நேபாளத்தின் சிதைந்து போன எழில் முகம்-சிறப்புக் கட்டுரை இணைப்பு!

நேபாளத்தின் சிதைந்து போன எழில் முகம்-சிறப்புக் கட்டுரை இணைப்பு!

18701_714320248677458_7926541960301161176_n

நேபாளத்தில் பலியானோரின் எண்ணிக்கை நேற்றைய தக வல்களின்படி 3700 ஐத் தாண்டிவிட்டது.

நாட்டின் சிறிய பரப்பளவுடனும் மக்கள் தொகையுடனும் ஒப்பிடும்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை மிக அதிகமென்றே கூறவேண்டியுள்ளது. காயமடைந்தோரின் எண்ணிக்கை நேற்று 6500 ஐத் தாண்டியிருந்தது.

பூகம்பத்தில் கொல்லப்பட்டோரின் உடல்களையும், இடிபாடுகளுக்குள் உயிருடன் அகப்பட்டுக் கொண்டோரையும் மீட்கும் பணி அரைவாசி கூட பூர்த்தியடையாதிருக்கும் இந்நிலையில் பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென்றே அஞ்சப்படுகிறது.

நேபாளத்தில் இப்போது கோடைக் காலம். அந்நாட்டைப் பொறுத்த வரை இப்போதைய காலப் பகுதி மிகவும் ரம்மியமானது. வசந்தகாலம் என்று கூடக் கூறலாம். தூரத்தே தெரிகின்ற மலைத் தொடர்களும், அடிவாரத்தில் காணப் படுகின்ற பசுமை நிறைந்த காடுகளும், மேடும் பள்ளமுமாக இயற்கையாக அமைந்த நிலப்பகுதிகளும் மனதைக் கொள்ளை கொள்ளும்.

10426707_714346065341543_6815930399005779760_n

இவ்வாறான இயற்கையை ரசிப்பதற்கும் விடுமுறையை இனிமையாகக் கழிப்பதற்குமென இக்காலப் பகுதியில் பெருந்தொகையான சுற்றுலாப் பயணிகள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து நேபாளத்துக்கு வருவதுண்டு. பூகம்பம் ஏற்பட்ட தினமான கடந்த சனிக்கிழமை யன்றும் அவ்வாறு தான் சுற்றுலாப் பயணிகள் அங்கு நிறைந்திருந்தனர்.

தலைநகர் கத்மண்டு மற்றும் பிரதானமான சுற்றுலாப் பிரதேசங்களில் நிறைந்திருந்த சுற்றுலாப் பயணிகளில் பலரும் பூகம்பத்தில் பலியாகிப் போனார்கள். நாட்டின் தேசிய வருமானத்தைப் பொறுத்தவரை நேபாள அரசு பாரிய சிக்கலொன்றை இப்போது எதிர்நோக்கியிருக்கிறது.

சுற்றுலாத்துறை மூலம் தான் நேபாளத்துக்கான தேசிய வருமானம் கூடுதலாகக் கிடைக்கிறது. சுற்றுலாத் தலங்களெல்லாம் தரைமட்டமாகிக் கிடப்பதனாலும், சுற்றுலாப் பயணிகள் பலர் பூகம்பத்தில் கொல்லப்பட்டிருப் பதாலும் நாட்டின் தேசிய வருமானம் பெருமளவில் வீழ்ச்சியடையப் போவது உண்மை.

10360338_714318322010984_514843641805254528_n

கத்மண்டு, பக்தாபூர், லலித்பூர் போன்ற இடங்களெல்லாம் பாரம்பரிய மரபுரிமைச் சின்னங்கள் பெருமளவில் அமைந்திருந்த பிரதேசங்களாகும். உலகின் ஒரேயொரு இந்து நாடாகக் குறிப்பிடக் கூடிய நாடு தான் நேபாளம்.

இந்து மதமும் அதனோடு இணைந்த பாரம்பரிய நாகரிகமும் மேலோங்கியிருந்த நாடு அது. பெளத்த மதத்தின் தொல்பொருள் சின்னங்களும் அங்கு ஏராளம். இந்து மத வம்சத்தைச் சேர்ந்த மன்னனின் புதல்வராக புத்தர் பெருமான் அவதரித்த நாடும் அது தான். ஆகவே தான் இந்துப் பாரம்பரியச் சின்னங்கள் மாத்திரமன்றி பெளத்த மதச் சிற்பங்களும், தொல்பொருள் சான்றுகளும் நேபாளத்தின் அதிக இடங்களில் காணப்படுகின்றன.

கத்மண்டு பள்ளத்தாக்கைச் சூழ்ந்து காணப்பட்ட இந்துக் கோயில்கள் அனைத்துமே இப்போது தரைமட்டமாகிப் போய்க் கிடக்கின்றன. கஸ்த மண்டபம், பாஞ்சிடேல் ஆலயம், ஒன்பது அடுக்குகள் கொண்ட பசந்தபூர் தர்பான், தசவதார கோயில், கிருஸ்ணமந்திர் உட்பட பெருமளவு வழிபாட்டுத் தலங்கள் இப்போது வெறும் கற்குவியல்களாகக் காட்சி தருகின்றன. புராதனச் சின்னங்கள் இவ்வாறு அழிந்துபோயிருப்பது நேபாள மக்களுக்கு மாத்திரமன்றி, சுற்றுலாப் பயணிகளுக்கும் வேதனையை ஏற்படுத்தாமல் விடப்போவதில்லை.

பதினாறாம் நூற்றாண்டில் நிர்மாணிக் கப்பட்ட மரச்சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட ஆலயம் கஸ்தமண்டபம் ஆகும். தலைநகர் கத்மண்டுவுக்கு இப் பெயர் வரக் காரணமே கஸ்தமண்டபம்தான்.

அழகும் தொன்மையும் மிகுந்த கஸ்தமண்டபம் பூகம்பத்தில் தரைமட்டமாகிப் போயுள்ளது. “நவீன கட்டடக்கலை இக்காலத்தில் பெருமளவு வளர்ச்சியடைந்துள்ள போதிலும் கஸ்தமண்டபத்தில் காணப்பட்ட மரச்சிற்பங்களை உருவாக்குவது இன்றைய காலத்தில் இயலாத காரியம்” என்கிறார் இந்தியாவின் வரலாற்று ஆய்வாளர் புருஷோத்தம லோசன் சிரேஷ்தா.

இதேபோன்று கத்மண்டு, பக்தாபூர், லலித்பூர் பாரம்பரிய மரபுரிமைச் சிற்பங்களை மீளக்கட்டியெழுப்புவதும் சாத்தியமில்லை. அவையெல்லாம் அக்காலத்தில் வளர்ச்சியுற்றுக் காணப்பட்ட சிற்பக் கலையின் படைப்புகள் என்கிறார் புருஷோத்தம லோசன் சிரேஸ்தா.

இதுபோன்றதொரு பாரம்பரிய சின்னமாகவே கத்மண்டுவில் அமைந்திருந்த தரஹரா கோபுரமும் விளங்கியது. அறுபது அடி உயரமான இக்கோபுரம் 183 வருடங்கள் பழைமை வாய்ந்தது. தரஹரா கோபுரத்தின் மீது ஏறி நின்று பார்த்தால் கத்மண்டு நகரின் அழகை முழுமையாக ரசிக்க முடியும். எண்பது வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பூகம்பத்தில் சேதமடைந்த இக்கோபுரம் மீளமைக்கப்பட்டு அழகாகக் காட்சியளித்தது. சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் குவிகின்ற இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

தரஹரா கோபுரத்தில் சுற்றுலாப் பணிகளின் நிறைந்திருந்த வேளையிலேயே பங்கர பூகம்பம் நேபாளத்தைத் தாக்கியது. தரஹரா கோபுரம் ஒரு சில செக்கன்களுக்குள் துண்டு துண்டாக உடைந்து போய் கற்குவியலாகக் காட்சியளித்தது.

அவ்விடத்தில் மீட்கப்பட்ட 180 உயிரற்ற உடல்கள் சிதைந்து போயிருந்தன. அங்கு கொல்லப்பட்டோரில் பெருமள வானோர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாவர்.

நேபாளத்தைக் தாக்கிய பூகம்பம் சுற்றுலாப் பிரதேசங்களை மாத்திரமன்றி பெருமளவான இந்துக் கோயில்களையும் அழித்து விட்டது. கத்மண்டு, பசந்தபூர் தர்பார் சதுக்கம் போன்ற பகுதிகளில் மாத்திரம் எண்பது வீதமான கோயில்கள் நிர்மூலமாகிப் போயுள்ளன. முன்னைய வடிவமைப்பில் இக்கோயில்களை மீளமைப்பதென்பது எக்காலத்திலும் சாத்தியமாகப் போவதில்லையென நேபாள வரலாற்றுச் சின்னங்களை ஆராய்ந்து வரும் வரலாற்று நிபுணர்கள் கவலைப்படுகின்றனர்.

அடுத்தடுத்து ஏற்பட்ட இரு நிலநடுக்கங்கள்தான் நேபாளத்தை இத்தனை துரம் சின்னாபின்னப்படுத்தியி ருப்பதற்குக் காரணமாகும்.

முதலாவது பூகம்பம் கடந்த சனிக்கிழமை காலை நேபாளத்தைத் தாக்கியது. ரிச்டர் அளவில் இப்பூகம்பம் 7.9 எனப் பதிவாகியது. இப்பூகம்பத்திலேயே நேபாளத்தின் பெருமளவு வீடுகளும் கட்டடங்களும் வரலாற்றுச் சின்னங்களும் அழிந்தொழிந்து போய்விட்டன.

இதன் பிறகு சிறு அளவிலான நில அதிர்வுகள் உணரப்பட்ட போதிலும் மறு நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆறு மணியளவில் தாக்கிய பூகம்பம் ஓரளவு பெரியது. ரிச்டர் அளவில் 6.6 என இப்பூகம்பம் பதிவாகியது.

முதல் நாள் பூகம்பத்தில் சிறு சிறு வெடிப்புகளுடன் எஞ்சியிருந்த கட்டடங்களும் மறுநாள் பூகம்பத்தில் ஆட்டம் கண்டு முற்றாகச் சரிந்து வீழ்ந்து விட்டன. பூகம்பம் இடம்பெறுகின்ற ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டு நோக்குகையில் நேபாளத்தில் கட்டடங்களின் அழிவு அதிகமென்றே கூற வேண்டும். காரணம் நேபாளத்தில் காணப்படுகின்ற தொடர்மாடிகளும் ஏனைய பாரம்பரிய கட்டடங்களும் மிகப் பழமையானவை.

இடிபாடுகளுக்குள் அகப்பட்டுக் கொண்டோரே அதிகளவில் உயிரிழ ந்துள்ளனர்.

கட்டடங்கள் யாவும் கற்குவியல்களாகக் காணப்படுவதைப் பார்க்கும் போது இது நன்கு புரிகிறது. இடிபாடுகள் அகற்றப்படாத இடங்களே ஏராளமமாகக் காணப்படுகின்றன. இடிபாடுகளை அகற்றும் போது பிணக்குவியல்களையே காண முடிவதாக மீட்புப் பணியாளர்கள் கூறுகின்றனர். கடந்த ஞாயிறன்று அதிகாலை ஏற்பட்ட இரண்டாவது பெரிய பூகம்பத்தையடுத்து மக்கள் மத்தியில் அச்சம் மேலும் அதிகரித் திருக்கிறது.

அடுத்த 72 மணித்தியால நேரத்திற்குள் மீண்டும் பூகம்பம் ஏற்படக் கூடிய ஆபத்து உள்ளதென உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதே அச்சத்துக்குக் காரணம். மக்கள் இன்னும் அச்சத்தில் உறைந்தபடிதான் இருக்கிறார்கள். எண்பது வருடங்களுக்கு முன்னர் பாரியதொரு பூகம்பம் நேபாளத்தைத் தாக்கியது. அதன் பிறகு சிறு அளவிலான நில நடுக்கங்களே அங்கு ஏற்பட்டன. எனவே இது போன்றதொரு பேரழிவை அம்மக்கள் இதுவரை சந்தித்ததில்லை.

பூகம்பத்தில் உயிர் தப்பிய மக்கள் அச்சத்தினால் திக்பிரமை பிடித்தவர்கள் போல இருப்பதனால் மீட்புப் பணியை ஒத்துழைப்புடன் முன்னெடுப்பதில் தடங்கல் உள்ளதாக பணியாளர்கள் கூறுகிறார்கள். ஞாயிறன்று மீண்டும் ஏற்பட்ட புவியதிர்வுதான் மீட்புப் பணியைத் தாமதிக்க வைத்துள்ளது.

இது ஒருபுறமிருக்க பூகம்பம் இடம்பெற்றதையடுத்து நேபாளத்தில் காலநிலையும் சீராக இல்லை. நாடெங்கும் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யும் அறிகுறி தென்படுவதாக வானிலை அறிக்கை கூறுகிறது. ஆங்காங்கே மழையும் பெய்துள்ளதனால் விமானத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற மீட்புப் பணிகள் தாமதமடைகின்றன.

பூகம்பம் ஏற்பட்டதும் காத்மண்டு விமான நிலையம் சுமார் நான்கு மணி நேரம் மூடப்பட்டதும் மீட்புப் பணி தாமதத்துக்கு ஒரு காரணம். விமான நிலையம் மூடப்பட்டதனால் இந்தியாவி லிருந்து மீட்புப் பணி விமானங்களால் நேபாளத்துக்குச் செல்ல முடியாதிருந்தது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க அயல் நாடான இந்தியாவிலேயே உயிரிழந்தோரின் எண்ணிக்கை நேற்று வரை அறுபதைத் தாண்டிவிட்டது. எனவே நேபாளத்திற்கு ஏற்பட்ட தாக்கம் எத்தகையதென்பதை இதன் மூலம் ஊகிக்க முடிகிறது. சனிக்கிழமை மாத்திரமன்றி மறுநாளும் இந்தியாவின் வட மாநிலங்களில் பூகம்பத்தின் தாக்கம் பெருமளவில் உணரப்பட்டது.

நேபாளத்தை மையமாகக் கொண்ட பூகம்பம் இந்தியாவின் மேற்கு வங்கம். பீஹார், அஸாம், ஜார்க்கண்ட், ஒடிஸா. உத்தரகாண்ட். பஞ்சாப். ஹரியானா. உத்தரப்பிரதேசம். டில்லி போன்ற இடங்களிலெல்லாம் 30 செக்கன்கள் வரை உணரப்பட்டது. இந்தியாவின் வட மாநிலங்களில் 6.9 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

பீஹாரில் 46 பேரும், உத்தர பிரதேஷில் 13 பேரும், மேற்கு வங்கத்தில் மூவரும், ராஜஸ்தானில் ஒருவரும் பலியானதாக நேற்றைய தகவல்கள் தெரிவித்தன.

அயல் நாடான நேபாளத்துக்கு விரைந்து சென்று முதன் முதலில் உதவக்கூடிய நாடு இந்தியா ஆகும். இந்தியாவின் வட மாநிலங்களையும் நிலநடுக்கம் தாக்கியிருப்பதால் இந்தியாவின் அவசர உதவிகள் தாமதம டைந்ததாகத் தெரிகிறது. எனினும் இந்தியாவின் மீட்புப் பணிகளும் துயர் துடைப்பு உதவிகளும்தான் தற்போது கூடுதலாக உள்ளன.

இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 13 விமானங்கள் மீட்புப் பணிக்கென நேபாளத்துக்கு விரைந்துள்ளன. எயார் இந்தியா விமான சேவை விமானங்களும் அங்கு சென்றுள்ளன.

இந்திய இராணுவ பொறியியல் மீட்புப் பிரிவு, தேசிய பேரிடர் மீட்புக் குழு ஆகியனவும் நேபாளத்துக்குச் சென்றுள்ளன.

இந்தியாவின் பதினேழு ஹெலிகொப் டர்கள் தற்போது நேபாளத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. நேபாளத்தில் தற்போது அகப்பட்டுக் கொண்டுள்ள சுற்றுலாப் பயணிகளில் பெருமளவானோர் இந்தியர்களாவர். இந்தியா மாத்திரமன்றி ஏனைய நாடுகளும் தங்களது நாட்டுப் பயணிகளை மீட்பதில் முயற்சி மேற்கொண்டுள்ளன.

சீனா தனது பிரஜைகள் 683 பேரை மீட்பதற்கு விமானத்தை அனுப்பியுள்ளது. ஜப்பான் தனது பிரஜைகள் 1100 பேரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. நியூஸிலாந்துப் பிரஜைகள் 110 பேரும் நேபாளத்தில் அகப்பட்டுக் கொண்டுள்ளனர்.

நேபாளத்தில் மையம் கொண்ட பூகம்பம் இமயமலையையும் விட்டு வைக்கவில்லை. இமயமலையில் பூகம்பத்தினால் ஏற்பட்ட பனிச்சரிவு எவரெஸ்ட் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த வீரர்களின் முகாமொன்றை முற்றாக மூடிவிட்டது. இம்முகாமில் இருந்த 22 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பலரைக் காணவில்லை.

நேபாளத்தின் இன்றைய நிலைமை உலக நாடுகள் அனைத்தையுமே அனுதாபத்துடன் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்து போயுள்ளனர்.

ஆறாயிரத்துக்கு மேற்பட்டோர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இலட்சக்கணக்கான குடும்பங்கள் வாழிடமின்றி நிர்க்கதிக்குள்ளாகியுள்ளன.

உயிரிழந்தோரின் உடல்கள் மீட்கப்பட்டு முடிப்பதற்கே பல வாரங்கள் செல்லக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. வீடுகளை இழந்த மக்களை நீண்ட காலத்துக்கு பொது இடங்களில் தங்க வைத்துப் பராமரிக்க வேண்டிய தேவை உள்ளது.

அழிந்து போன இல்லங்களையும் கட்டடங்களையும் மீளக் கட்டியெழுப்பு வதென்பது நினைத்துப் பார்க்க முடியாத பெரும் காரியம். இப்பணிகளையெல்லாம் நிறைவேற்றி முடிக்கக் கூடிய பலம் நேபாளத்திடம் இல்லையென்பது உண்மை. நேபாளத்தின் அழகிய முகம் ஓரளவாவது மீண்டும் திரும்ப வேண்டுமானால் உலக நாடுகளின் உதவிதான் தேவை.

10425866_714318342010982_888962102204195563_n

Leave a Reply