ஜரோப்பிய நாடான, ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரிலிருந்து ஜெர்மனியின் டுசுல்டோப் நகருக்கு, 144 பயணிகள் மற்றும் 4 பணியாளர்களுடன், மற்றும் 2 விமானிகளுடன் பறந்து கொண்டிருந்த, ஏர் பஸ் ஏ – 320′ பயணிகள் விமானம் ஜரோப்பிய நேரப்படி,செவ்வாய்க்கிழமை காலை,10:30 மணிக்கு, பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் விழுந்து நொறுங்கியது.
இந்த பயங்கர விபத்தில் ஒருவர் கூட உயிருடன் தப்பியிருக்க வாய்ப்பில்லை,” என, பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்டே, சம்பவம் பற்றி அறிந்த சில நிமிடங்களில் அறிவித்தார்.
அந்த விமானத்திலிருந்து, ‘ஆபத்தில் உள்ளோம்’ என்ற தகவல், பிரான்ஸ் நாட்டின் விமான கட்டுப்பாட்டு நிலையத்திற்கு கிடைத்துள்ளது. அதற்கான காரணங்களை கேட்டறியும் முன், விமானத்துடனான தொடர்பை கட்டுப்பாட்டு மையம் இழந்தது.
ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் பரந்து விரிந்து கிடக்கும், ஆல்ப்ஸ் மலைத் தொடரில், மக்கள் மிகக் குறைவாக வசிக்கும் பிரான்ஸ் நாட்டின் கிராமம் ஒன்றில், விமானம் விழுந்து கிடப்பதை கண்ட பிரான்ஸ் அதிகாரிகள், அந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.
14 ஆயிரம் அடிக்கு இறங்கிய விமானம்:
விபத்துக்குள்ளான அந்த விமானத்தில், 144பயணிகளும், 4 பணியாளர்களும்,2 விமானிகளும் இருந்துள்ளனர்.
குறைந்த கட்டணத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லும், ‘ஜெர்மன்விங்ஸ்’ என்ற ஜெர்மனி நாட்டின், ‘லுப்தான்சா’ விமான நிறுவனத்திற்கு, அந்த விமானம் சொந்தமானது. விமானம் விழுந்து நொறுங்குவதற்கு சில வினாடிகள் முன், 44 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்ததாகவும், அடுத்த ஆறு நிமிடங்களில், 14 ஆயிரம் அடிக்கு திடீரென இறங்கி, உயரிய ஆல்ப்ஸ் மலையில் மோதி நொறுங்கியது என, விமான விபத்துகளை ஆராயும் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
விமானம் நொறுங்கிய, பார்சிலோனெட் என்ற இடம், தரை வழியாக எளிதில் அணுக முடியாதது. இதனால், மீட்புப் பணியில், பிரான்ஸ் நாட்டின் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.