இந்த அதிர்ச்சிச் சம்பவம் இன்று அதிகாலை ஆறு மணியளவில் கிளிநொச்சி நகரில் இடம்பெற்றுள்ளது. குறித்த தனியார் பேரூந்தில் கொழும்பு வவுனியா போன்ற இடங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு
சென்ற மக்கள் பயணம் செய்துள்ளார்கள்.
வவுனியாவிலிருந்து அதிவேகமாக பேரூந்தை செலுத்தி வந்த சாரதி மக்கள் அஞ்சி வேகத்தை குறைக்கும்படி குறிப்பிட்ட பொழுதும் சாகசங்களை காட்டுவதுபோல பேரூந்தை செலுத்தியிருக்கிறார் என எமது செய்தியாளர் குறிப்பிட்டார். கிளிநொச்சி நகரின் முக்கியமான இடங்களில் வேகத்தை குறைத்த பொழுதும் கரடிப்போக்கு சந்தியை தாண்டிச் சென்ற பொழுது மீளவும் அதிவேகமாக பேரூந்தை செலுத்தியுள்ளார்.
இதனால் சடுதியாக கட்டுப்பாட்டை இழந்த பேரூந்து வீதி முழுவதும் அல்லாடிக் கொண்டு கவிழும் நிலையில் சென்றுள்ளது. பின்னர் வீதியை விட்டு இறங்கி இரண்டு பக்கங்களுக்கும் அபாபய நிலையுடன் பேரூந்து சென்றுள்ளது. இதனை அவதானித்த எதிரில் வந்த சாரதிகள் தங்கள் வாகனங்களை நிறுத்திக் கொண்டனர். காவல்துறையினர் பேரூந்தை நிறுத்தி குறித்த சாரதியையும் நடத்துனரையும் கைது செய்துள்ளனர்.
தெற்கை சேர்ந்த இளம் சாரதியும் நடத்துனரும் கிளிநொச்சி காவல்துறை நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அதிகாலை வேளை என்பதால் குறைவான வாகனங்கள் வீதியால் சென்றதாலும் எதிரில் வந்த வாகனச் சாரதிகளின் அவதானத்தாலும் பாரிய விபத்திலிருந்து மக்கள் தப்பியுள்ளனர். குறித்த பேரூந்தில் குளோபல் தமிழ் செய்திகளின் செய்தியாளர் ஒருவரும் பயணம் செய்துள்ளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.