தீவகம் வேலணை வங்களாவடிச் சந்தியில் அமைந்துள்ள ஏழு கடைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வியாபாரம் முடிந்த நிலையில் பூட்டப்பட்டிருந்த ஏழு கடைகளே- நள் இரவு உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாகவும்- இத்திருட்டுச் சம்பவத்தின் போது கடையில் இருந்த தொலைபேசிக்குப் பயன்படுத்தப்படும் அட்டைகள் மற்றும் பணம் என்பன எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
வேலணை வங்களாவடிச் சந்தியில் அமைந்துள்ள ரி.எஸ். என்ரப்பிறைஸ் எனும் கடையில் புகுந்த திருடர்கள் 25 தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் மற்றும் 2000 ரூபா பணம் என்பனவற்றையும், அருகில் இருந்த ஜீவா உணவகத்திற்கும் சென்று கைத்தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகளையும் எடுத்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து விதுசன் உணவகம், ஆஞ்சநேயர் பலசரக்குக்கடை, பாற்சாலை, துவாரகன் பான்சி ஹவுஸ், பலசரக்குக் கடை என்பன உடைக்கப்பட்டுள்ளன.
இத்திருட்டுச் சம்பவத்தினை அடுத்து கடை உரிமையாளர்கள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து நேற்றுக் காலை சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்கள் சகிதம் வருகைதந்த பொலிஸார் திருட்டுச் சம்பவத்துடன் ஈடுபட்ட நபரின் மேலங்கி ஒன்றினையும், இத்திருட்டின் போது பயன்படுத்திய டோச்லைற் ஒன்றினையும் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றிய பொருட்களைக் கொண்டு திருட்டுடன் சம்பந்தப்பட்டவர்களை விரைவில் கைது செய்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் அண்மைக்காலமாக வேலணை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நன்றி-தினமுரசு இணையம்