அல்லைப்பிட்டியில் அழிவிலிருந்த சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்தினை புனரமைத்து -மக்களின் வழிபாட்டிற்கு வழி செய்து கொடுப்பதற்காகவும்-பழைமையான ஆலயத்தினை அழிய விடாமல் பாதுகாப்பதற்காகவும்-அல்லைப்பிட்டி மக்களுடன் இணைந்து அல்லையூர் இணையம் மேற் கொண்ட விடாமுயற்சியின் பயனாக-தற்போது ஆலயப்புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்-ஆலயத்திற்கான சுற்றுமதில் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வேகமாக நடைபெற்று வருகின்றது.
பல இலட்சம் ரூபாக்கள் செலவில் ஆலயத்தின் சுற்றுமதிலினை அமைப்பதற்கு -திரு எஸ்.இராஜலிங்கம் (எஸ்.ஆர்)அவர்கள் முன் வந்துள்ளதுடன்-அப்பணியினை உடனே ஆரம்பிப்பதற்குத் தேவையான நிதியினையும் அனுப்பி வைத்ததைத் தொடர்ந்து சுற்றுமதில் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
திரு எஸ்.ஆர் அவர்கள் அறப்பணிக்கும்,ஆலயப்பணிகளுக்கும் தொடர்ந்து உதவிவருவதுடன்-ஊர் மக்களுக்கும் உதவிகளைச் செய்து வருபவர் என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
அல்லையூர் இணையத்தினால் இதுவரை புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் நம்மவர்களிடமிருந்து ஒரு இலட்சத்து ஜம்பது ஆயிரம் ரூபாக்கள் திரட்டப்பட்டு-பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் மூலம் ஆலய நிர்வாகத்தின் பொருளாளரிடம் ஒப்படைக்கப்பட்ட செய்தியினை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.
ஆலய நிர்வாகத்தினரின் வேண்டுகோள்
புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் அல்லைப்பிட்டி மக்கள்-சிந்தாமணிப் பிள்ளையாரின் ஆலய புனரமைப்புக்கும்-எதிர்வரும் ஆவணி மாதமளவில் நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்திற்கும் உதவிட முன்வருமாறு உரிமையோடு அல்லைப்பிட்டி சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திரு எஸ். இராஜலிங்கம் (எஸ்.ஆர்)அவர்களைப் பற்றி…..
அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள இரண்டாவது ஆலயத்திற்கு சுற்றுமதில் அமைத்து வருகின்றார் திரு எஸ்.ஆர் அவர்கள்
அல்லைப்பிட்டி மூன்றுமுடி அம்மன் ஆலயத்திற்கு ஏற்கனவே சுற்றுமதில் அமைத்துக் கொடுத்துள்ளார்.
அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலயத்தின் பெருநாள் விழாவிற்கு கடந்த சில வருடங்களாக-அல்லையூர் இணையத்தின் ஊாடாக 250 ஈரோக்களை வழங்கி வருகின்றார்.
இதைவிட உதவி என்று நாடி வந்த பலபேருக்கு தொடர்ந்து உதவி வருபர். இன்னும் பல இவரின் அறப்பணிகள் பற்றிச் சொல்லலாம்-ஆனால் நாம் காக்கா பிடிக்கின்றோம் என்று நீங்கள் நினைத்து விட்டால்……இதோ அதற்கும் ஒரு விளக்கம் தந்து முடித்து விடுகின்றோம்.
வசதி படைத்தவர்கள் எல்லோரிடமும் உதவிட வேண்டும் என்ற நல்ல மனம் இருப்பதில்லை-
நல்ல மனம் இருப்பவர்களிடம் உதவிட வசதி இருப்பதில்ல-ஆனால்
நல்ல வசதியும்-மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்ற நல்ல மனமும் -அபூர்வமாக சிலரிடம் தான் இருப்பதுண்டு-அந்தச் சிலரில் ஒருவராகவே திரு எஸ்.ஆர் அவர்களை நாம் பார்க்கின்றோம்.