றுவதற்கோ தடையில்லை. ஆனால், புலிகளை நினைவு கூர்ந்து நினைவேந்தல் விழாக்கள் நடத்த அனுமதிக்க முடியாது’ என அரசாங்கம் அறிவித்துள்ளது. புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பாக இருப்பதும் சிலர் அரசியலுக்காக இந்தத் தினத்தைப் பயன்படுத்த முயல்வதும் இதற்குக் காரணமாக இருக்கிறதென அரசு கூறுகிறது. என்றாலும் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தத் தடையில்லை.

பச்சைக்கொடி காட்டியிருப்பது ஓரளவு திருப்தி தரக்கூடியதாக இருக்கிறது.

வடபகுதி மக்கள் இந்தத் தினத்தை துக்கதினமாக அனுஷ்டித்து கண்ணீர் வடிக்கும் போது தென்பகுதியில் படையினர் வெற்றி விழா கொண் டாடுவது கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்து வருகிறது. தென் பகுதி மக்கள் மத்தியில் இது ஒரு மகிழ்ச்சி தினமாக இருந்தாலும் தமிழ் மக்களின் உணர்வுகளைச் சீண்டுவதாகவே இருந்து வருகிறதென்பதை மறுப்பதற்கில்லை.

என்றாலும், இந்த அரசாங்கம் வெற்றி விழாக் கொண்டாட்டத்தை தவிர்ப் பதாக அறிவித்திருக்கும் அதேநேரம், பிரிவினை வாதத்திலிருந்து நாட்டை காத்த தினமாக அனுஷ்டிப்பதற்கு முடிவு செய்துள்ளது. ஆகவே, மீட்சிபெற்ற மகிழ்ச்சி வாரமாக தென்பகுதியும், சோகத்தில் ஆழ்த்தும் வலிசுமந்த வாரமாக வடபகுதியும் இன்றைய தினத்தை நினைவு கூருகின்றன.

யுத்தத்தில் உயிர்நீத்த அப்பாவிகள் என்றாலும் சரி, போராளிகள் என்றாலும் சரி, படை வீரர்கள் என்றாலும் சரி அனைவருமே இந்த நாட்டின் பெரும் சொத்துக்கள் என்பதை எவரும் மறந்து விடக்கூடாது. இழந்த உயிர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவது நமது வாழ் நாள் கடமையாகும்.

அவரவர் மதக்கடமைகளோடு சேர்ந்த நினைவு அஞ்சலி செலுத்தலே வழமையாக (கடந்த 6 ஆண்டுகளாக) முன்னெ டுக்கப்படுகிறது. இந்துக்களைப் பொறுத்த வரைக்கும் ஆலயங்களில் கூடி பிதிர்க்கடன்களை செலுத்துவது ஒரு வாழ்வியல் சடங்காகக் கொள் கின்றனர். அரசியல் காரணங்களைக் கூறி இதனை மறுப்பதும் தடுக்க முனைவதும் மத நம்பிக்கையை மறுதலிப்பதற்குச் சமமானதாகும்.

பல்லின மக்கள் வாழும் இந்த நாட்டில் ஒவ்வொரு இனத்தினதும் பண் பாட்டு உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். அவை மறுக்கப்படுகின்ற போது நல்லிணக்க சூழல் ஏற்படுவதற்கான சாத்தியமே இருக்காது. இதுதான் யதார்த்தம்.

கடந்த அரசாங்கத்தினால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. பிரபல சட்ட வல்லுனர் எச்.ஆர்.டி.சில்வா (அண்மையில் மரணித்துவிட்டார்) தலைமையிலான இந்தக் குழு வெளியிட்ட அறிக்கையில் சில முக்கியமான பரிந்து ரைகளும் இருக்கின்றன. நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டு மானால் இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த தடைவிதிக்கக் கூடாதென்பது இதில் முக்கியமானதாகும்.

உண்மையில் உணர்வுகளோடு சம்பந்தப்பட்ட இதுபோன்ற விடயங்களை சரியாக அணுகாவிட்டால் நல்லிணக்கம் என்பது சாத்தியப்படாமல் போய்விடும். ஒரு தாய் தன்னுடைய மகன் (அல்லது மகள்) விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்தவர் என்பதற்காக அவள் தன்னு டைய மகனை நினைவு கூரமுடியாமல் இருக்க முடியுமா? வீணான சந்தேகங்களையும் வரட்டுக் கெளரவங்களையும் கைவிட்டு தமிழ் மக்களின் உணர்வுகளை சிங்கள மக்களுக்கு நிகராக அரசாங்கம் மதிக்க வேண்டும். இவர்களது உணர்வுகள் மதிக்கப்படாது போனால் நல்லிணக்கம் என்பது இலவுகாத்த கிளியின் கதையாகிவிடும்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தமிழர்களின் உணர்வு களை மதிக்காது காலில் போட்டு மிதித்தது. என்றாலும் அந்தத் தலைமை தூக்கி எறியப்பட்டு இப்போது புதிய நல்லாட்சித் தலைமை உருவா கியிருக்கிறது. நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே இலக்காகக் கொள்ளும் இந்த அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தலை மையில் நல்லிணக்க செயலணியொன்றை உருவாக்கியிருக்கிறது. ஆகவே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி வீண்போய்விடக்கூடாது.

vanni_20091129

Leave a Reply