தீவகத்தில் தற்போது பனங்கிழங்குக் காலம் தொடங்கி விட்டது . தீவகத்தில் பெரும்பாலும் எல்லாத் தீவுகளிலும் பனம் கிழங்கை காணக்கூடியதாக இருக்கின்றது. பனங்கிழங்கை விரும்பாத பெரியவர்கள் இல்லை என்றே சொல்லலாம்.மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்த உணவாக பனம் கிழங்கு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பனம் கிழங்கை அவித்து தனியாகவும்சாப்பிடலாம்- அல்லது வெங்காயம் , பச்சை மிளகாய் சேர்த்து துவைத்தும் சாப்பிடலாம் .
தீவகத்தில் பனம் பழங்கள் கிடைக்கும் காலங்களில் விதைகளைச் சேமித்து வைக்கும் மக்கள், உரிய காலத்தில் மண்ணைக் குவித்து மேடை போல அமைத்து, அதன்மேல் பனம் விதைகளைப் பரவி விடுவர். விதை முளைத்துக் கிழங்கு உருவானதும் அதனைக் கிண்டி எடுத்துப் பயன்படுத்துவர்.
பனங்கிழங்கை அவித்து காய வைத்து வரும் புளுக்கொடியல் மாவை காலை உணவாக உண்ணலாம் . அதற்குள் சீனியும் , தேங்காய் பூவும் போட்டுக் குழைத்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும் .
பனங்கிழங்கை அவிக்காது எடுக்கப்படும் ஒடியலில் இருந்து ஒடியல் மா எடுப்பார்கள். ஒடியல் மாவில் இருந்து ஒடியல் பிட்டு, ஒடியல் கூழ் ஆகிய உணவுகள் தயாரிக்கப்படுகிறது. இவை மிகவும் பிரபலமான உணவுகள்.
யாழ் குடாநாட்டில் பொறுத்த மட்டில் தீவகத்திலிருந்தே பனங்கிழங்கு அதிக அளவில் வெளியிடங்களுக்கு வருவதாக தெரிய வருகின்றது.யாழ்ப்பாணத்துக்கு இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் எத்தனையோ பஸ் , வான் என்று வந்து திரும்புகின்றன . அதுவும் தீவுப்பகுதிக்கு கூடுதலான பயணிகள் போய் வருகிறார்கள் . நயினாதீவு நாக விகாரைக்கு அதிகமான சிங்கள மக்கள் வந்து திரும்புகின்றனர் . குறிகட்டுவான் பகுதியில் பனம் கிழங்குகளை அடுக்கி வைத்து வியாபாரிகள் விற்பனை செய்வதனை காணக்கூடியதாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது .