வடக்கில் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் கல்வித் துறையை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப் பாணத்தில் தெரிவித்தார்.
இதற்கிணங்க இரு மாவட் டங்களும் ஒன்றிணைந்த விசேட செயற்திட்டமொன்றை நடை முறைப்படுத்தும் வகையில் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பிக்குமாறு மீள் குடியேற்ற அமைச்சர் டி. எம். சுவாமிநாதனுக்கும் கல்வி இரா ஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ் ணனுக்கும் பணிப்புரை விடுத்தார். இரு அமைச்சுக்களும் இணைந்த கூட்டு அமைச்சரவைப் பத்திரமொன்றை அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்ட பிரதமர் அதன் மூலம் எதிர்வரும் பத்து வருடங்களுக்கு நடைமுறையிலிருக்கும் வகையில் விசேட செயற்திட்டமொன்று வகுக்கப்பட வேண்டும் என்றும் இந்தப் பாடசாலை களுக்கு நியமிக்கப்படும் ஆசிரியர் அதிபர்கள் தொடர்ந்து பத்து வருடங்களுக்கு சேவையிலிருப்பது அவசியம் என்றும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ். மாவட்டச் செயலகத்தில் வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங் களினதும் தேசிய பாடசாலை அதிபர்களுடனான சந்திப்பொன்றை மேற்கொண்டார்.
இதன்போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார். வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த தேசிய பாடசாலை அதிபர்கள் தத்தமது பாடசாலை களில் நிலவும் குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகளைப் பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். அமைச்சர் டி. எம். சுவாமிநாதன், கல்வி இராஜாங்க அமைச்சர், பீ. இராதாகிருஷ்ணன், பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
வடக்கில் கல்வித் துறையில் நிலவும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு சிறந்த கல்வி முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு அதற்கு அனைவரினதும் அர்ப்பணிப்பு மிக அவசியமாகும்.
க. பொ. த. சாதாரண தரப் பரீட்சையில் வடக்கை விட கொழும்பிலேயே சிறந்த பெறுபேறுகள் கிடைக்கின்றன. மலையகம் மற்றும் மொனராகலை போன்ற பிரதேசங்களே முன்னர் கல்வியில் பின்தங்கியிருந்தன. எனினும் தற்போது அப்பிரதேசங்கள் முன்னேற்றம் கண்டு வருகின்றன என்றார்.